தேவார வைப்புத் தலங்கள்

வைப்புத் தலங்கள் இருப்பிடம் மற்றும் விபரங்கள்
பற்றிக் கூறும் இணையதளம்

பஞ்சவர்னேஸ்வரர் திருக்கோவில், மாணிகுடி


தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்மாணிகுடி (இன்றையநாளில் மணிக்குடி என்று பெயர்)
இறைவன் பெயர்பஞ்சவர்னேஸ்வரர்
இறைவி பெயர்பெரியநாயகி, பிரஹன்நாயகி
பதிகம்அப்பர் (6-71-3)
எப்படிப் போவது கும்பகோணம் - மயிலாடுதுறை சாலையில் ஆடுதுறை அடைந்து அங்கிருந்து திருப்பனந்தாள் செல்லும் சாலையில் சென்று மாணிகுடி தலத்தை அடையலாம். ஆடுதுறை பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 8 கி.மீ. தொலைவு.
ஆலய முகவரி அருள்மிகு பஞ்சவர்னேஸ்வரர் திருக்கோவில்
மணிக்குடி
திருவிடைமருதூர் வட்டம்
தஞ்சாவூர் மாவட்டம்
PIN - 612504

இவ்வாலயம் தினந்தோறும் காலை 8 மணி முதல் பகல் 10 மணி வரையிலும். திறந்திருக்கும். ஒரு கால பூஜை மட்டுமே நடைபெறுகிறது.

மாணிகுடி வைப்புத் தலத்தைக் குறிப்பிடும் பதிகம்

திருநாவுக்கரசரின் 6-ம் திருமுறையில் 71-வது பதிகத்தில் 3-வது பாடலில் இந்த வைப்புத் தலத்தைப் பற்றிய குறிப்பு உள்ளது.

நற்கொடிமேல் விடையுயர்த்த நம்பன் செம்பங்குடி
நல்லக்குடி நளி நாட்டியத்தான்குடி
கற்குடி தென்களக்குடி செங்காட்டங்குடி
கருந்திட்டைக்குடி கடையக்குடி காணுங்கால்
விற்குடி வேள்விக்குடி நல் வேட்டக்குடி
வேதிகுடி மாணிகுடி விடைவாய்க்குடி
புற்குடி மாகுடி தேவன்குடி நீலக்குடி
புதுக்குடியும் போற்ற இடர் போகுமன்றே.

பொழிப்புரை :

நல்ல இடபக் கொடியை மேலே உயரத்தூக்கியவனும், நம்புதற்குரியவனுமாகிய 
சிவபெருமானுடைய செம்பங்குடி, நல்லக்குடி, பெருமைமிக்க நாட்டியத்தான்குடி, 
கற்குடி, தென்களக்குடி, செங்காட்டங்குடி, கருந்திட்டைக்குடி, கடையக்குடி ஆகியவற்றோடு 
ஆராயுங்கால் குடியில் முடியும் ஊர்களாகிய விற்குடி, வேள்விக் குடி, நன்மமை மிகு 
வேட்டக்குடி, வேதிகுடி, மாணிகுடி, விடைவாய்க்குடி, புற்குடி, மாகுடி, 
தேவன்குடி, நீலக்குடி, புதுக்குடி என்பனவற்றையும் புகழ்ந்து கூறத் துன்பம் நீங்கும் .