தேவார வைப்புத் தலங்கள்

வைப்புத் தலங்கள் இருப்பிடம் மற்றும் விபரங்கள்
பற்றிக் கூறும் இணையதளம்

சுத்தரத்னேஸ்வரர் திருக்கோவில், ஊற்றத்தூர்


தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்ஊற்றத்தூர் (இன்றைய நாளில் ஊட்டத்தூர் என்று பெயர்)
இறைவன் பெயர்சுத்தரத்தினேஸ்வரர்
இறைவி பெயர்அகிலாண்டேஸ்வரி
பதிகம்அப்பர் (6-70-10, 6-71-4)
எப்படிப் போவது திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறுகனூர் தாண்டி பாடாலூர் வந்து, அங்கிருந்து பிரியும் புள்ளம்பாடி சாலையில் 5 கி.மீ. சென்ற பிறகு சாலை இரண்டாகப் பிரியும் இடத்தில் வலதுபுறம் செல்லும் சாலையில் சென்று ஊட்டத்தூர் தலத்தை அடையலாம். ஊட்டத்தூர் செல்ல திருச்சியில் இருந்து நகரப் பேருந்து வசதி உண்டு
ஆலய முகவரி அருள்மிகு சுத்தரத்னேஸ்வரர் திருக்கோவில்
ஊட்டத்தூர்
ஊட்டத்தூர் அஞ்சல்
வழி பாடாலூர்
லால்குடி வட்டம்
திருச்சி மாவட்டம்
PIN - 621109

இவ்வாலயம் தினந்தோறும் காலை 6 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8-30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

ஆலய தொடர்புக்கு: ராமநாத குருக்கள், நடராஜ குருக்கள் - தொலைபேசி: 04328 - 267126, கைபேசி: 97880 62416

ஊற்றத்தூர் வைப்புத் தலத்தைக் குறிப்பிடும் பதிகம்

திருநாவுக்கரசரின் 6-ம் திருமுறையில் 70-வது பதிகத்தில் 10-வது பாடலில் இந்த வைப்புத் தலத்தைப் பற்றிய குறிப்பு உள்ளது. இந்தப் பதிகம் அப்பர் திருப்புகலூரில் தங்கி இருந்த போது அருளிச் செய்ததாகும்.

நறையூரிற் சித்தீச்சரம் நள்ளாறு    6-70-10
நாரையூர் நாகேச்சரம் நல்லூர் நல்ல
துறையூர் சோற்றுத்துறை சூலமங்கை
தோணிபுரம் துருத்தி சோமேச்சரம்
உறையூர் கடலொற்றியூர் ஊற்றத்தூர்
ஓமாம்புலியூர் ஓர் ஏடகத்தும்
கறையூர் கருப்பறியல் கன்றாப்பூரும்
கயிலாயநாதனையே காணலாமே.

பொழிப்புரை :
நறையூரிலுள்ள சித்தீச்சரம், நள்ளாறு, நாரையூர், நாகேச்சரம், நல்லூர், துறையூர், 
சோற்றுத்துறை, சூலமங்கை, தோணிபுரம், துருத்தி, சோமேச்சரம், உறையூர், 
கடலை அடுத்த ஒற்றியூர், ஊற்றத்தூர், ஓமாம்புலியூர், ஏடகம், கறையூர், 
கருப்பறியல், கன்றாப்பூர் ஆகிய இடங்களில் கயிலாய நாதனைக் காணலாம்.

திருநாவுக்கரசரின் 6-ம் திருமுறையில் 71-வது பதிகத்தில் 4-வது பாடலில் இந்த வைப்புத் தலத்தைப் பற்றிய குறிப்பு உள்ளது. இந்தப் பதிகம் அப்பர் திருப்பூந்துருத்தியில் தங்கி இருந்த போது அருளிச் செய்ததாகும்.

பிறை ஊரும் சடைமுடி எம்பெருமான் ஆரூர்    (6-71-4)
பெரும்பற்றப்புலியூரும் பேராவூரும்
நறையூரும் நல்லூரும் நல்லாற்றூரும்
நாலூரும் சேற்றூரும் நாரையூரும்
உறையூரும் ஓத்தூரும் ஊற்றத்தூரும்
அளப்பூர் ஓமாம்புலியூர் ஒற்றியூரும்
துறையூரும் துவையூரும் தோழூர் தானும்
துடையூரும் தொழ இடர்கள் தொடரா அன்றே.

பொழிப்புரை :
பிறை தவழும் சடைமுடிச் சிவபெருமானுடைய ஆரூர், பெரும்பற்றப்புலியூர், பேராவூர், 
நறையூர், நல்லூர், நல்லாற்றூர், நாலூர், சேற்றூர், நாரையூர், உறையூர், ஓத்தூர், 
ஊற்றத்தூர், அளப்பூர், ஓமாம்புலியூர், ஒற்றியூர், துறையூர், துவையூர், தோழூர், 
துடையூர் என்னும் இவற்றைத் தொழத் துன்பங்கள் தொடர மாட்டா.

கோவில் அமைப்பு: நல்ல நிலையில் பராமரிக்கப்பட்டு வரும் வைப்புத் தலக் கோவில்களில் ஊற்றத்தூர் சுத்தரத்தினேஸ்வரர் ஆலயமும் ஒன்றாகும். கிழக்கு நோக்கிய 5 நிலை இராஜகோபுரத்துடன் ஆலயம் அமைந்துள்ளது. அடுத்துள்ள 2-வது நுழைவாயில் மேற்புறம் ரிஷப வாகனத்தில் சிவன், பார்வதி, அருகில் நால்வர், இருபுறமும் விநாயகர், முருகர் ஆகியோர் காட்சி அளிக்கின்றனர். 2-வது நுழைவாயில் கடந்து உள்ளே சென்றால் உருவத்தில் சற்றே பெரியதாக உள்ள நந்தியை தரிசிக்கலாம். கருவறை சுற்றுப் பிராகாரம் வலம் வரும்போது கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தியை தரிசிக்கிலாம், இவர் கல்லால மரத்தின் கீழ், முயலகன் காலடியில் கிடக்க அழகிய சிற்ப வடிவில் காட்சி அளிக்கிறார். மேலும் வலம் வர, இக்கோயிலுக்குரிய விசேஷ மூர்த்தியான நடராசப் பெருமானை சிலா உருவில் தனி சந்நிதியில் அற்புதமாகக் காட்சியளிக்கின்றார். இந்த சிலையைத் லேசாக தட்டிப் பார்த்தால் "ஓம்" என்ற ஓசை எழும்பும். பக்கத்தில் சற்றுப் பார்வையைச் சாய்த்து சுவாமியைப் பார்ப்பது போன்ற அமைப்புடன் சிவகாம சுந்தரி எழுந்தருளியுள்ளாள். இதை அடுத்துள்ள மற்றொரு சந்நிதியில் தனிச் சபையில் நடராசரும், சிவகாமியும் எழுந்தருளியுள்ளனர்.

கருவறை சுற்றுப் பிராகாரத்தில் வள்ளி தெய்வானை சமேத முருகர் சந்நிதியும் உள்ளது. ஆலயத்தின் தீர்த்தமான பிரம தீர்த்தம் கிணறு வடிவில் ஆலயத்தின் உள்ளே இருக்கிறது. ஆலயத்திலுள்ள காலபைவர் சிலா உருவமும் காணத்தக்கது. காலபைரவருக்கு 11 வாரம் தேய்பிறை அஷ்டமியில் சகஸ்ரநாம அர்ச்சனை செய்தால் குழந்தைகளுக்கு மனபயம் நீங்கும், மாடுகளுக்கு ஏற்படும் வியாதிகளுக்கு நிவாரணம் கிடைக்கும். மேலும் கொத்துக்கடலை மாலை இறைவனுக்குச் சார்த்தி, விடியற்காலை குரு ஹோரையில் பூஜை செய்தால் காரியசித்தி கிடைக்கும்.

ஊற்றத்தூர் சுத்தரத்தினேஸ்வரர் ஆலயம் புகைப்படங்கள்

ஆலயத்தின் 5 நிலை கோபுரம்

ஆலயத்தின் 2-வது வாயில்

அழகிய நந்தி

நடராஜர், சிவகாமி

கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி

அம்பாள் சிவகாம சுந்தரி

கால பைரவர்

பிரதோஷ நந்தி

அழகிய நடராஜர் சிற்பம்