தேவார வைப்புத் தலங்கள்

வைப்புத் தலங்கள் இருப்பிடம் மற்றும் விபரங்கள்
பற்றிக் கூறும் இணையதளம்

கச்சி மயானேஸ்வரர் திருக்கோவில், கச்சி மயானம் (காஞ்சீபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோவில்)


தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்கச்சி மயானம் (காஞ்சீபுரம்)
இறைவன் பெயர்கச்சி மயானேஸ்வரர்
இறைவி பெயர்காமாட்சி
பதிகம்அப்பர் (6-97-10)
எப்படிப் போவது காஞ்சிபுரத்திற்கு சென்னை, திருச்சி மற்றும் முக்கிய நகரங்களிலிருந்தும் பேருந்து வசதிகள் நிரம்ப உள்ளன..
ஆலய முகவரி அருள்மிகு கச்சி மயானேஸ்வரர் திருக்கோவில்
ஏகாம்பரேஸ்வரர் கோவில்
காஞ்சீபுரம்
காஞ்சீபுரம் மாவட்டம்
PIN - 631502

இவ்வாலயம் தினந்தோறும் காலை 6 மணி முதல் பகல் 12-30 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8-30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

கச்சி மயானம் வைப்புத் தலத்தைக் குறிப்பிடும் பதிகம்

திருநாவுக்கரசரின் 6-ம் திருமுறையில் 97-வது பதிகத்தில் 10-வது பாடலில் இந்த வைப்புத் தலத்தைப் பற்றிய குறிப்பு உள்ளது. இந்தப் பதிகம் அப்பர் திருப்புகலூரில் ந்தஙி இருந்த பொது அருளிச் செய்ததாகும்

மைப் படிந்த கண்ணாளும் தானும் கச்சி
மயானத்தான் வார்சடையான் என்னின் அல்லான்
ஒப்புடையன் அல்லன் ஒருவன் அல்லன்
ஓரி ஊரன் அல்லன் ஓர் உவமன் இலி
அப்படியும் அந்நிறமும் அவ்வண்ணமும்
அவன் அருளே கண்ணாகக் காணின் அல்லால்
இப்படியன் இந் நிறத்தன் இவ் வண்ணத்தன்
இவன் இறைவன் என்ன் எழுதிக் காட்ட ஒணாதே.

பொழிப்புரை :
இறைவன் மைபூசிய கண்ணளாம் உமையம்மையும் தானுமாகிக் கச்சி மயானத்து 
வாழ்பவனும் நீண்ட சடையினனும் ஆவான் என்று கூறின் அவன் அவ்வளவே ஆம் 
தன்மையன் அல்லன், அவன் எப்பொருளையும் தன்பொருட்டு ஏற்க இசைதலை 
உடையான் அல்லன், உலகப் பொருள்களில் ஒருவன் அல்லன், ஓரூர்க்கே 
உரியனல்லன், யாதொரு பொருளும் தனக்கு உவமையாதல் இல்லாதவன், 
அதனால் அவனுடைய அந்தத் தன்மையையும் அந்த நிறத்தையும் அந்த 
வடிவத்தையும் அவன் திருவருளையே கண்ணாகப் பெற்றுக் காணலாமேயல்லாமல் 
மற்றைப் பொருள்கள் போலப் பிறரொருவர் இன்னவகையுட்பட்டவன், இன்ன 
நிறத்தையுடையவன், இன்ன வடிவத்தை உடையவன் என்று இவனைச் 
சொல்லோவியமாகவோ எழுத்தோவியமாகவோ எழுதிக் காட்டல் இயலாது. .

காஞ்சீபுரத்திலுள்ள பாடல் பெற்ற தலமான ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவிலின் உள்ளே கொடிமரத்திற்கு வலதுபுறம் தனி சந்நிதியாக கச்சி மயானேஸ்வரர் சந்நிதி உள்ளது. இச்சந்நிதி மேற்கு நோக்கி அமைந்துள்ளது. சந்நிதியை தனியே வலம் வரலாம்.

தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் நான்கு தலங்கள் மயானம் என்று அழைக்கப்படுகின்றன. அவையாவன - 1) நாலூர் மயானம், 2) திருக்கடவூர் மயானம், 3) காழி மயானம், 4) கச்சி மயானம். இவற்றில் முதல் மூன்றும் பாடல் பெற்ற தலங்கள். நான்காவது கச்சி மயானம் ஒரு தேவார வைப்புத் தலம்.

திருவேகம்பம் ஏகாம்பரேஸ்வரர் கோவிலுக்கு மூவர் பாடிய தேவாரப் பாதிகங்கள் உள்ளன. கச்சிமயானம் சந்நிதி அப்பர் பாடிய வைப்புத் தலமாக உள்ளது..