தேவார வைப்புத் தலங்கள்

வைப்புத் தலங்கள் இருப்பிடம் மற்றும் விபரங்கள்
பற்றிக் கூறும் இணையதளம்

சிவசைலநாதர் திருக்கோவில், அத்தீச்சுரம்


தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்அத்தீச்சுரம் (இந்நாளில் சிவசைலம் என்று வழங்குகிறது)
இறைவன் பெயர்சிவசைலநாதர்
இறைவி பெயர்பரமகல்யாணி
பதிகம்அப்பர் (6-71-8)
எப்படிப் போவது 1. தென்காசி - அம்பாசமுத்திரம் சாலை வழியில் உள்ள ஆழ்வார்குறிச்சியில் இருந்து மேற்கே சுமார் 6 கி.மீ. தொலைவில் உள்ளது. ஆழ்வார் குறிச்சியிலிருந்து கடனா நதி அணைக்குப் போகும் நகரப் பேருந்தில் ஏறிச்சென்று; கல்யாணிபுரம் நிறுத்தத்தில் இறங்கிச் சிறிது தூரம் நடந்தால் கோயிலையடையலாம். அடிக்கடி பேருந்துகள் இல்லை. 2. பாபநாசம் வைப்புத் தலத்தில் இருந்து கருத்தப்பிள்ளையூர் வழியாக வடக்கே சுமார் 14 கி.மீ. தொலைவில் சிவசைலம் கோயில் உள்ளது.. 3. தென்காசியில் இருந்து கடையம், இரவணசமுத்திரம் வழியாகவும் சிவசைலம் கோவிலுக்குச் செல்லலாம். தென்காசியில் இருந்து சுமார் 27 கி.மீ. தொலைவில் சிவசைலம் கோவில் உள்ளது.
ஆலய முகவரி அருள்மிகு சிவசைலநாதர் திருக்கோவில்
சிவசைலம்
ஆழ்வார்குறிச்சி அஞ்சல்
அம்பாசமுத்திரம் வட்டம்
திருநேல்வேலி மாவட்டம்
PIN - 627414

இவ்வாலயம் காலை 6-30 மணி முதல் பகல் 1 மணி வரையிலும், மாலை 5-30 மணி முதல் 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
Sivasailam map

ஆழ்வாரகுறிச்சியில் இருந்து சிவசைலம் செல்லும் வழி வரைபடம்

அத்தீச்சுரம் வைப்புத் தலத்தைக் குறிப்பிடும் பதிகம்

திருநாவுக்கரசரின் 6-ம் திருமுறையில் 71-வது பதிகத்தில் 8-வது பாடலில் இந்த வைப்புத் தலத்தைப் பற்றிய குறிப்பு உள்ளது. இப்பதிகப் பாடலில் "ஈச்சுரம்" என வரும் தலங்களை வகுத்து அப்பர் அருளிச் செய்துள்ளார்

நாடகம் ஆடிடம் நந்திகேச்சுரம் மாகாளேச்சுரம்
நாகேச்சுரம் நாகளேச்சுரம் நன் கான
கோடீச்சுரம் கொண்டீச்சுரம் திண்டீச்சுரம்
குக்குடேச்சுரம் அக்கீச்சுரம் கூறுங்கால்
ஆடகேச்சுரம் அகத்தீச்சுரம் அயனீச்சுரம்
அத்தீச்சுரம் சித்தீச்சுரம் அந்தண் கானல்
ஈடுதிரை இராமேச்சுரம் என்று என்று ஏத்தி
இறைவன் உறை சுரம்பலவும் இயம்புவோமே.

பொழிப்புரை :
கூத்தப் பெருமானது இடமாகிய நந்திகேச்சுரம், மாகாளேச்சுரம், நாகேச்சுரம், 
நாகளேச்சுரம், நன்மை பொருந்திய கோடீச்சரம், கொண்டீச்சரம், திண்டீச்சரம், 
குக்குடேச்சுரம், அக்கீச்சரம் என்றுமிவற்றைக் கூறுமிடத்து உடன்வரும் ஆடகேச்சுரம், 
அகத்தீச்சுரம், அயனீச்சுரம், அத்தீச்சுரம், சித்தீச்சுரம், அழகிய குளிர்ந்த கடற் கரையில் 
முத்து பவளம் முதலியவற்றைக் கொணர்ந்து போடும் திரைகள் சூழ்ந்த இராமேச்சுரம் 
என்றெல்லாம் இறைவன் தங்குகின்ற ஈச்சுரம் பலவற்றையும் கூறி அவனைப் புகழ்வோமாக 

இத்தலம் வெள்ளிமலை, மேற்குத் தொடர்ச்சி மலை மற்றும் முள்ளிமலை ஆகிய மூன்று மலைகளால் சூழப்பெற்று உள்ளது. கருணையாற்றின் கரையில் இவ்வாலயம் 5 திலை கொண்ட இராஜகோபுரத்துடன் அமைந்துள்ளது. இத்தலத்தில் மூலவர் மேற்கு நோக்கியவாறு சுயம்பு மூர்த்தியாக சிவசைலநாதர் என்ற பெயருடன் எழுந்தருளியுள்ளார். அத்திரி முனிவர் வழிபட்டதால் இறைவனுக்கு அத்திரீசுவரர் என்ற பெயரும் உண்டு. அம்பாள் பரமகல்யாணி என்று பெயருடன் காட்சி தருகிறாள். தீர்த்தம் அத்திரி தீர்த்தம் மற்றும் கடனா நதி. ஆலயத்தின் உள்பிராகாரத்தில் விநாயகர், முருகர், 63 நாயன்மார்கள், தட்சிணாமூர்த்தி, நடராஜர் ஆகியோரின் சந்நிதிகள் உள்ளன. இக்கோவிலில் உள்ள நந்தியின் உருவம் சிறப்பு வாய்ந்தது. முன் காலையூன்றி எழும் நிலையில் உள்ள நந்தி சிற்பக் கலைக்கு ஒரு எடுத்துக்காட்டு. தேவலோக சிற்பியான மயனால் தேவேந்திரன் ஆணைப்படி சிற்ப சாஸ்திரங்களின்படி இந்த நந்தி சிலை உயிரோட்டமாக எந்த குறையும் இல்லாமல் வடிக்கப்பட்டதால் அது உயிர் பெற்றது. எழுவதற்காக கால்களை தூக்கியது. எனவே மயன் ஒரு உளியால் நந்தியின் முதுகில் கீறலை ஏற்படுத்தினார். அதன் பிறகே நந்தி அங்கே இருந்தது. மயன் அப்போது ஏற்படுத்திய கீறல் நுட்பமாக தெரிவதை இன்றும் நாம் காணலாம். ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் கடைசி வெள்ளிக்கிழமையன்று இப்பெரிய நந்திக்கு திருவிழா நடைபெறுகிறது. இறைவன் சிவசைலநாதர் தலைமுடியுடன் கூடிய சடையப்பர். சிவலிங்கத்தின் பின்பகுதியில் தலைமுடி இருப்பதைப் போன்ற தோற்றம் உள்ளது. பின்புறக் கருவறைச் சுவரில் உள்ள சிறிய சாளரம் வழியே இதை தரிசிக்கலாம்.

பிருகு, அத்திரி முனிவர்கள் இத்தல இறைவனை வழிபட்டு காட்சி கண்டுள்ளனர். அத்திரி முனிவரால் உண்டாக்கப்பட்ட கங்கை இன்றும் சிவசைல மலையில் 1500 அடி உயரத்தில் அத்திரி தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. இந்த தீர்த்தத்தின் அருகில் முருகருக்கு ஒரு கோவில் உள்ளது. அத்திரி முனிவரால் உண்டாக்கப்பட்ட கங்கை கருணையாற்றுடன் கலந்து சிவசைலம் கோவிலுக்கு வடக்குப் பக்கம் ஓடி திருப்படைமருதூர் தாமிரபரணி நதியுடன் கலக்கிறது.

ஆழ்வார்குறிச்சியில் இருந்து சிவசைலம் செல்லும் பாதையில், ஆழ்வார் குறிச்சி ஊரைத் தாண்டியதும், "சிவந்தியப்பர் கோயில்" என்றொரு கோயில் உள்ளது. சிவசைலநாத சுவாமி கோயிலில் திருவிழா தொடங்கும்போது, கொடி ஏற்றுதல் மட்டுமே அங்கு நடைபெறும். மற்றபடி விழா உற்சவங்கள், தேரோட்டம் முதலிய அனைத்தும் சிவந்தியப்பர் கோயிலில் தான் நடைபெறுகிறது. சிவசைலத்திலுள்ள உற்சவர் எழுந்தருளி இங்கு தான் தேர்திருவிழா சிறப்புடன் நடைெபறுகிறது. இதனை சுற்றியுள்ள கிராம மக்கள் ஒன்று கூடி ஆடவரும் பெண்டிரும் தேர் வடம் பிடித்து இழுக்கின்றனர். அம்பாள் பரமகல்யாணிக்கு தனித்தேர் உள்ளது இதனை பெண்கள் மட்டுமே வடம் பிடித்து இழுக்கின்றனர் என்பது இத்தலத்தின் மற்றொரு சிறப்பம்சம்..

இவ்வாலயத்தில் தினந்தோறும் நான்கு கால பூஜைகள் நடைபெறுகின்றன. பங்குனி மாதத்தில் பிரம்மோற்சவமும், ஐப்பசியில் திருக்கல்யாண உற்சவமும், சித்திரையில் தீரத்தவாரியும் நடைபெறுகிறது.

sivasailam route map
பாபநாசம் ஆலயத்தில் இருந்து சிவசைலம் செல்லும் வழி வரைபடம்
sivasailam route map
தென்காசியில் இருந்து சிவசைலம் செல்லும் வழி வரைபடம்

அத்தீச்சுரம் சிவசைலநாதர் ஆலயம் புகைப்படங்கள்

ஆலயத்தின் நுழைவாயில்

ஆலயத்தின் நுழைவாயில் கடந்து உள் தோற்றம்

சிற்பக் கலைக்கு எடுத்துக்காட்டான நந்தி

விஷ்ணு துர்க்கை

பைரவர்

பிராகாரத்தில் 63 நாயன்மார்கள்