Shiva Temples of Tamilnadu

தேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்


தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

சந்திரசேகரர் கோவில், திருவக்கரை

தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்திருவக்கரை
இறைவன் பெயர்சந்திரசேகரர்
இறைவி பெயர்வடிவாம்பிகை
பதிகம்திருஞானசம்பந்தர் - 1
எப்படிப் போவது திண்டிவனத்திலிருந்து மயிலம், வானூர் வழியாகப் பாண்டிச்சேரி செல்லும் பாதையில் சென்று பெரும்பாக்கம் என்ற் ஊரை அடைந்து அங்கிருந்து பிரிந்து செல்லும் கிளைப் பாதையில் 7 கி.மீ. சென்றால் திருவக்கரையை அடையலாம். திண்டிவனத்திலிருந்து சுமார் 32 கி.மி. தொலைவில் உள்ளது. விழுப்புரத்திலிருந்தும் திருவக்கரை செல்லலாம். விழுப்புரத்திலிருந்து 30 கி.மீ. தொலைவிலுள்ள திருவக்கரைக்கு நகரப்பேருந்து வசதி உள்ளது.
ஆலய முகவரி அருள்மிகு சந்திரசேகரர் வக்ரகாளியம்மன் திருக்கோவில்
திருவக்கரை
வானூர் வட்டம்
விழுப்புரம் மாவட்டம்
PIN - 604304

இவ்வாலயம் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் தொடர்ந்து தரிசனத்திற்காக திறந்திருக்கும்.
Tiruvakkarai route map

திண்டிவனம் பேருந்து நிலையத்தில் இருந்து
திருவக்கரை செல்லும் வழி வரைபடம்
Map courtesy by: Google Maps

வராக நதிக்கரையில் ஒரு சிறிய மலையின் அடிவாரத்தில் இவ்வாலயம் கிழக்கு நோக்கிய 7 நிலை இராஜகோபுரத்துடனும், மூன்று பிராகாரங்களும் கொண்டு அமைந்துள்ளது. கோபுர வாயிலைக் கடந்தவுடன் வலதுபுறம் வடக்கு நோக்கிய அஷ்டபுஜகாளி கோவில் உள்ளது. வக்கிராசுரனை இத்தலத்தில் மகாவிஷ்ணு போரிட்டு அழித்தார். அவ்வாறு அழித்த போது வக்கிராசுரனின் உடலில் இருந்து குருதி நிலத்தில் படிந்தது. கீழே சிந்திய இரத்தத்தில் இருந்து மீண்டும் அசுரர்கள் தோன்றினார்கள். அவ்வாறு அசிரர்கள் மீண்டும் தோன்றாதபடி அக்குருதியைக் காளி தன் வாயால் உறிஞ்சினாள். வக்கிராசுரன் தங்கை துன்முகி போரிட வந்தபோது அவளை அஷ்டபுஜகாளி அழித்தாள். துன்முகி அழிந்த போது அவள் கருவுற்று இருந்ததால், அவள் வயிற்றிலுள்ள குழந்தையை காளி தன் காதில் குண்டலமாக அணிந்து கொண்டாள்.

அஷடபுஜகாளியின் சந்நிதி முகப்பில் நான்கு பாலகியர் உருவங்கள் உள்ளன. காளியின் திருவுருவம் மிக்க அழகுடையது. வக்கரையில் உள்ள காளியாதலின் வக்கரைக்காளி என்றும் அழைக்கப்படுகிறாள். தீவினைகள் அகல, குழந்தைப் பேறு பெற, நல்ல மணவாழ்க்கை அமைய, மங்கலங்கள் பெருக, மக்கள் நம்பிக்கையுடன், வக்ரகாளியை தரிசிக்க வந்த வண்ணம் இருக்கிறார்கள். முழுநிலவு நாளில் அம்மனுக்கு விசேஷ பூஜைகள் நடைபெறுகின்றன. சிவன் கோவிலாக வந்து வழிபடுபவர்களை விட, இக்கோவிலின் வக்ரகாளியை வழிபட வரும் பக்தர்களே அதிகம். காளியின் சந்நிதிக்கு எதிரில் வக்ராசுரன் பூசித்த மேற்கு நோக்கிய வக்கிர லிங்கம் உள்ளது. காளி சந்நிதியைக் கடந்து நேரே சென்றால் வலதுபுறம் சிங்கமுகத் தூண்கள் அமைந்த கல் மண்டபம் உள்ளது. அதையடுத்துள்ள அடுத்துள்ள மூன்று நிலைகளையுடைய கோபுரம் கிளிக்கோபுரம் என்றழைக்கப்படுகிறது. இந்த கோபுரத்திற்கு எதிரில் பெரித கல்லால் ஆன நந்தி உள்ளது. கோபுரத்திற்கு இடதுபறம் விநாயகர் சந்நிதி இருக்கிறது.

2வது கோபுரம் வழியே உள் நுழைந்து உள்பிராகாரத்தில் குண்டலி மாமுனிவர் சந்நிதியும், முனிவரின் சமாதியின் மீது சிவலிங்கம் உள்ளதயும் காணலாம். இதற்குக் கோஷ்டமூர்த்தமாக தட்சிணாமூர்த்தி, திருமால், வரதராஜப் பெருமாள் உள்ளனர். எதிரில் கருடாழ்வார் உள்ளார். சஹஸ்ரலிங்கம் உள்ளது. வலமாக வந்து படிகளேறி மூலவரைத் தரிசிக்கச் செல்ல வேண்டும். துவார பாலகர்கள் இருபுறமும் இருக்கின்றனர். உள்சுற்றில் நால்வர் சந்நிதி உள்ளது. கோஷ்ட மூர்த்தங்களாக தட்சிணாமூர்த்தி, விநாயகர், ஆறுமுகர், துர்க்கை ஆகியோர் உள்ளனர். சண்டேசுவரர் எதிரில் உள்ளார். பின்னால் சுவர் ஓரமாகப் பிரம்மா, அர்த்தநாரீஸ்வரர், பைரவர் சிலாரூபங்கள் வரிசையாக உள்ளன. சதுரஅடிப்பாகத்தின் மீதமைந்த வட்டமான ஆவுடையாரில் உள்ள மூலவர் அழகிய திருமேனி மும்முகத்துடன் விளங்குகிறது

Tiruvakkarai route map

விழுப்புரம் பேருந்து நிலையத்தில் இருந்து திருவக்கரை
செல்லும் வழி வரைபடம்
Map courtesy by: Google Maps

சிவலிங்கத்தின் பாணப் பகுதியில் கிழக்கு, தெற்கு, வடக்கு ஆகிய மூன்று பக்கங்களிலும் முகம் கொண்ட லிங்கம் மும்முக லிங்கம் அனப்படும். இந்த முகங்களில் கிழக்கில் உள்ளது தத்புருஷ முகம், தெற்கில் உள்ளது அகோர முகம், வடக்கில் உள்ளது வாமதேவ முகம் என்று சொல்லப்படும். மூன்று முகங்களை உடைய இத்தகைய லிங்கத்தை பிரம்மா, விஷ்னு, ருத்ரன் ஆகியோரின் முகங்களை உடைய லிங்கம் என்று கூறுவர். இத்தகைய திருமூர்த்தி லிங்கம் கோவில் கருவறையில் உள்ள சிறப்பைப் பெற்ற தலம் திருவக்கரை ஆகும்.

வக்கிராசுரனை அழித்த திருமால் இவ்வாலயத்தின் 2வது பிராகாரத்தில் மேற்கு நோக்கியவாறு நின்ற கோலத்தில் வரதராஜப்பெருமாள் என்ற பெயருடன் கையில் பிரயோக சக்கரத்துடன் நின்ற நிலையில் காட்சி அளிக்கிறார். அத்தகைய சிறப்பை இக்கோவிலில் மட்டுமே காணலாம்.

வக்கிரன் வழிபட்டதால் இத்தலம் வக்கரை என்று பெயர் பெற்றது. மேலும் இத்தலத்தில் பல அமைப்புகள் வக்கிரமாகவே உள்ளது. இத்தலத்திலுள்ள நடராஜர் கால் மாறியாடும் திருக்கோலத்தில் காட்சி தருகின்றார். தூக்கிய திருவடி இடுப்புக்கு மேல் வரை வந்துள்ளது. இவ்வமைப்பை வக்கிரதாண்டவம் என்று குறிப்பிடுகின்றனர். மற்ற ஆலயங்களில் உள்ளது போல் இல்லாமல் மூலவர் சந்நிதி, கொடிமரம், நந்தி ஆகியவை நேர்கோட்டில் அமையாமல் சற்று விலகி இருக்கின்றன. நவக்கிரக சந்நிதியிலும் சனிபகவானின் வாகனமாகிய காகம் வழக்கத்திற்கு மாறாகத் தென்புறம் நோக்கியுள்ளது.

திருவக்கரை சந்திரசேகரர் ஆலயம் புகைப்படங்கள்


7 நிலை இராஜகோபுரம்


சிங்கத்தூண் கல் மண்டபம்


3 நிலை 2வது கோபுரம்


3 நிலை கோபுரத்திற்கு முன் நந்தி மண்டபம்


ஆலயம் உட்புறத் தோற்றம்


வள்ளி தெய்வானையுடன் முருகர்


நவக்கிரக சந்நிதி


வடிவாம்பிகை அம்மன் சந்நிதி


கிழக்கு வெளிப் பிராகார தோற்றம்


வாயில் சுதைச் சிற்பங்கள்


3 நிலை கோபுரம் மற்றும் நந்தி மண்டபம்


கிழக்கு வெளிப் பிரகாரம் - நாகர் சந்நிதி