தேவார வைப்புத் தலங்கள்

வைப்புத் தலங்கள் இருப்பிடம் மற்றும் விபரங்கள்
பற்றிக் கூறும் இணையதளம்

காசி விஸ்வநாதர் திருக்கோவில், வாரணாசி


தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்வாரணாசி (காசி)
இறைவன் பெயர்விஸ்வநாதர்
இறைவி பெயர்விசாலாட்சி, அன்னபூரணி
பதிகம்அப்பர் (6-70-6, 6-7-11), சுந்தரர் (2-39-7)
எப்படிப் போவது உத்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள வாரணாசிக்குச் செல்ல இந்தியாவின் அனைத்து பகுதிகளிலிருந்தும் ரயில் போக்குவரத்து வசதி உள்ளது. மாநில தலைநகர் லக்னோவில் இருந்து 320 கி.மீ., தூரத்தில் இத்தலம் அமைந்துள்ளது.
ஆலய முகவரி அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோவில்
வாரணாசி
உத்திரப் பிரதேசம்
PIN - 221001

இவ்வாலயம் தினந்தோறும் காலை 4 மணி முதல் இரவு 11-30 மணி வரையிலும் தொடர்ந்து திறந்திருக்கும்

வாரணாசி வைப்புத் தலத்தைக் குறிப்பிடும் பதிகம்

வாரணாசி அப்பர் மற்றும் சுந்தரர் தேவாரத்தில் வைப்புத் தலமாக குறிப்பிடப்பட்டுள்ள சிறப்பினை உடைய தலமாகும்.

சம்பந்தரின் 2-ம் திருமுறையில் 39-வது பதிகத்தில் 7-வது பாடலில் இந்த வைப்புத் தலத்தைப் பற்றிய குறிப்பு உள்ளது. இந்தப் பதிகம் ஷேத்திரக்கோவை என்று கூறப்படும்.

மாட்டூர் மடப் பாச்சிலாச்சிராமம் மயிண்டீச்சரம் வாதவூர் வாரணாசி
காட்டூர் கடம்பூர் படம்பக்கம் கொட்டும் கடல் ஒற்றியூர் மற்று உறையூர் அவையும்
கோட்டூர் திருவாமாத்தூர் கோழம்பமும்  கொடுங்கோவலூர் திருக் குணவாயில்.
குறிப்புரை :
இப்பாடலின்  முழுப்பகுதி கிடைக்கவில்லை.

பொழிப்புரை :
மாட்டூர் பாச்சில் ஆச்சிராமம், மயிண்டீச்சரம், வாதவூர், வாரணாசி, காட்டூர், கடம்பூர், ஒற்றியூர், கோட்டூர், திருவாமாத்தூர், கோழம்பம், கொடுங்கோவலூர் முதலியன இறைவன் உறையும் சிறந்த தலங்கள்.

திருநாவக்கரசரின் 6-ம் திருமுறையில் 70-வது பதிகத்தில் 6-வது பாடலில் இந்த வைப்புத் தலத்தைப் பற்றிய குறிப்பு உள்ளது.

மண்ணிப் படிக்கரை வாழ்கொளி புத்தூர்		
வக்கரை மந்தாரம் வாரணாசி
வெண்ணி விளத்தொட்டி வேள்விக்குடி
விளமர் விராடபுரம் வேட்களத்தும்
பெண்ணை அருட்டுறை தண் பெண்ணாகடம்
பிரம்பில் பெரும்புலியூர் பெருவேளூரும்
கண்ணை களர் காறை கழிப்பாலையும்
கயிலாய நாதனையே காணலாமே.

பொழிப்புரை :
மண்ணிப்படிக்கரை, வாழ்கொளிபுத்தூர், வக்கரை , மந்தாரம், வாரணாசி, வெண்ணி, விளத்தொட்டி, வேள்விக்குடி, விளமர், விராடபுரம், வேட்களம், பெண்ணையாற்றங்கரையிலுள்ள அருட்டுறை, பெண்ணாகடம், பிரம்பில், பெரும்புலியூர், பெரு வேளூர், கண்ணை, களர், காறை, கழிப்பாலை, முதலிய இடங்களில் கயிலாய நாதனைக் காணலாம் .

திருநாவக்கரசரின் 6-ம் திருமுறையில் 7-வது பதிகத்தில் 11-வது பாடலில் இந்த வைப்புத் தலத்தைப் பற்றிய குறிப்பு உள்ளது. இத்தலம் திருவதிகை வீரட்டம் தலத்திற்குரியது.

தேனார் புனற்கெடில வீரட்டமும்		
திருச்செம்பொன்பள்ளி திருப்பூவணம்
வானோர் வணங்கும் மணஞ்சேரியும்
மதில் உஞ்சை மாகாளம் வாரணாசி
ஏனோர்கள் ஏத்தும் வெகுளீச்சரம்
இலங்கார் பருப்பதத்தோடு ஏணார் சோலைக்
கானார் மயிலார் கருமாரியும்
கறைமிடற்றார் தம்முடைய காப்புக்களே.

பொழிப்புரை :
அதிகை வீரட்டம், செம்பொன்பள்ளி, பூவணம், தேவரும் வணங்கும் மணஞ்சேரி, மதில்களை உடைய உஞ்சை மாகாளம், வாரணாசி மற்றவர்களும் வழிபடும் வெகுளீச்சரம், விளங்கும் சீசைலம், பெருமையையுடைய சோலைகளிலே காட்டில் தங்கக் கூடிய மயில்கள் பொருந்தியிருக்கும் கருமாரி என்பன நீலகண்டப் பெருமானுடைய திருத்தலங்களாம் .

இந்துவாகப் பிறந்த ஒவ்வொருவரும் தம் வாழ்நாளில் ஒரு முறையேனும் காசிக்குச் சென்று வழிபட வேண்டிய புண்ணிய தலம் என்று பெருமை இத்தலத்திற்கு உண்டு. இந்தியாவிலுள்ள 12 ஜோதிர்லிங்கத் தலங்களில் ஒன்றாகவும், முக்தி தரும் 7 தலங்களில் ஒன்றாகவும் வாரணாசி என்றும், காசி என்றும் அறியப்படும் இத்தலம் விளங்குகிறது. தமிழ்நாட்டிலுள்ள பழம் பெருமை வாய்ந்த நகரமான மதுரையைப் போன்று இப்போதும் உயிருடன் இருக்கும் பழமையான நகரங்களில் வாரணாசியும் ஒன்று

இறந்த முன்னார்களுக்கு பிதுர்க்கடன் செய்ய வேண்டிய தலங்களில் மிகவும் முக்கியமானதாக வாரணாசி கருதப்படுகிறது. இங்கே ஓடும் புண்ணிய நதியான கங்கையில் 84 படித்துறைகள் உள்ளன. இவற்றுள் 1. அசிசங்கம படித்துறை, 2. தசாசுவமேத படித்துறை, 3. மணிகர்ணிகா படித்துறை, 4. பஞ்சகங்கா படித்துறை, 5. வருணா சங்கம படித்துறை ஆகிய ஐந்தும் மிக சிறப்புடையவை. இந்த 5 படித்துறைகளில் நீராடுவது / நீரைத் தெளித்துக் கொள்வதை பஞ்சதீர்த்த ஸ்நானம் என்று சிறப்பாகக் கூறப்படுகிறது.

வருணா, அசி ஆகிய இரு நதிகள் சங்கமம் ஆகும் இடத்தில் இத்தலம் அமைந்துருப்பதால் வாரணாசி என்றாயிற்று. இத்தலத்தில் காலபைரவர் சிறப்பானவர். அவர் காவலில் இத்தலம் இருப்பதாக ஐதீகம். இத்தலத்தில் காசி விஸ்வநாதர் தங்க விமானத்துடன் காட்சி தருகிறார். மூலவர் மரகத கல்லால் ஆனவர். இங்கு மூலவரை நம் விருப்பப்படி தேன், பால், தயிர், தண்ணீர், வில்வம், விபூதி கொண்டு அபிஷேகம் செய்து வழிபடலாம். இத்தலத்தில் இரவு 7-30 மணி அளவில் விசுவநாதர் சந்நிதியில் நடைபெறும் சப்தரிஷி பூசை தரிசிக்கத் தக்கது.

இத்தலத்தில் அம்பாள் விசாலாட்சி தனிக்கோவிலில் தனி சந்நிதி கொண்டு அருள் செய்கிறாள். இக்கோவில் நகரத்தாரின் பொறுப்பில் உள்ளது. அர்த்தசாம வழிபாடும் அவர்களாலேயே நடத்தப்பெறுகின்றது. மற்றொரு அம்பாள் அன்னபூரணியும் தனிக்கோயில் கொண்டுள்ளாள். அவள் ஒரு கையில் தங்கத்தாலான அன்ன பாத்திரம், மறுகையில் தங்கத்தாலான அகப்பை ஏந்தியிருக்க, அருகில் பிச்சையோடு ஏந்தியவாறு பிட்சாடனர் வெள்ளி வடிவில் தரிசனம் தருகின்றார். அம்பிகையின் சக்தி பீடங்களில் குண்டலம் விழுந்த பீடமாக இத்தலம் கருதப்படுகிறது.