அரிச்சந்திரம் வைப்புத் தலத்தைக் குறிப்பிடும் பதிகம்
திருநாவுக்கரசரின் 6-ம் திருமுறையில் 51-வது பதிகத்தில் 10-வது பாடலில் இந்த வைப்புத் தலத்தைப் பற்றிய குறிப்பு உள்ளது. இந்தப் பதிகம் திருவீழிமிழலை தலத்திற்குரிய பதிகமாகும்.
அரிச்சந்திரத்து உள்ளார் அம்பர் உள்ளார்
அரிபிரமர் இந்திரர்க்கும் அரியர் ஆனார்
புரிச்சந்திரத்து உள்ளார் போகத்து உள்ளார்
பொருப்பு அரையன் மகளோடு விருப்பர் ஆகி
எரிச்சந்தி வேட்கும் இடத்தார் ஏம
கூடத்தார் பாடத் தேனிசையார் கீதர்
விரிச்சங்கை எரிக்கொண்டு அங்கு ஆடும் வேடர்
வீழிமிழலையே மேவினாரே.
பொழிப்புரை :
திருமால் பிரமன் , இந்திரன் என்பவர்களுக்குக் காண்பதற்கு அரியவர்,
உலகவர் நுகரும் எல்லா இன்பங்களிலும் கலந்திருப்பவர், இமவான் மகளாகிய
பார்வதியிடத்து விருப்பமுடையவர், மூன்று சந்திகளிலும் தீயை ஓம்பும்
வேள்விச் சாலைகளில் உகந்திருப்பவர், தாம் சூடிய மாலைகளில் வண்டுகள் பாட
ஏழிசையும் பொருந்திய பண்களைப் பாடுபவர், உள்ளங் கையை விரித்து
அதன்கண் அனலைஏந்தி ஆடும் வேடம் உடையவர் ஆகிய சிவபெருமான்,
அரிச்சந்திரம், அம்பர்மாகாளம், புரிச்சந்திரம், ஏமகூடம் இவற்றில்
தங்கி வீழிமிழலையை விரும்பி வந்தடைந்தார் .
கோவில் அமைப்பு: 26-6-1980-ல் கும்பாபிஷேகம் கண்ட இந்த ஆலயத்தின் இன்றைய நிலை மிகவும் கவலைக்கிடமாக இருக்கிறது. ஆலயத்திற்கான மதிற்சுவர் அடியோடு இல்லாமல் போய்விட்டது. ஆலயம் இன்றைய நாளில் கவனிப்பாரின்றி காட்சி அளிக்கிறது. மூலவர் கருவறையில் இறைவன் சந்திரமெளலீஸ்வரர் தனிமையில் காட்சி தருகிறார். அம்பாள் சந்நிதி, கன்னி மூலையில் விநாயகர் சந்நிதி, மாகாளியம்மன் சந்நிதி ஆகியவற்றில் உள்ளே மூல மூர்த்தங்கள் இல்லை. ஆலயம் கவனிப்பாரின்றி இருப்பதால் இவை எல்லாம் திருடு போயிருக்க வாய்ப்புள்ளது. ஆலயத்தில் பூஜைகள் நின்று போய் பல வருடங்கள் ஆகிவிட்டதாக ஊர் மக்கள் கூறுகின்றனர். தேவாரப் பாடலில் வைப்புத் தலமாக குறிப்பிடப்பட்டு சிறப்பு பெற்ற இவ்வாலயம் இன்று களை இழந்து கேட்பாரின்றி உள்ளது.
அரிச்சந்திரம் திருக்கோயிலுக்கு எதிர் புறத்தில் சற்று தொலைவில் சாலைக்கு மறுபுறத்தில் ஒரு குளம் உள்ளது; இது "பாற்குளம்" என்று விளங்குகிறது. இங்கும் ஒரு கோவில் இருந்திருக்கிறது. தேவாரத்தில் வைப்புத் தலமாக குறிப்பிடப்பட்டும் உள்ளது. ஆனால் இன்று அங்கு கோயில் ஏதுமில்லை.
பாற்குளம் வைப்புத் தலத்தைக் குறிப்பிடும் பதிகம்
திருநாவுக்கரசரின் 6-ம் திருமுறையில் 13-வது பதிகத்தில் 1-வது பாடலில் இந்த வைப்புத் தலத்தைப் பற்றிய குறிப்பு உள்ளது. இந்தப் பதிகம் திருபுறம்பியம் தலத்திற்குரிய பதிகமாகும்.
கொடிமாட நீள்தெருவு கூடல் கோட்டூர்
கொடுங்கோளூர் தண்வளவி கண்டியூரும்
நடமாடு நன்மருகல் வைகி நாளும்
நலம் ஆகும் ஒற்றியூர் ஓற்றி ஆகப்
படுமாலை வண்டு அறையும் பழனம் பாசூர்
பழையாறும் பாற்குளமும் கைவிட்டு இந்நாள்
பொடி ஏறு மேனியராய்ப் பூதம் சூழப்
புறம்பயம் நம் ஊரென்று போயினாரே.
பொழிப்புரை :
கொடிகள் கட்டப்பட்ட மாட வீடுகளைக் கொண்ட நீண்ட தெருக்களை
உடைய கூடல், கோட்டூர், கொடுங்கோளூர், வளவி, கண்டியூர், கூத்து
நிகழ்த்தும் சிறந்த மருகல் இவற்றில் நாளும் தங்கி அழகிய ஒற்றியூர்
ஒற்றி வைக்கப்பட்டது என்னும் பொருளைத் தருதலில் அதனை நீங்கிச்
சூரியன் மறையும் மாலையிலே வண்டுகள் ஒலிக்கும் பழனம், பாசூர்,
பழையாறு, பாற்குளம் என்னும் இவற்றை நீங்கி இன்று திருநீறு
அணிந்த மேனியராய்ப் பூதங்கள் தம்மைச் சூழ்ந்துவர எங்களுடைய ஊர்
புறம்பயம் என்று கூறி எம்பெருமானார் சென்று விட்டார்.
அரிச்சந்திரம் சந்திரமெளலீஸ்வரர் ஆலயம் புகைப்படங்கள் |
 ஆலயத்தின் இன்றைய தோற்றம் |
 தனிமையில் சந்திரமெளலீஸ்வரர் |
 சந்திரமெளலீஸ்வரர் சந்நிதி |
 காளியம்மன் சந்நிதி |
 1980-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றதைக் கூறும் கல்வெட்டு |
 ஆலயத்தின் மற்றொரு தோற்றம் |