Shiva Temples of Tamilnadu

தேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்


தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

விருந்திட்ட ஈஸ்வரர் கோவில், திருக்கச்சூர் ஆலக்கோவில்

தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்திருக்கச்சூர் ஆலக்கோவில்
இறைவன் பெயர்கச்சபேஸ்வரர், விருந்திட்ட ஈஸ்வரர்
இறைவி பெயர்அஞ்சனாட்சி, கன்னி உமையாள்
பதிகம்சுந்தரர் - 1
எப்படிப் போவது சென்னை எழும்பூர் - செங்கல்பட்டு ரயில் மார்க்கத்தில் உள்ள சிங்கபெருமாள் கோவில் ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 2 கி.மி. தொலைவில் இந்த சிவஸ்தலம் உள்ளது. சென்னை - செங்கல்பட்டு தேசீய நெடுஞ்சாலையில் சிங்கப்பெருமாள்கோவில் சென்று அங்கிருந்து ஸ்ரீபெரும்புதூர் செல்லும் சாலையில் திரும்பி ரயில்வே கேட் தாண்டி சுமாராக 1 கி.மி. தூரம் சென்ற பின் வலதுபுறம் பிரியும் சாலையில் மேலும் 1 கி.மி. தூரம் சென்றால் திருக்கச்சூர் ஆலயத்தை அடையலாம். ஊரின் நடுவே கோவில் உள்ளது. சிங்கப்பெருமாள்கோவில் பேருந்து நிறுத்தத்தில் இருந்து ஆட்டோ மூலம் செல்வது நல்லது. இல்லாவிடில் சுமார் 2 கி.மி. தொலைவு நடந்து செல்ல வேண்டும்.
ஆலய முகவரி அருள்மிகு விருந்திட்ட ஈஸ்வரர் திருக்கோவில்
திருக்கச்சூர் அஞ்சல்
வழி சிங்கபெருமாள் கோவில்
செங்கல்பட்டு வட்டம்
காஞ்சீபுரம் மாவட்டம்
PIN - 603204

இவ்வாலயம் காலை 8 மணி முதல் நண்பகல் 11.30 மணி வரையிலும், மாலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

தல புராணம்: அமிர்தம் கிடைப்பதற்காக தேவர்களும், அசுரர்களும் பாற்கடலை கடைந்தார்கள். மந்தார மலையை மத்தாக்கி, வாசுகி பாம்பைக் கயிறாக்கி பாற்கடலைக் கடையும் சமயத்தில் மந்தார மலை கனம் தாங்காமல் மூழ்கத் தொடங்கியது. அது கடலில் மூழ்காமல் இருக்க திருமால் ஆமை (கச்சபம்) வடிவெடுத்து மந்தார மலையின் அடியில் சென்று மலையை தாங்கி நின்றார். திருமால் இவ்வாறு ஆமை உருவில் மலையின் கனத்தைத் தாங்கக்கூடிய ஆற்றலைப் பெற இத்தலத்திற்கு வந்து சிவபெருமானை வழிபட்டதாக வரலாறு கூறுகிறது. ஆமை (கச்சபம்) வடிவத்தில் மஹாவிஷ்னு சிவபெருமானை வழிபட்டதால் இத்தலம் திருக்கச்சூர் என்று பெயர் பெற்றது.. இத்தலம் ஆதிகச்சபேஸம் என்று அழைக்கப்படுகிறது. இத்தலத்தில் உள்ள கூர்ம தீர்த்தத்தில் நீராடி பிரதோஷ நாட்களில் கச்சபேஸ்வரரை வணங்கினால் எல்லா தோஷங்களும் நீங்கும். செல்வம், கல்வி, இன்பம் கிடைக்கும் என்று தல புராணம் கூறுகிறது.

சிவபெருமான் சுந்தரருக்காக தனது கையில் திருவோடு ஏந்தி பிச்சை எடுத்து சுந்தரரின் பசியைப் போக்கிய தலம் என்ற பெருமையும் திருக்கச்சூருக்கு உண்டு. இத்தலத்திற்கு வந்த சுந்தரர் ஆலயத்தினுள் சென்று சிவபெருமானை பக்தியுடன் வழிபட்டு வெளி வந்தார். வெகு தொலைவில் இருந்து திருக்கச்சூர் வந்த காரணத்தினால் களைப்பும் அதனுடன் பசியும் சேர்ந்து தள்ளாடியபடி கோவிலின் வெளியே உள்ள மண்டபத்தில் படுத்து கண்களை மூடுகிறார். சுந்தரரின் நிலையைக் கண்ட இறைவன் கச்சபேஸ்வரர் ஓர் அந்தணர் உருவில் சுந்தரரின் தோளைத் தட்டி எழுப்புகிறார். அவரை உட்காரச் சொல்லி வாழையிலை விரித்து அன்னம் பரிமாறி குடிக்க நீரும் கொடுக்கிறார். அன்னம் பலவித வண்ணங்களுடனும் பலவகை சுவையுடனும் இருப்பதைக் கண்ட சுந்தரர் காரணம் கேட்கிறார். சமைத்து உணவு கொண்டுவர நேரம் இல்லாததால் பல வீடுகளுக்குச் சென்று பிச்சை வாங்கிவந்து உண்வு கொடுத்ததாக அந்தணர் சொல்கிறார். அந்தணர் செயலில் நெகிழ்ந்து போன சுந்தரர் எதிரே உள்ள குளத்திற்குச் சென்று கைகளைக் கழுவிக் கொண்டு திரும்பி வந்து பார்த்தால் அந்தணர் மாயமாய் மறந்து போயிருக்கக் கண்டார். இறைவனே தனக்காக திருக்கச்சூர் வீதிகளில் தனது திருவடிகள் பதிய நடந்து சென்று பிச்சையெடுத்து அன்னமிட்டதை நினைத்து இறைவனின் கருணையைக் கண்டு மனம் உருகினார் சுந்தரர்.

கோவில் அமைப்பு: திருக்கச்சூர் தலம் ஆலக்கோவில் என்ற பெயருடனும் அழைக்கப்படுகிறது. இவ்வாலயத்தின் மூலவர் கச்சபேஸ்வர்ர். இருந்தாலும் இவ்வாலயம் தியாகராஜசுவாமி திருக்கோவில் என்றே அழைக்கப்படுகிறது. தொண்டை நாட்டிலுள்ள பாடல் பெற்ற சிவஸ்தலங்களில் தியாகராஜர் சந்நிதி உள்ள கோவில்களில் இத்தலக் கோவிலும் ஒன்றாகும். கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ள இந்த ஆலயத்திற்கு கோபுரமில்லை. கோவிலுக்கு எதிரில் ஒரு பெரிய குளம் இருக்கிறது. இது கூர்ம தீர்த்தம் என்று வழங்கப்படுகிறது. திருமால் கூர்மாவதாரம் எடுத்தபோது இக்குளத்தை உண்டு பண்ணியதாகக் கருதப்படுகிறது. இக்குளத்திற்கு அருகில் தான் சுந்தரர் பசிக் களைப்பால் படுத்திருந்த 16 கால் மண்டபம் இருக்கிறது. மண்டபத் தூணகளில் அழகிய சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

கிழக்கிலுள்ள நுழைவாயில் வழியாக உள்ளே சென்றவுடன் கிழக்கு வெளிப் பிரகாரத்தில் கொடிமரம், நந்தி, பலிபீடம் ஆகியவை அமைந்துள்ளன. தெற்கு வெளிப் பிரகாரத்தில் 27 தூண்களை உடைய நட்சத்திர மண்டபம் உள்ளது. நட்சத்திர மண்டபத்தைக் கடந்து நேரே சென்றால் தியாகராஜர் சந்நிதி உள்ளது. இவர் உபயவிடங்கர் எனப்படுகிறார். மகாவிஷ்ணுவிறகு இத்தலத்தில் இறைவன் தனது நடனத்தைக் காட்டி அருளியுள்ளார். நட்சத்திர மண்டபத்தில் உள்ள ஒரு தூணில் ஆமை உருவில் மகாவிஷ்ணு சிவலிங்கத்தை வழிபடும் சிற்பம் ஒன்று உள்ளது.

மண்டபத்தில் உள்ள தெற்கு வாயில் வழியே உள்ளே சென்றால் இறைவி அஞ்சனாட்சியின் சந்நிதி உள்ளது. நான்கு திருக்கரங்களுடன் நின்ற நிலையில் அம்பாள் அருள்பாலிக்கிறாள். வலம் வருவதற்கு வசதியாக அம்மன் சந்நிதி ஒரு தனிக கோவிலாகவே உள்ளது. அம்பாள் சந்நிதி முன் உள்ள மண்டபத்திதிருந்து மற்றொரு கிழக்கு நோக்கிய வாயில் வழியாக உள்ளே சென்றால் கருவறையில் கிழக்கு நோக்கிய சந்நிதியில் இறைவன் கச்சபேஸ்வரர் காட்சி தருகிறார். திருமாலுக்கு அருளிய இவர் ஓர் சுயம்பு லிங்கமாவார். கருவறை அகழி போன்ற அமைப்பு கொண்டது. கருவறை சுற்றில் தென்கிழக்கில் வடக்கு நோக்கிய நால்வர் சந்நிதியைக் காணலாம். கருவறை சுற்று வலம் வரும்போது வடக்குச் சுற்றின் வடகிழக்கு மூலையில் நடராஜர் சந்நிதி அமைந்துள்ளது. கருவறை கோஷ்ட மூர்த்திகளாக விநாயகர், தட்சினாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். வடக்கு வெளிப் பிரகாரத்தில் கிழக்கு நோக்கிய முருகன் சந்நிதியும், விருந்திட்ட ஈஸ்வரர் சந்நிதியும் அமைந்திருக்கின்றன. விருந்திட்ட ஈஸ்வரர் சந்நிதிக்கு அருகே வடக்கு நோக்கிய சுந்தரர் சந்நிதியும் அமைந்துள்ளது. வடக்கு வெளிப் பிரகாரத்தில் தெற்கு நோக்கிய பைரவர் சந்நிதியும் இருக்கிறது. இத்தலத்திலுள்ள இந்த பைரவர் சந்நிதி மிகவும் சிறப்பு வாய்ந்தது.

இத்தலம் ஒரு திருப்புகழ் வைப்புத் தலம். இஙுகு முருகப் பெருமான் ஒரு முகமும், நான்கு திருக்கரங்களும் கொண்டு இரு தேவியருடன் எழுந்தருளியுள்ளார்.

இத்தல விருட்சமான ஆலமரம் மக நட்சத்திரத்திற்குரிய மரமாகும், ஆகவே மக நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இத்தல இறைவனை வழிபடுவது மிகவும் விசேஷமானதாகும்.

திருக்கச்சூர் கோவிலின் இணைக்கோவிலான மலைக்கோவில் ஆலக்கோவிலில் இருந்து சுமார் 1 கி.மி. தொலைவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் குடிகொண்டிருக்கும் இறைவன் மருந்தீஸ்வரர் என்றும் இறைவி இருள்நீக்கிய அம்மை என்றும் அழைக்கப்படுகின்றனர்.


சுந்தரர் இயற்றிய இத்தலத்திற்கான இப்பதிகம் 7-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது.

1. முதுவாய் ஓரி கதற முதுகாட்டு
எரி கொண்டு ஆடல் முயல்வானே
மதுவார் கொன்றைப் புதுவீ சூடும்
மலையான் மகள்தன் மணவாளா
கதுவாய்த் தலையிற் பலி நீ கொள்ளக்
கண்டால் அடியார் கவலாரே
அதுவே ஆமாறு இதுவோ கச்சூர்
ஆலக் கோயில் அம்மானே.

2. கச்சு ஏர் அரவு ஒன்று அரையில் அசைத்துக்
கழலுஞ் சிலம்புங் கலிக்கப் பலிக்கு என்று
உச்சம் போதா ஊர்ஊர் திரியக்
கண்டால் அடியார் உருகாரே
இச்சை அறியோம் எங்கள் பெருமான்
ஏழேழ் பிறப்பும் எனையாள்வாய்
அச்சம் இல்லாக் கச்சூர் வடபால்
ஆலக் கோயில் அம்மானே.

3. சாலக் கோயில் உள நின் கோயில்
அவை என் தலைமேற் கொண்டாடி
மாலைத் தீர்ந்தேன் வினையும் துரந்தேன்
வானோர் அறியா நெறியானே
கோலக் கோயில் குறையாக் கோயில்
குளிர்பூங் கச்சூர் வடபாலை
ஆலக் கோயிற் கல்லால் நிழல்கீழ்
அறங்கள் உரைத்த அம்மானே.

4. விடையும் கொடியும் சடையும் உடையாய்
மின் நேர் உருவத்து ஒளியானே
கடையும் புடைசூழ் மணி மண்டபமும்
கன்னி மாடம் கலந்து எங்கும்
புடையும் பொழிலும் புனலும் தழுவிப்
பூமேல் திருமாமகள் புல்கி
அடையும் கழனிப் பழனக் கச்சூர்
ஆலக் கோயில் அம்மானே.

5. மேலை விதியே வினையின் பயனே
விரவார் புரம்மூன்று எரிசெய்தாய்
காலை எழுந்து தொழுவார் தங்கள்
கவலை களைவாய் கறைக்கண்டா
மாலை மதியே மலைமேல் மருந்தே
மறவேன் அடியேன் வயல் சூழ்ந்த
ஆலைக் கழனிப் பழனக் கச்சூர்
ஆலக் கோயில் அம்மானே.

6. பிறவாய் இறவாய் பேணாய் மூவாய்
பெற்றம் ஏறிப் பேய் சூழ்தல்
துறவாய் மறவாய் சுடுகாடு என்றும்
இடமாக் கொண்டு நடமாடி
ஒறுவாய்த் தலையில் பலி நீ கொள்ளக்
கண்டால் அடியார் உருகாரே
அறவே ஒழியாய் கச்சூர் வடபால்
ஆலக் கோயில் அம்மானே.

7. பொய்யே உன்னைப் புகழ்வார் புகழ்ந்தால்
அதுவும் பொருளாக் கொள்வானே
மெய்யே எங்கள் பெருமான் உன்னை
நினைவார் அவரை நினைகண்டாய்
மையார் தடங்கண் மங்கை பங்கா
கங்கார் மதியஞ் சடைவைத்த
ஐயா செய்யாய் வெளியாய் கச்சூர்
ஆலக் கோயில் அம்மானே.

8. ஊனைப் பெருக்கி உன்னை நினையாது
ஒழிந்தேன் செடியேன் உணர்வு இல்லேன்
கானக் கொன்றை கமழ மலரும்
கடிநாறு உடையாய் கச்சூராய்
மானைப் புரையும் மடமென்னோக்கி
மடவாள் அஞ்ச மறைத்திட்ட
ஆனைத் தோலாய் ஞானக் கண்ணாய்
ஆலக் கோயில் அம்மானே.

9. காதல் செய்து களித்துப் பிதற்றிக்
கடிமாமலர் இட்டு உனை ஏத்தி
ஆதல் செய்யும் அடியார் இருக்க
ஐயம் கொள்வது அழகிதே
ஓதக் கண்டேன் உன்னை மறவேன்
உமையாள் கணவா எனை ஆள்வாய்
ஆதற் பழனக் கழனிக் கச்சூர்
ஆலக் கோயில் அம்மானே.

10. அன்னம் மன்னும் வயல்சூழ் கச்சூர்
ஆலக்கோயில் அம்மானை
உன்ன முன்னும் மனத்து ஆரூரன்
ஆரூரன் பேர் முடிவைத்த
மன்னு புலவன் வயல் நாவலர்கோன்
செஞ்சொல் நாவன் வன்தொண்டன்
பன்னும தமிழ்நூல் மாலை வல்லார்
அவரெந் தலைமேல் பயில்வாரே.
திருக்கச்சூர் கச்சபேஸ்வரர் ஆலயம் புகைப்படங்கள்

கிழக்கு நுழை வாயில்

கிழக்கு வெளிப் பிரகாரத்தில் கொடிமரம், பலிபீடம், நந்தி

தெற்கு வெளிப் பிரகாரம்

வேதவிநாயகர் சந்நிதி

வள்ளி, தெய்வானையுடன் முருகர்

விருந்திட்ட ஈஸ்வரர் சந்நிதி

நால்வர் சந்நிதி


கருவறைச் சுற்றில் நடராஜர்

நட்சத்திர மண்டபம்

அம்பாள், சுவாமி சந்நிதிகளை உள்ளடக்கிய மதில் சுவற்றில் ஆலயத்தின் பெயர்

கச்சப உருவில் மகாவிஷ்ணு சிவனை பூஜித்தல் - சுதைச் சிற்பம்

கிழக்கு நுழைவு வாயில் முன் உள்ள ஆலய தீர்த்தம்