தேவார வைப்புத் தலங்கள்

வைப்புத் தலங்கள் இருப்பிடம் மற்றும் விபரங்கள்
பற்றிக் கூறும் இணையதளம்

நாகநாதசுவாமி திருக்கோவில், செம்பங்குடி


தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்செம்பங்குடி
இறைவன் பெயர்நாகநாதசுவாமி
இறைவி பெயர்கற்பூரவல்லி
பதிகம்அப்பர் (6-71-3)
எப்படிப் போவது சீர்காழி பழைய பேருந்து நிலையத்திலிருந்து திருமுல்லைவாசல் செல்லும் சாலையில் 3 கி.மீ. தொலைவில் செம்பங்குடி உள்ளது. குறுகிய பாதை விசாரித்து கோயிலை அடையலாம். நகரப் பேருந்தில் செல்பவர்கள் கேது கோவில் நிறுத்தம் என்று கேட்டு இறங்க வேண்டும்
ஆலய முகவரி அருள்மிகு நாகநாதசுவாமி திருக்கோவில்
செம்பங்குடி, செம்பங்குடி அஞ்சல்
சீர்காழி வட்டம்
நாகப்பட்டிணம் மாவட்டம்
PIN - 609104

இவ்வாலயத்தில் ஒரு கால பூஜைமட்டும் நடைபெறுகிறது. தகவல் தெரிவித்து தரிசனம் செய்யலாம்.
ஆலய அர்ச்சகர்: - சட்டநாத குருக்கள்
தொலைபேசி 4364 291582

செம்பங்குடி வைப்புத் தலத்தைக் குறிப்பிடும் பதிகம்

திருநாவுக்கரசரின் 6-ம் திருமுறையில் 71-வது பதிகத்தில் 3-வது பாடலில் இந்த வைப்புத் தலத்தைப் பற்றிய குறிப்பு உள்ளது. இத்திருத்தாண்டகம் "குடி" என முடியும் தலங்களை வகுத்தருளிச் செய்தது

நற்கொடி மேல் விடையுயர்த்த நம்பன் செம்பங்குடி
நல்லக்குடி நளி நாட் டியத்தான்குடி
கற்குடி தென்களக்குடி செங்காட்டங்குடி
கருந்திட்டைக்குடி கடையக்குடி காணுங்கால்
விற்குடி வேள்விக்குடி நல் வேட்டக்குடி
வேதிகுடி மாணிகுடி விடைவாய்க்குடி
புற்குடி மாகுடி தேவன்குடி நீலக்குடி
புதுக்குடியும் போற்ற இடர் போகுமன்றே.

பொழிப்புரை :
நல்ல இடபக் கொடியை மேலே உயரத்தூக்கியவனும், நம்புதற்குரியவனுமாகிய 
சிவபெருமானுடைய செம்பங்குடி, நல்லக்குடி, பெருமைமிக்க நாட்டியத்தான்குடி, 
கற்குடி, இனிய களக்குடி, செங்காட்டங்குடி, கருந்திட்டைக்குடி, கடையக்குடி 
ஆகியவற்றோடு ஆராயுங்கால் குடியில் முடியும் ஊர்களாகிய விற்குடி, வேள்விக் குடி, 
நன்மமைமிகு வேட்டக்குடி, வேதிகுடி, மாணிகுடி, விடைவாய்க் குடி, புற்குடி, மாகுடி, 
தேவன்குடி, நீலக்குடி, புதுக்குடி என்பனவற்றையும் புகழ்ந்து கூறத் துன்பம் நீங்கும்.

கோவில் அமைப்பு: ஆலயம் மதிற்சுவரோடு கூடிய ஒரு முகப்பு வாயிலுடன் அமைந்திருக்கிறது. உள்ளே நுழைந்தவுடன் விசாலமான முற்றவெளியில் நம் கண்ணில் படுவது பலிபீடமும், நந்திதேவரும். வெளி சுற்றுப் பிராகாரத்தில் விநாயகர், வள்ளி தெய்வானை சமேத முருகர், தணிகைவேலவர், மகாவிஷ்ணு ஆகியோரின் சந்நிதிகள் அமைந்துள்ளன. மூலவர் நாகநாதசுவாமி கிழக்கு நோக்கி சுயம்பு லிங்க உருவில் எழுந்தருளியுள்ளார் அம்பாள் கற்பூரவல்லி தனி சந்நிதியில் தெற்கு நோக்கி அருட்காட்சி தருகிறாள். பிராகாரத்தில் தல விருட்சத்தின் அடியில் சப்தமாதர்கள் திருவுருவச் சிலைகள் உள்ளன. இத்தலத்தின் சிறப்பு மூர்த்தியாகிய கேது பகவான் தனி சந்நிதியில் அருள் புரிகிறார்.

தல வரலாறு: பாற்கடலைக் கடைந்த போது அமிர்தம் வெளிப்பட்டது. நடை, திரை, பிணி, மூப்பு, சாக்காடு முதலியவற்றை நீக்கும் மருந்தாக அமிர்தம் விளங்கியது. அந்த அமிர்தத்தை தேவர்களும், அசுரர்களும் உண்ண போட்டியிட்டனர். அசுரர்கள் அமிர்தத்தை உண்டால் அவர்களுக்கு அழிவு இருக்காது. ஆகையால் அமிர்தத்தை தேவர்களுக்கு மட்டுமே கொடுக்க மாகாவிஷ்ணு முடிவெடுத்தார். ஆனால் ஒரு அசுரன் மட்டும் தேவர் வடிவம் கொண்டு சூரிய, சந்திரர்களுக்கு நடுவே நின்று தேவாமிர்தத்தை வாங்கி உண்டான். இதனை அறிந்த சூரிய, சந்திரர்கள் தேவாமிர்தத்தை பரிமாறி கொண்டிருந்த மகாவிஷ்ணுவிடம் குறிப்பால் உணர்த்த, அவர் தன் கையிலிருந்த கரண்டியால் அந்த அசுரனை ஓங்கி அடித்தார். அவர் அடித்த வேகத்தில் அசுரனின் கழுத்து துண்டிக்கப்பட்டு தலை, சிரபுரம் என்ற தற்போதைய சீர்காழியிலும், உடல் மற்றொரு இடத்திலும் விழுந்தது. தேவாமிர்தம் உண்டதால் அந்த அசுரனது இரண்டு உடல் பாகங்களும் இரண்டு பாம்புகளாக மாறியது. இந்த அரவங்கள் சிவபெருமானை தியானித்து காற்றை மட்டும் உணவாக கொண்டு கடும் தவம் புரிய இறைவன் பார்வதி சமேதராய் இடப வாகனத்தில் எழுந்தருளினார்.

அப்போது அந்த அரவங்கள் சிவபெருமானிடம் தங்களை காட்டிக் கொடுத்த சூரிய, சந்திரனை விழுங்கும் சக்தியையும், அகில உலகையும் ஆட்டிப் படைக்கும் வலிமையையும் தங்களுக்கும் அருளுமாறு வேண்டின. சிவபெருமான் சூரியன், சந்திரன் இருவரும் உலக உயிர்களுக்கு இன்றியமையாதவர்கள் என்று கூறி, அவர்களை அமாவாசை, பவுர்ணமி, கிரக நாட்களில் மட்டும் ஆதிக்கம் செலுத்த சிவபெருமான் வரம் அளித்தார். மேலும் இறைவன் அருளால் மனித தலையும், பாம்பு உடலும் கொண்டு ராகுவும், பாம்பு தலையும் மனித உடலும் கொண்டு கேதுவும் தோன்றினார்கள். அத்துடன் அதுவரை இருந்த 7 கிரகங்களுடன் அவர்களையும் சேர்த்து 9 கிரகங்களாக (நவக்கிரகம்) விளங்கும்படி வரம் அளித்தார்.

அமிர்தம் உண்ட அசுரன் தலை மகாவிஷ்ணுவால் வெட்டப்பட்டு விழுந்த இடம் சீர்காழி. எனவே அத்தலம் சிரபுரம் என்றும், ஆதி ராகு, ஆதி கேது தலமாக சீர்காழியில் நாகேஸ்வரமுடையார் கோவில் என்று சிறப்புடன் விளங்குகிறது. அதுவும் ஒரு வைப்புத் தலம்.

அமிர்தம் உண்ட அசுரன் உடல் மகாவிஷ்ணுவால் வெட்டப்பட்டு விழுந்த இடம் செம்பாம்பின் குடி என்று ஆதி காலத்தில் அழைக்கப்பட்டு, நாளடைவில் மருவி, தேவாரம் பாடப்பெற்ற காலத்தில் செம்பங்குடி என்றும், இந்நாளில் செம்மங்குடி என்றாகியுள்ளது.

செம்பங்குடி நாகநாதசுவாமி திருக்கோவில் ஆலயம் புகைப்படங்கள்

ஆலயத்தின் முகப்பு வாயில்

முகப்பு வாயில் பலிபீடம், நந்தி

மகாவிஷ்ணு சந்நிதி

ஆலயத்தின் உட்புறத் தோற்றம்

வள்ளி தெய்வானையுடன் முருகர்

தல விருட்சத்தின் அடியில் சப்தமாதர்கள்

ஆதி கேது சந்நிதி

கற்பூரவல்லி அம்மன் சந்நிதி

தணிகைவேலவர் சந்நிதி