தேவார வைப்புத் தலங்கள்

வைப்புத் தலங்கள் இருப்பிடம் மற்றும் விபரங்கள்
பற்றிக் கூறும் இணையதளம்

கந்தநாதசுவாமி திருக்கோவில், ஏரகரம் (ஏர்)


தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்ஏரகரம் (ஏர்)
இறைவன் பெயர்கந்தநாதசுவாமி, சங்கரநாதர்
இறைவி பெயர்சங்கரநாயகி
பதிகம்அப்பர் (6-51-6, 6-70-3)
எப்படிப் போவது கும்பகோணம் - திருவையாறு சாலையில் மேலக்காவேரியை அடுத்து, "யானையடி" என்னுடத்தில் திரும்பும் சாலையில் ஏரகரம் 3 கி.மீ. என்ற பெயர்ப் பலகையுள்ளது. அச்சாலையில் சென்றால் ஏரகரம் கோயிலை அடையலாம். கும்பகோணத்திலிருந்து சுமார் 5 கி.மி. தொலைவில் உள்ளது. தேவாரப் பாடல் பெற்ற தலமான இன்னம்பரில் இருந்து திருப்புறம்பியம் செல்லும் சாலை வழியில் வலதுபுறம் ஏரகரம் செல்லும் சாலை பிரிகிறது. அவ்வழியாகச் சென்றும் ஏரகரம் அடையலாம். இன்னம்பர் மற்றும் திருப்புறம்பியம் தலங்களிலிருந்து சுமார் 3 கி.மி தொலைவில் உள்ளது.
ஆலய முகவரி அருள்மிகு கந்தநாதசுவாமி திருக்கோவில்
ஏரகரம் அஞ்சல்
கும்பகோணம் வட்டம்
தஞ்சாவூர் மாவட்டம்
PIN - 612303

கோவில் அர்ச்சகர் வீடு அருகிலேயே இருப்பதால் எந்நேரமும் அவரை அழைத்து வந்து தரிசனம் செய்யலாம்..கோவில் அருகில் விசாரித்தால் அவர் இருக்கும் வீட்டைக் காண்பிப்பார்கள்

ஏரகரம் (ஏர்) வைப்புத் தலத்தைக் குறிப்பிடும் பதிகம்

திருநாவுக்கரசரின் 6-ம் திருமுறையில் 51-வது பதிகத்தில் 6-வது பாடலில் இந்த வைப்புத் தலத்தைப் பற்றிய குறிப்பு உள்ளது. இந்தப் பதிகம் திருவீழிமிழலை தலத்திற்குரிய பதிகமாகும்

பெரும்புலியூர் விரும்பினார் பெரும்பாழிய்யார்	
பெரும்பற்றப்புலியூர் மூலட்டானத்தார்
இரும்புதலார் இரும்பூளை உள்ளார் ஏர் ஆர்
இன்னம்பர் ஆர் ஈங்கோய் மலையார் இன்சொல்
கரும்பனையாள் உமையோடும் கருகாவூர் ஆர்
கருப்பறியலூர் ஆர் கரவீரத்தார்
விரும்பும் அமரர் இரவுபகல் பரவி யேத்த
வீழிமிழலையே மேவினாரே.

பொழிப்புரை :

கரும்பு போன்று இனிய உமாதேவியோடு பெரும்புலியூரை விரும்பிய பெருமான், 
அவ்வூர் மூலத்தானம், அரதைப்பெரும்பாழி, இரும்புதல், இரும்பூளை, இன்னம்பர், 
ஈங்கோய்மலை, கருகாவூர், கருப்பறியலூர், கரவீரம் என்ற இடங்களில் தங்கித் 
தம்மை விரும்பும் தேவர்கள் இரவும் பகலும் முன்னின்று புகழ்ந்து துதிக்குமாறு 
வீழிமிழலையையே விரும்பி அடைந்தார் .

திருநாவுக்கரசரின் 6-ம் திருமுறையில் 70-வது பதிகத்தில் 3-வது பாடலிலும் இந்த வைப்புத் தலத்தைப் பற்றிய குறிப்பு உள்ளது. இந்தப் பதிகம் திருப்புகலூர் தலத்தில் அப்பர் பெருமான் தங்கி இருந்த போது அருளிய ஷேத்திரக்கோவைத் திருத்தாண்டகம் என்ற பதிகமாகும்

இடைமருது ஈங்கோய் இராமேச்சரம்
இன்னம்பர் ஏர் இடவை ஏமப்பேறூர்
சடைமுடி சாலைக்குடி தக்களூர்
தலையாலங்காடு தலைச்சங்காடு
கொடுமுடி குற்றாலம் கொள்ளம்பூதூர்
கோத்திட்டை கோட்டாறு கோட்டுக்காடு
கடைமுடி கானூர் கடம்பந்துறை
கயிலாய நாதனையே காணலாமே.

பொழிப்புரை: 

இடைமருது, ஈங்கோய், இராமேச்சரம், இன்னம்பர், ஏர், இடவை, ஏமப்பேறூர், சடைமுடி, சாலைக்குடி, தக்களூர், தலையாலங்காடு, தலைச்சங்காடு, கொடுமுடி, குற்றாலம், கொள்ளம்பூதூர், கோத்திட்டை, கோட்டாறு, கோட்டுக்காடு, கடைமுடி, கானூர், கடம்பந்துறை ஆகிய இவற்றில் கயிலாய நாதனைக் காணலாம் .

erakaram temple entrace

முகப்பு வாயில் மேலே காணப்படும் சுதைச் சிற்பங்கள்

கி.பி.1120 முதல் 1136 வரை சோழ நாட்டை ஆட்சிபுரிந்த விக்கிரம சோழன் காலத்திய இத்தலத்து கல்வெட்டின் படி ஏரகரம் என்ற இத்தலம் "இன்னம்பர் நாட்டு ஏராகிய மும்முடி சோழமங்கலம்" என்று அந்நாளில் அழைக்கப்பட்டது. இதற்கேற்ப இத்தலத்தைக் குறிப்பிடும் வைப்புத்தல பாடல்களில் இன்னம்பர் என்ற சொற்றொடரை அடுத்து இத்தலத்தின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதைக் காணலாம்.

கோவில் தல வரலாறு: ஒரு சமயம் முருகக் கடவுள், படைத்தல் தொழில் செய்து வரும் பிரம்மாவிடம் ஓங்காரத்திற்குப் பொருள் உரைக்குமாறு வினவினார். பிரம்மா பொருள் தெரியாது திகைத்து நிற்க, பிரணவப் பொருள் தெரியாத பிரம்மா படைப்புத் தொழிலுக்கு தகுதியற்றவன் எனக்கருதி, படைப்புத் தொழிலை தானே ஏற்றுக் கொண்டு பிரம்மாவை சிறையிலும் அடைத்தார். மகாவிஷ்ணு ஈசனை அணுகி, பிரம்மாவை விடுவிக்க வேண்டினார். ஈசனும் முருகனிடம் பிரம்மாவைச் சிறையிலிருந்து விடுவிக்க ஆணையிட்டார். அதன்பின் தந்தைக்கு அவர் விரும்பியபடி பிரணவ மந்திரத்தின் பொருள் உரைக்க, அதனால் மகிழ்ந்த சிபெருமான் குமரக் கடவுளை இத்தலத்திலேயே தங்கி அருள் பாலித்துக் கொண்டிருக்கும்படி ஆணையிட்டார். தந்தைக்குப் பிரணவத்தின் பொருள் உரைத்த முருகப் பெருமானின் ஆறபடைவிடுகளில் ஒன்றான சுவாமிமலை ஏரகரம் தலத்திலிருந்து அருகிலுள்ளது.

முருகப் பெருமான் சூரபத்மன் முதலான அரக்கர்களை அழிக்க பூமிக்கு வந்து தான் தங்கும் இடமாக தேர்தெடுத்த இடம் தான் ஏரகரம் என்ற இத்தலம். அசுரர்களை அழிப்பதற்கு முன்பு குமரக் கடவுள் தன் பெற்றோர்களையும், விநாயகரையும் துதித்து ஆசி பெற வேண்டி வணங்க, எம்பெருமானும், உமையும் முருகன் அமைத்த ஏரகரத்திற்கு கந்தநாதசுவாமியாகவும், சங்கரநாயகியாகவும் வந்து அமர்ந்தனர்.

கோவில் அமைப்பு: நான்கு புறமும் மதிற்சுவருடன் ஒரு முகப்பு வாயிலைக் கொண்டும், ஒரு பிராகாரத்துடனும் இவ்வாலயம் அமைந்துள்ளது. முகப்பு வாயிலைக் கடந்தால் ஒரு நீண்ட மண்டபம் நேரே இறைவன் சந்நிதிக்குச் செல்கிறது. நீண்ட மண்டபத்தின் முகப்பிலேயே வலதுபுறம் தெற்கு நோக்கியவாறு அம்பாள் சங்கரநாயகியின் சந்நிதி அமைந்துள்ளது. மண்டப முகப்பில் இடதுபுறம் நர்த்தன விநாயகர் காட்சி தருகிறார். கருவறைக் கோஷ்டத்தில் அமைந்துள்ள தட்சிணாமூர்த்தி கண்டு தரிசிக்க வேண்டும். நவக்கிரக சந்நிதியும் இவ்வாலயத்தில் உள்ளது.

ஏரகரம் கந்தநாதசுவாமி திருக்கோவில் புகைப்படங்கள்

ஆலயத்தின் வெளித் தோற்றம்

இறைவன் சந்நிதி முன் மண்டபம்

நவக்கிரக சந்நிதி

இறைவன் கருவறை விமானம்

அம்பாள் கருவறை விமானம்

நர்த்தன விநாயகர்

அம்பாள் சங்கரநாயகி சந்நிதி

தட்சிணாமூர்த்தி