Shiva temples of Tamilnadu

தேவார பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்
பாடல் பெற்ற தலம் கோவில் விபரங்கள் தமிழ்நாடு வர ஆலோசனைகள்

தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்திருக்கழிப்பாலை (தற்போது சிவபுரி என்று வழங்குகிறது)
இறைவன் பெயர்பால்வண்ண நாதர்
இறைவி பெயர்வேதநாயகி
பதிகம்திருநாவுக்கரசர் - 5,
திருஞானசம்பந்தர் - 2
சுந்தரர் - 1
எப்படிப் போவது சிதம்பரத்தில் இருந்து 13 கி.மீ. தென்கிழக்கே கொள்ளீடம் நதியின் வடகரையில் காரைமேடு என்ற இடத்தில் இருந்து வந்த இந்த சிவஸ்தலம் ஒரு சமயம் கொள்ளிடத்தில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக சேதம் அடைந்த போது அருகில் உள்ள திருநெல்வாயல் என்ற மற்றொரு பாடல் பெற்ற சிவஸ்தலம் கோவிலின் அருகே ஒரு புதிய ஆலயத்தின் உள்ளே மூலவர் பால்வண்ண நாதர் பிரதிஷ்டை செய்யப்பட்டார். திருநெல்வாயல் சிவஸ்தலத்தில் இருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில் திருக்கழிப்பாலை ஆலயம் உள்ளது.
ஆலய முகவரிஅருள்மிகு பால்வண்ண நாதர் திருக்கோவில்
திருக்கழிப்பாலை - சிவபுரி
சிவபுரி அஞ்சல்
வழி அண்ணாமலை நகர்
சிதம்பரம் வட்டம்
கடலூர் மாவட்டம்
PIN - 608002

ஆலய அர்ச்சகர் வீடு அருகில் உள்ளது. அவரை தொடர்பு கொண்டு எந்நேரமும் தரிசிக்கலாம்.
Tirukazhippalai route map

சிதம்பரத்தில் இருந்து திருக்கழிப்பாலை
செல்லும் வழி வரைபடம்
Map courtesy by: Google Maps

இத்தலத்தில் சிவலிங்கப் பெருமான வெண்ணிறமுடையவராக விளங்கிறார். அதனாலேயே இறைவன் பால்வண்ண நாதேஸ்வரர் என்ற திருநாமத்துடன் இத்தலத்தில் அருட்காட்சி தருகிறார். வன்மீக முனிவர் இத்தலத்து இறைவனை வழிபட்டுள்ளார். கொள்ளிட நதியில் ஏற்பட்ட வெள்ளத்தில் தேவார காலத்து பழைய ஆலயம் அடித்துச் செல்லப்பட்டதால் அக்கோவிலில் இருந்த பால்வண்ணநாதேஸ்வரர் சிதம்பரத்திலிருந்து தென்கிழக்குத் திசையில் சுமார் 5 கி.மீ. தொலைவிலுள்ள சிவபுரி என்றும் திருநெல்வாயல் என்றும் வழங்கும் மற்றொரு சிவஸ்தலத்தில் இருந்து தெற்கே தனி ஆலயத்தில் தனது மற்ற பரிவார தேவதைகளுடன் தற்போது எழுந்தருளியுள்ளார்.

3 நிலை ராஜகோபுரத்துடன் இவ்வாலயம் காட்சி அளிக்கிறது. வாயிலின் இருபுறங்களிலும் அதிகார நந்தியர் துணைவியருடன் தரிசனம் தருகின்றனர். கொடிமரம் ஏதுமில்லை. பிராகாரத்தில் சூரியன், விநாயகர், கிராதமூர்த்தி, மகாவிஷ்ணு, சுப்பிரமணியர், மகாலட்சுமி, நவக்கிரகம், காலபைரவர், சந்திரன் சந்நிதிகள் உள்ளன. உள்பிரகார நுழைவு வாசலின் இருபுறமும் அதிகார நந்தியர் தமது துணைவியருடன் உள்ளனர். உள் மண்டபத்துள் சென்றால் துவாரபாலகர்களைத் தரிசிக்கலாம். மண்டபத்தின் வலதுபுறம் தெற்கு நோக்கிய அம்பாள் சந்நிதி உள்ளது. நடராசசபையில் சிவகாமி அம்மையின் திருமேனி தன் தோழியர் இருவர் சூழ ஒரே பீடத்தில் காட்சி தருகிறாள். துவார விநாயகரை, தண்டபாணியைத் தொழுது உட்சென்றால் மூலவர் தரிசனம். கபிலமுனிவர் அவர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்ட லிங்கம் பெயருக்கேற்ப வெண்ணிறமாக சுயம்பு மூர்த்தியாக மிகச் சிறிய பாணத்துடன் காட்சியளிக்கிறது. மேற்புறம் சதுரமாக, வழித்தெடுத்தாற்போல் நடுவில் பள்ளத்துடன் அதிசயமான அமைப்புடன் இலிங்கத் திருமேனி காட்சி தருகின்றது. அபிஷேகத்தின்போது பால் மட்டும்தான் இப்பள்ளத்தில் தேங்கும். மற்ற அபிஷேகங்கள் அனைத்தும் ஆவுடையாருக்குத்தான் நடைபெறுகிறது.

கபிலமுனிவர் ஒவ்வொரு சிவத்தலங்களாக தரிசித்து வரும் போது, வில்வ வனமாக இருந்த இப்பகுதியில் தங்கி சிவபூஜை செய்ய நினைத்தார். இப்பகுதியில் பசுக்கள் தானாக பால் சுரந்து வந்த காரணத்தினால் மணல் முழுவதும் வெண்ணிறமாக காட்சியளித்தது. முனிவர் இந்த வெண்ணிற மணலை எடுத்து லிங்கம் அமைத்து வழிபாடு செய்தார். ஒருமுறை அந்த வழியாக வந்த மன்னனது குதிரையின் கால் குளம்பு, மணல் லிங்கத்தின் மீது பட்டு லிங்கம் பிளந்து விடுகிறது. வருந்திய முனிவர் பிளவுபட்ட லிங்கத்தை எடுத்துவிட்டு வேறு லிங்கம் பிரதிஷ்டை செய்ய நினைத்த போது, இறைவன் பார்வதி சமேதராக காட்சி தந்து, "முனிவரே! பசுவின் பால் கலந்த வெண்ணிற மணலில் செய்த லிங்கம் பிளவு பட்டிருந்தாலும் அதை அப்படியே பிரதிஷ்டை செய்து விடுங்கள். காமதேனுவே பசுவடிவில் இங்கு வந்து பால்சொறிந்துள்ளது. எனவே இந்த லிங்கத்தை வழிபடுபவர்கள் சகல செல்வங்களும் அடைவார்கள்" என்றார் இறைவன். இன்றும் கூட இக்கோயிலின் லிங்கம் வெண்ணிறமாகவே உள்ளது என்பது சிறப்பம்சமாகும். குதிரையின் கால் குளம்பு பட்டு பிளந்து போன வெண்ணிற லிங்கத்திற்கு தான் இன்றும் பூஜை நடக்கிறது. லிங்கத்திற்கு பின்னால் சிவனும் பார்வதியும் திருமணக்கோலத்தில் உள்ளனர்.

இத்தலத்திலுள்ள பைரவர் சந்நிதியும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. காசியில் உள்ளதைப் போல வடிவமைக்கப்பட்டுள்ள இந்த பைரவரை வணங்கினால் காசியிலுள்ள பைரவரை வணங்கிய பலன் கிட்டும் என்பது ஜதீகம். இப்பகுதியிலுள்ள மக்கள் இக்கோவிலை பைரவர் கோவில் என்றே அழைக்கின்றனர். தேய்பிறை அஷ்டமி தினத்தில் இந்த பைரவருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.

Top
பால்வண்ண நாதர் ஆலயம் புகைப்படங்கள்
ஆலயத்தின் உள்ளிருந்து 3 நிலை இராஜகோபுரம்
மூலவர் சந்நிதி நுழைவாயில்
கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி
வள்ளி தெய்வானையுடன் முருகர்
தலை திரும்பி காட்சியளிக்கும் நந்தி
காலபைரவர் சந்நிதி
பிராகாரத்தில் சிலா உருவங்கள்
ஆலயத்தின் உட்புறத் தோற்றம்