தேவார வைப்புத் தலங்கள்

வைப்புத் தலங்கள் இருப்பிடம் மற்றும் விபரங்கள்
பற்றிக் கூறும் இணையதளம்

சேஷபுரீஸ்வரர் திருக்கோவில், இராப்பட்டிச்சரம்


தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்இராப்பட்டிச்சரம்
இறைவன் பெயர்சேஷபுரீஸ்வரர்
இறைவி பெயர்அந்தப்புரநாயகி
பதிகம்அப்பர் (6-25-10)
எப்படிப் போவது திருவாரூர் - குடவாசல் - கும்பகோணம் சாலையிலுள்ள மணக்கால் என்ற ஊருக்கு அருகிலுள்ளது. மணக்காலில் விசாரித்துச் செல்ல வேண்டும்.
ஆலய முகவரி அருள்மிகு சேஷபுரீஸ்வரர் திருக்கோவில்
இராப்பட்டிச்சரம்
மணக்கால் அய்யம்பேட்டை அஞ்சல்
திருவாரூர் மாவட்டம்
PIN - 610104

ஒரு கால பூஜை மட்டும் நடைபெறுகிறது. கோவில் அருகில் விசாரித்து ஆலயத்தை திறந்து காட்டச் சொல்லலாம்.

இராப்பட்டிச்சரம் வைப்புத் தலத்தைக் குறிப்பிடும் பதிகம்

திருநாவுக்கரசரின் 6-ம் திருமுறையில் 25-வது பதிகத்தில் 10-வது பாடலில் இந்த வைப்புத் தலத்தைப் பற்றிய குறிப்பு உள்ளது. இந்தப் பதிகம் திருவாரூர் தலத்திற்குரிய பதிகமாகும்.

நல்லூரே நன்றாக நட்டம் இட்டு
நரை ஏற்றைப் பழையாறே பாய ஏறிப்
பல்லூரும் பலிதிரிந்து சேற்றூர் மீதே
பலர் காணத் தலையாலங்காட்டின் ஊடே
இல் ஆர்ந்த பெருவேளூர்த் தளியே பேணி
இராப்பட்டீச்சரம் கடந்து மணற்கால் புக்கு
எல்லாரும் தளிச்சாத்தங்குடியில் காண
இறைப் பொழுதில் திருவாரூர் புக்கார் தாமே.

பொழிப்புரை :
நல்லூரில் நன்றாகக் நடனமாடி, பழையாறையை நோக்கி வெண்ணிறக் காளையை 
இவர்ந்து, பல ஊர்களிலும் பிச்சைக்காகத் திரிந்து, சேற்றூரில் பலர் காண நின்று, 
தலையாலங் காட்டினூடே மறைந்து நின்று, பெருவேளூர்க் கோயிலிலே விரும்பித் தங்கி, 
இராபட்டீச்சரத்தில் இராப்பொழுதைக் கழித்து மணற்காலில் நுழைந்து தளிச்சாத்தங்குடி வழியாக 
எல்லாரும் காணச் சென்று ஒரு நொடிப் பொழுதில் திருவாரூரில் எம் பெருமான் புகுந்தார்.

ஆலயத்திற்கு இராஜகோபுரமில்லை. மேற்குப் பார்த்த ஒரு முகப்பு வாயிலுடன் ஆலயம் காணப்படுகிறது. முகப்பு வாயில் கடந்து உள்ளே சென்றால் பலிபீடமும், நந்தியும் உள்ளன. 2-வது நுழைவாயிலின் இருபுறமும் மாடங்களில் லட்சுமியும், சரஸ்வதியும் உள்ளனர். 2-வது வாயில் கடந்து உள்ளே சென்றால் முன் மண்டபத்தை அடையலாம். இங்கு முன் மண்டபத்தில் ஆறடி உயரத்தில் தட்சிணாமூர்த்தியும், அருகில் சனகாதி முனிவர்களும் தனித்தனியே ஒன்றரையடி உயரத் திருமேனிகளுடன் இருக்கக் காணலாம். கலை நுணுக்கம் மிகுந்த அற்புதமான சிலை வடிவங்கள். கோஷ்ட தேவதையாக இல்லாமல் தட்சிணாமூர்த்தி முன் மண்டபத்திலேயே இடம் பிடித்துக் கொண்டுள்ளார். மற்றொரு சிறப்பம்சமாக நந்திதேவர் சேஷபுரீசுவரரை நோக்கி அமர்ந்த போதிலும், தட்சிணாமூர்த்தியைப் பார்த்தவாறு தலையைத் திருப்பிக் கொண்டுள்ளார்.

கருவறையில் மூலவர் சேஷபுரீஸ்வரர் மேற்கு நோக்கி சுயம்பு மூர்த்தியாக அருட்காட்சி தருகிறார். லிங்கத்தின் மீது பாம்பு போன்ற தழும்புகள் உள்ளன. இத்தல இறைவனை ஆதிசேஷன் வழிபட்டுள்ளார். ஆகையால் இத்தலம் ஒரு சர்ப்பதோஷ நிவர்த்தித் தலமாக விளங்குகிறது. இத்தலத்தின் மற்றொரு சிறப்பு சுமார் ஐந்தரை அடி உயரமுள்ள பைரவர் திருமேனி மூர்த்தம். இவர் மிகவும் வரப்பிரசாதி. தேய்பிறை அஷ்டமியில் வாழையிலையில் தயிர் சாதமும் வடையும் பைரவருக்கு நிவேதிக்கப்படுகிறது.

பங்குனி மாதம் 7-ம் தேதியில் இருந்து 11-ம்தேதி வரை ஐந்து நாட்கள் மாலை 6 மணிக்கு லிங்கத்தின் மீது சூரிய ஒளிபட்டு சூரிய பூஜை நடைபெறுகிறது.

ஆலயத்திற்கான திருப்பணிகள் செய்வதற்கு ஊர் மக்கள் முயற்சிகள் செய்து கோண்டு வருகின்றனர். திருப்பணிக்கு உதவுங்கள்.


இராப்பட்டிச்சரம் சேஷபுரீஸ்வரர் ஆலயம் புகைப்படங்கள்

ஆலயத்தின் முகப்பு வாயில்

ஆலயத்தின் 2-வது நுழைவாயில்

முன் மண்டபத்தில் தட்சிணாமூர்த்தி

தட்சிணாமூர்த்தியைப் பார்க்கும் நந்தி

மூலவர் சேஷபுரீஸ்வரர்

அம்பாள் அந்தப்புரநாயகி

பைரவர்

2-வது நுழைவாயில் மாடத்தில் லட்சுமி

2-வது நுழைவாயில் மாடத்தில் சரஸ்வதி