தேவார வைப்புத் தலங்கள்

வைப்புத் தலங்கள் இருப்பிடம் மற்றும் விபரங்கள்
பற்றிக் கூறும் இணையதளம்

அகத்தீஸ்வரர் திருக்கோவில், அகத்தீச்சரம்


தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்அகத்தீச்சரம் (அகத்தீஸ்வரம்)
இறைவன் பெயர்அகத்தீஸ்வரர்
இறைவி பெயர்அறம்வளர்த்த நாயகி, அமுதவல்லி.
பதிகம்அப்பர் (6-71-8)
எப்படிப் போவது கன்னியாகுமரியில் இருந்து நாகர்கோவில் செல்லும் NH47 தேசீய நெடுஞ்சாலையில் பயணித்து கொட்டாரம் என்னுமிடத்தை அடைந்து, அங்கிருந்து அகத்தீஸ்வரம் செல்லும் சாலையில் ஒரு கி.மி. சென்றால் வழியில் வடுகன்பற்று என்ற இடம் வரும். இங்கிருந்து அருகாமையிலுள்ள அகத்தீஸ்வரம் அகத்தீஸ்வரர் கோவிலை அடையலாம். கன்னியாகுமரியிலிருந்து சுமார் 6 கி.மீ. தொலைவிலும், நாகர்கோவிலில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவிலும் உள்ளது.
ஆலய முகவரி அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோவில்
வடுகன்பற்று
அகத்தீஸ்வரம் அஞ்சல்
கன்னியாகுமரி மாவட்டம்
PIN - 622101

இவ்வாலயம் காலை 6 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் தரிசனத்திற்காக திறந்திருக்கும்.

அகத்தீச்சரம் வைப்புத் தலத்தைக் குறிப்பிடும் பதிகம்

திருநாவுக்கரசரின் 6-ம் திருமுறையில் 71-வது பதிகத்தில் 8-வது பாடலில் இந்த வைப்புத் தலத்தைப் பற்றிய குறிப்பு உள்ளது. இப்பதிகம் அப்பர் பெருமான் திருப்பூந்துருத்தியில் தங்கி இருந்த போது "சுரம்" என வருவனவற்றை வகுத்து அருளிச் செய்தது.

நாடகம் ஆடிடம் நந்திகேச்சுரம் மா காளேச்
சுரம் நாகேச்சுரம் நாகளேச்சுரம் நன்கு ஆன
கோடீச்சுரம் கொண்டீச்சுரம் திண்டீச்சுரம்
குக்குடேச்சுரம் அக்கீச்சுரம் கூறுங்கால்
ஆடகேச்சுரம் அகத்தீச்சுரம் அயனீச்சுரம்
அத்தீச்சுரம் சித்தீச்சுரம் அம் தண் கானல்
ஈடு திரை இராமேச்சுரம் என்று என்று ஏத்தி
இறைவன் உறை சுரம் பலவும் இயம்புவோமே.

பொழிப்புரை :
கூத்தப் பெருமானது இடமாகிய நந்திகேச்சுரம், மாகாளேச்சுரம், நாகேச்சுரம், 
நாகளேச்சுரம், நன்மை பொருந்திய கோடீச்சரம், கொண்டீச்சரம், திண்டீச்சரம், 
குக்குடேச்சுரம், அக்கீச்சரம் என்றுமிவற்றைக் கூறுமிடத்து உடன்வரும் 
ஆடகேச்சுரம், அகத்தீச்சுரம், அயனீச்சுரம், அத்தீச்சுரம், சித்தீச்சுரம், அழகிய 
குளிர்ந்த கடற் கரையில் முத்து பவளம் முதலியவற்றைக் கொணர்ந்து போடும் 
திரைகள் சூழ்ந்த இராமேச்சுரம் என்றெல்லாம் இறைவன் தங்குகின்ற 
ஈச்சுரம் பலவற்றையும் கூறி அவனைப் புகழ்வோமாக..

google route map of agatheeswaram

அகத்தீஸ்வரம் இருப்பிடத்தைக் காட்டும் வரைபடம்
Map by Google