Shiva Temples of Tamilnadu

தேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்


தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

வேதபுரீஸ்வரர் கோவில், திருவேற்காடு

தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்திருவேற்காடு
இறைவன் பெயர்வேதபுரீஸ்வரர், வேற்காட்டீசர்
இறைவி பெயர்பாலாம்பிகை, வேற்கண்ணி அம்மை
பதிகம்திருஞானசம்பந்தர் - 1
எப்படிப் போவது சென்னை - பூவிருந்தமல்லி பிரதான சாலையில் சுமார் 17 கி.மி. பயணம் செய்து வேலப்பன் சாவடி என்ற இடம் அடைந்து, பிறகு வலது புறம் பிரியும் ஒரு கிளைச்சாலை வழியாக சுமார் 3 கி.மி. சென்றால் இந்த சிவஸ்தலத்தை அடையலாம். சென்னை நகரின் பல பகுதிகளிலிருந்தும் திருவேற்காடு செல்வதற்கு பேருந்து வசதிகள் உள்ளன. திருவேற்காடு பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 1 கி.மி. தொலைவில் ஆலயம் உள்ளது.
ஆலய முகவரி அருள்மிகு வேதபுரீஸ்வரர் திருக்கோவில்
திருவேற்காடு அஞ்சல்
திருவள்ளூர் மாவட்டம்
PIN - 600077

இவ்வாலயம் காலை 6-30 மணி முதல் இரவு 8-30 மணி வரையிலும் தரிசனத்திற்காக திறந்திருக்கும்.

கோவில் விபரம்: திருவேற்காடு என்றதும் அநேகருக்கு அங்குள்ள தேவி கருமாரி அம்மன் ஆலயம் தான் நினைவிற்கு வரும். ஆனால் அதே திருவேற்காட்டில் பாடல் பெற்ற சிவஸ்தலமான வேதபுரீசுவரர் ஆலயம் இருப்பது பலருக்கு தெரிந்திருக்காது. தேவி கருமாரி அம்மன் ஆலயத்திலிருந்து சுமார் 1 கி.மி தொலவில் உள்ள சிவாலயத்திற்குச் செல்ல நல்ல சாலை வசதி உள்ளது. நான்கு வேதங்களும் வேல மரங்களாய் நின்று இறைவனை இஙகு வழிபட்டதால் இத்தலம் வேற்காடு என்று பெயர் பெற்றது.

கிழக்கு நோக்கி உள்ள ஆலய முகப்பு கோபுரம் ஐந்து நிலைகளை உடையதாகும். கிழக்கு கோபுர வாயில் வழியாக உள்ளே துழைந்தவுடன் உள்ள விசாலமான வெளிப் பிரகாரத்தில் கொடிமரம், பலிபீடம், நந்தி மண்டபம் ஆகியவற்றைக் காணலாம்.

அவற்றின் பின் உள்ள 2-வது வாயில் மூலமாக உள்ளே சென்றவுடன் நேர் எதிரே மூலவர் வேதபுரீஸ்வரர் லிங்க உருவில் கிழக்கு நோக்கி அருட்காட்சி தருகிறார். லிங்க உருவின் பின்புறம் சுவற்றில் சிவன் பார்வதி திருமணக் காட்சி புடைப்பு சிற்பமாக காணபாடுகிறது. அகத்திய முனிவருக்கு சிவபெருமான் திருமணக் கோல காட்சி கொடுத்த தலங்களில் திருவேற்காடும் ஒன்று. ஆலய உட்பிரகாரத்தின் இடது புறம் அகத்தியர் மற்றும் சூரியன் திருமேனிகள் காட்சி தருகின்றன. தெற்கு உட்பிரகாரத்தில் நால்வர் சந்நிதி மற்றும் 63 நாயன்மார்களின் உருவச் சிலைகளைக் காணலாம். மேற்கு உட்பிரகாரத்தில் காசி விஸ்வநாதர், விசாலாட்சி, அநபாயச் சோழன் ஆகியோரின் உருவச் சிலைகளைக் காணலாம். வடக்குப் பிரகாரத்தில் தெற்கு நோக்கிய இறைவி பாலாம்பிகை சந்நிதி உள்ளது. மேலும் உட்பிரகாரத்தில் சண்டிகேஸ்வரர், கணபதி, தட்சினாமூர்த்தி, பிரம்மா மற்றும் துர்க்கை ஆகியோர் கோஷ்ட தெய்வங்களாக காணப்படுகின்றனர். கிழக்கு வெளிப் பிரகாரத்தில் வலதுபுறம் மேற்கு நோக்கிய சனீஸ்வர பகவான் தனி சந்நிதி இருக்கிறது. ஆலய கோபுர வாயில் வழியாக உள்ளே நுழைந்தவுடன் வலதுபுறத்தில் இந்த சனீஸ்வரன் சந்நிதி உள்ளது. அதன் அருகில் மூர்க்க நாயனாரும் தனி சந்நிதியில் காட்சி தருகிறார். இத்தலத்திலுள்ள முருகன் தன் கையில் வேல் இல்லாமல் வில்லும் அம்பும் ஏந்தியவாறு ஒரு காலை மயிலின் மீது வைத்துக்கொண்டு நின்றபடி பக்தர்களுக்கு காட்சி தருகிறார். இந்த ஆலயத்தின் தல விருட்சம் வெள் வேல மரம். தீர்த்தம் வேலாயுத தீர்த்தம்.

புராணச் செய்தி: இத்தலம் முருகப் பெருமானின் வாழ்க்கையோடு சம்பந்தம் உடையதாகும். பிரணவத்திற்கு பொருள் கூற முடியாத பிரம்மாவை முருகப் பெருமான் கைது செய்துவிட்டார். அதனால் படைப்புத் தொழில் தடைபட்டது. சிவபெருமான் நந்தியை முருகனிடம் அனுப்பி பிரம்மாவை விடுதலை செய்யும்படி கூறச் செய்தார். ஆனால் முருகன் அதற்கு சம்மதிக்கவில்லை. இதைத் தெரிந்து கொண்ட சிவபெருமான் தானே நேரில் வந்து முருகனிடம் பிரம்மாவின் படைப்புத் தொழில் தடைபடுவதால் ஏற்படும் சிக்கல்களை விளக்கி பிரம்மாவை சிறையிலிருந்து விடுதலை செய்தார். நந்தி மூலம் சொல்லி அனுப்பியும் தன் சொல்லிறகு கட்டுப் படாத முருகனை தண்டிக்கும் பொருட்டு திருவேற்காட்டிற்குச் சென்று அங்கு தன்னை வழிபட்டு வரும்படி ஆணையிட்டார். அதன்படி முருகனும் திருவேற்காடு வந்து ஒரு தீர்த்தம் ஏற்படுத்தி சிவனை வழிபட்டார். கருவறை மேற்குப் பிரகாரத்தில் உள்ள முருகன் சந்நிதியில் முருகனுக்கு முன்னால் ஒரு சிவலிங்கம் இருப்பதைக் காணலாம். இத்தகைய அமைப்பை வேறு எங்கும் காண முடியாது. முருகன் ஏற்படுத்திய தீர்த்தம் வேலாயுத தீர்த்தம் என்ற பெயரில் ஆலயத்தின் உள்ளே இருக்கிறது. இத்தலத்திலுள்ள முருகப்பெருமான் அருணகிரிநாதரால் திருப்புகழில் பாடப் பெற்றுள்ளார். திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது 2 பாடல்கள் உள்ளன.

இத்தலத்தில் உள்ள நவக்கிரக சந்நிதி பத்ம பீடத்தில் எண்கோண வடிவில் அமைந்துள்ளது சிறப்பிற்குரியது. இத்தலம் நவக்கிரக தோஷங்கள் நீங்குவதற்குரிய ஒரு பரிகாரத் தலமாகும்.

இத்தலத்தில் பராசர முனிவர் இறைவனை வழிபட்டுள்ளார். இம்முனிவர் ஜோதிட சாஸ்திரத்தில் மிகவும் புலமை பெற்றவர். எனவே ஜோதிடம் சொல்வதை தொழிலாகக் கொண்டவர்கள், ஜோதிடத்தில் புலமை பெற விரும்பவர்கள், ஜோதிடம் கற்க விரும்புவர்கள் ஆகியோர் இத்தல இறைவனை வழிபடுதல் நன்மை தரும்.

மூர்க்க நாயானார்: 63 நாயன்மார்களில் ஒருவரான மூர்க்க நாயானார் பிறந்து, வாழ்ந்த தலம் திருவேற்காடு. இவர் சிவனடியார்களுக்கு உணவு கொடுத்து வரும் சிவத்தொண்டைத் செய்து வந்தார். நாளடைவில் இவரின் செல்வம் யாவும் இவரின் இந்த சிவத்தொண்டில் கரைந்துவிட, சூதாட்டத்தில் ஈடுபட்டு அதன் மூலம் வரும் செல்வத்தை சிவனடியார்களுக்கு உணவிட செலவு செய்து தனது திருத்தொண்டை தொடர்ந்து நடத்தினார்.

இத்தலத்தில் அகத்திய முனிவர் வழிபட்டு சிவபெருமானின் திருமண திருக்கோலத்தைக் கண்டதால், இத்தலம் ஒரு திருமண தடை நீங்கும் தலமாக விளங்குகிறது. மேலும் இத்தலம் நவக்கிரக தோஷம் தீக்கும் தலமாகவும் உள்ளது. ஆதிசேஷனும் இத்தல இறைவனை வழிபட்டுள்ளதால். இத்தலத்தில் அரவம் தீண்டி யாரும் மரிப்பதில்லை என்று தல புராணம் விவரிக்கிறது.

சம்பந்தர் இயற்றியுள்ள இத்தலத்திற்கான இப்பதிகம் முதலாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது

1. ஒள்ளிது உள்ளக் கதிக்கு ஆம் இவன் ஒளி
வெள்ளியான் உறை வேற்காடு
உள்ளியார் உயர்ந்தார் இவ்வுலகினில்
தெள்ளியார் அவர் தேவரே.
 
2. ஆடல் நாகம் அசைத்து அளவில்லாது ஓர்
வேடங் கொண்டவன் வேற்காடு
பாடியும் பணிந்தார் இவ்வுலகினில்
சேடர் ஆகிய செல்வரே. 
 
3. பூதம் பாடப் புறங்காட்டு இடை ஆடி
வேத வித்தகன் வேற்காடு
போதும் சாந்தும் புகையும் கொடுத்தவர்க்கு
ஏதம் எய்துதல் இல்லையே.

4. ஆழ்கடல் எனக் கங்கை கரந்தவன்
வீழ்சடையினன் வேற்காடு
தாழ்வு உடை மனத்தால் பணிந்து ஏத்திட
பாழ்படும் அவர் பாவமே. 

5. காட்டினாலும் அயர்த்திடக் காலனை
வீட்டினான் உறை வேற்காடு
பாட்டினாறல் பணிந்து ஏத்திட வல்லவர்
ஓட்டினார் வினை ஒல்லையே.

6. தோலினால் உடை மேவ வல்லான் சுடர்
வேலினான் உறை வேற்காடு
நூலினால் பணிந்து ஏத்திட வல்லவர்
மாலினார் வினை மாயுமே. 

7. மல்லல் மும்மதில் மாய்தர எய்ததோர்
வில்லினான் உறை வேற்காடு
சொல்ல வல்ல சுருங்கா மனத்தவர்
செல்ல வல்லவர் தீர்க்கமே. 

8. மூரல் வெண்மதி சூடும் முடியுடை
வீரன் மேவிய வேற்காடு
வாரமாய் வழிபாடு நினைந்து அவர்
சேர்வர் செய் கழல் திண்ணமே. 

9. பரக்கினார் படு வெண்தலையில் பலி
விரக்கினான் உறை வேற்காட்டூர்
அரக்கன் ஆண்மை அடரப்பட்டான் இறை
நெருக்கினானை நினைமினே. 

10. மாறிலா மலரானொடு மாலவன்
வேறு அலான் உறை வேற்காடு
ஈறு இலா மொழியே மொழியா எழில்
கூறினார்க்கு இல்லை குற்றமே.
 
11. விண்ட மாம்பொழில் சூழ் திருவேற்காடு
கண்டு நம்பன் கழல்பேணிச்
சண்பை ஞானசம்பந்தன செந்தமிழ்
கொண்டு பாடக் குணமாமே.

கருவறை கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி


முருகன் சந்நிதியில் முருகனுக்கு முன்னால் சிவலிங்கம்


கிழக்கு வெளிப் பிரகாரத்தில் கொடிமரம்


கிழக்கு வெளிப் பிரகாரம் - மற்றொரு தோற்றம்


கொடிமரம், பலிபீடம், நந்தி மண்டபம்


வேதபுரீஸ்வரர் சந்நிதி


மேற்கு உட்பிரகாரத்தில் காசி விஸ்வநாதர், விசாலாட்சி, அநபாய சோழன்


மேற்கு உட்பிரகாரம்


தெற்கு வெளிப் பிரகாரம்

சென்னை நகரிலும் அதன் அருகிலும் உள்ள மற்ற பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்
திருவொற்றியூர்
திருவலிதாயம்
திருமுல்லைவாயில்
திருமயிலை
திருவான்மியூர்

Copyright © 2004 - 2019 - www.shivatemples.com - All rights reserved