தேவார வைப்புத் தலங்கள்

வைப்புத் தலங்கள் இருப்பிடம் மற்றும் விபரங்கள்
பற்றிக் கூறும் இணையதளம்

மத்தியபுரீஸ்வரர் திருக்கோவில், பரப்பள்ளி (பரஞ்சேர்வழி)


தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்பரப்பள்ளி (இன்றைய நாளில் இத்தலம் பரஞ்சேர்வழி என்று வழங்குகிறது)
இறைவன் பெயர்மத்தியபுரீஸ்வரர், நட்டூர்நாதர்
இறைவி பெயர்சுகந்த குந்தளாம்பிகை, நட்டுவார் குழலியம்மை
பதிகம்திருநாவுக்கரசர் (6-71-1)
எப்படிப் போவது காங்கேயத்திலிருந்து வடக்கே சுமார் 9 கி.மீ. தொலைவில் இன்றைய நாளில் பரஞ்சேர்வழி என்று அறியப்படும் பரப்பள்ளி வைப்புத் தலம் உள்ளது. காங்கேயம் - சென்னிமலை பாதையில் சுமார் 8 கி.மீ. தொலைவு சென்று நாலு ரோடு நத்தக்காடையூர் பாதையில் 3 கி.மீ.ல் பரஞ்சேர்வழி ஊர் உள்ளது
ஆலய முகவரி அருள்மிகு மத்தியபுரீஸ்வரர் திருக்கோவில்
பரப்பள்ளி (பரஞ்சேர்வழி)
பரஞ்சேர்வழி அஞ்சல்
காங்கேயம் வட்டம்
திருப்பூர் மாவட்டம்
PIN - 638701

ஆலய குருக்கள் வீடு அருகில் இருப்பதால் தகவல் தெரிவித்து எந்நேரமும் தரிசிக்கலாம்.

பரப்பள்ளி வைப்புத் தலத்தைக் குறிப்பிடும் பதிகம்

திருநாவுக்கரசரின் 6-ம் திருமுறையில் 71-வது பதிகத்தில் 1-வது பாடலில் இந்த வைப்புத் தலத்தைப் பற்றிய குறிப்பு உள்ளது. இந்த திருத்தாண்டகத்தில் அப்பர் பெருமான் "பள்ளி" என முடியும் தலங்களை வகுத்து அருளிச் செய்தது கவனிக்கத்தக்கது.

பொருப்பள்ளி வரைவில்லாப் புரம் மூன்று எய்து
புலந்தழியச் சலந்தரனைப் பிளந்தான் பொன் 
சக்கரப்பள்ளி திருக்காட்டுப்பள்ளி கள்ளார்
கமழ் கொல்லி அறைப்பள்ளி கலவம் சாரல்
சிரப்பள்ளி சிவப்பள்ளி செம்பொன்பள்ளி
செழு நனிபள்ளி தவப்பள்ளி சீரார்
பரப்பள்ளி என்றென்று பகர்வோர் எல்லாம்
பரலோகத்து இனிதாகப் பாலிப்பாரே.

பொழிப்புரை :

மேருவை வில்லாகக் கொண்டு திரிபுரங்களை அம்பால் எய்தானது பொருப்பள்ளி, வருந்தி அழியுமாறு சலந்தரனைச் சக்கரத்தால் பிளந்தானது அழகிய சக்கரப்பள்ளி, திருக்காட்டுப்பள்ளி, மது நிறைந்து மலர்கள் மணம் கமழும் கொல்லியறைப்பள்ளி, மயில்கள் ஆடும் சாரலினை உடைய சிராப்பள்ளி, சிவப்பள்ளி, செம்பொன்பள்ளி, செழிப்புமிக்க நனிபள்ளி, தவப்பள்ளி,  புகழ்பொருந்திய பரப்பள்ளி என்று இத்தலப்பெயர்களைப் பலகாலும் சொல்லுவார் எல்லாரும் மேலான தேவருலகை அடைந்து அதனை இனிமை மிகக் காப்பாராவார் .

இத்தலம் பழங்காலத்தில் நட்டூர் (நடு ஊர்) என்று பெயர் பெற்றிருந்தது. நடு ஊர் என்பதற்கு வடமொழியில் மத்யபுரி என்று பெயர். ஆகையால் இறைவன் வடமொழியில் மத்யபுரீஸ்வரர் என்றும், தமிழில் நட்டூர்நாதர் என்றும் அழைக்கப்படுகிறார். பழங்காலத்தில் ஊர் நட்டூர் எனவும், ஆலயம் பரப்பள்ளி எனவும் வழங்கப்பட்டு வந்துள்ளது. பரன் என்றால் சிவன் என்று பொருள். பரன் உறையுமிடம் பரப்பள்ளி ஆயிற்று. கிழக்கு நோக்கியுள்ள இவ்வாலயத்தில் இறைவன் சுயம்புலிங்கமாக சதுரபீட ஆவுடையாரில் காட்சி தருகிறார். அம்பாள் சுகந்த குந்தளாம்பிகை சந்நிதி இறைவன் சந்நிதிக்கு இடப்புறம் அமைந்துள்ளது. கோவில் கருங்கல் திருப்பணயாகும்.

இவ்வூரில் பல குடும்பத்தினருக்கும் குலதெய்வமாக விளங்கும் கரிய காளியம்மன் கோவிலும், அருகில் பெருமாள் கோவிலும் உள்ளன.


நாலு ரோடு சந்திப்பு, நத்தக்காடையூர் சாலை மற்றும் பரஞ்சேர்வழி இருப்பிடம் காட்டும் வரைபடம்
Map by google