Shiva temples of Tamilnadu

தேவார பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்
பாடல் பெற்ற தலம் கோவில் விபரங்கள் தமிழ்நாடு வர ஆலோசனைகள்

தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்திருமயேந்திரப்பள்ளி
இறைவன் பெயர்திருமேனியழகர், அந்தமிலா அழகர்
இறைவி பெயர்வடிவாம்பிகை
பதிகம்திருஞானசம்பந்தர் - 1
எப்படிப் போவது சிதம்பரத்தில் சீர்காழி சாலையில் கொள்ளிடம் சென்று, அங்கிருந்து ஆச்சாள்புரம் வழியாக சென்று நல்லூர் - முதலைமேடு ஆகிய ஊர்களைக் கடந்து திருமயேந்திரப்பள்ளி சிவஸ்தலம் அடையலாம். அருகில் உள்ள மற்றொரு சிவஸ்தலம் திருநல்லூர் பெருமணம் (ஆச்சாள்புரம்) 3 கி. மீ. தொலைவில் உள்ளது. சிதம்பரம், சீர்காழியிலிருந்து மயேந்திரப்பள்ளிக்கு ஆச்சாள்புரம் வழியாக நகரப் பேருந்துகள் செல்கின்றன. மகேந்திரப்பள்ளி பேருந்து நிறுத்தத்தில் இருந்து சுமார் 1/2 கி.மீ. தொலைவில் ஆலயம் உள்ளது.
ஆலய முகவரிஅருள்மிகு திருமேனியழகர் திருக்கோவில்
மயேந்திரப்பள்ளி, மயேந்திரப்பள்ளி அஞ்சல்
வழி ஆச்சாள்புரம்
சீர்காழி வட்டம்
மயிலாடுதுறை மாவட்டம்
PIN - 609101

இவ்வாலயம் தினந்தோறும் காலை 9 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் 7 மணி வரையிலும் திறந்திருக்கும்.

கோவில் அமைப்பு: இவ்வாலயம் கொள்ளிட நதியின் தென்கரையில் அமைந்துள்ளது. இத்தலத்திலிருந்து 2 கி.மி. தொலைவில் கொள்ளிடம் கடலில் கலக்கிறது. இந்திரன் (மகேந்திரன்) வழிபட்டதால் இத்தலத்திற்கு மகேந்திரப்பள்ளி என்று பெயர். திருமேனியழகர் ஆலயம் கிழக்கு நோக்கி மூன்று நிலைகளை உடைய சிறிய இராஜ கோபுரத்துடன் காட்சி அளிக்கிறது. கோவில் எதிரே மயேந்திர தீர்த்தம் உள்ளது. இராஜகோபுரம் வழியே உள்ளே சென்று வெளிப் பிரகாரம் வலம் வந்தால் விநாயகர், காசிவிசுவநாதர், ஸ்ரீதேவி, பூதேவியுடன் திருமால், சிவலிங்கம், பைரவர், சூரியன், சந்திரன் சந்நிதிகள் ஆகியவற்றைக் காணலாம். பிரகார வலம் முடித்து அடுத்துள்ள வெளவால் நெத்தி மண்டபத்தை அடைந்தால் வலதுபுறம் நின்ற திருக்கோலத்தில் தெற்கு நோக்கி காட்சி தரும் அம்பாள் சந்நிதி உள்ளது. மேலும் உள்ளே சென்றால் வலதுபுறம் நடராசசபையில் நடராஜருடன் சிவகாமியும் மாணிக்கவாசகரும் உடன் காட்சியளிக்கின்றனர். நேரே சிவலிங்கத் திருமேனியாக மூலவர் கிழக்கு நோக்கு எழுந்தருளியுள்ளார். பங்குனி மாதத்தில் ஒரு வார காலம் லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழுகிறது. ஆலயத்தில் நவக்கிரக சன்னதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. விநாயகருக்கு தனிசன்னதி இருக்கிறது. இவருக்கு இருபுறமும் ராகு, கேது இருவரும் உள்ளனர்.

Tirumayandrapalli route map

கொள்ளிடத்தில் இருந்து திருமயேந்திரப்பள்ளி செல்லும் வழி வரைபடம்
Map courtesy by: Google Maps

இத்தல இறைவனை சூரியன், சந்திரன், இந்திரன், பிரம்மா ஆகியோர் வழிபட்டுள்ளனர். இதை சம்பந்தரின் பதிகத்திலுள்ள 6-வது பாடலிலுள்ள "சந்திரன் கதிரவன் தகுபுகழ் அயனொடும் இந்திரன் வழிபட" என்னும் பதிக அடிகள் புலப்படுத்தும். ஆலயத்தின் தீர்த்தம் இந்திர திர்த்தம் என்கிற மகேந்திர தீர்த்தம். இது கோபுர வாயிலுக்கு எதிரே வெளியே உள்ளது. இந்த தீர்த்தத்தில் ஒரு மண்டலம் நீராடி இறைவனை வழிபடுவேர் தீராத நோயும் நீங்கி நலம் பெறுவர் என்பது ஐதீகம். தலமரம் வில்வம்.

இத்தலத்து முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது ஓரு பாடல் உள்ளது. இத்தலத்தில் முருகப்பெருமான் சிங்காரவேலனாக ஒரு திருமுகத்துடனும் நான்கு திருக்கரங்களுடனும் தனது தேவியர் இருவருடன் நீன்ற கோலத்தில் எழுந்தருளியுள்ளார்.

திருமேனியழகர் ஆலயம் புகைப்படங்கள்
கோபுர வாயிலுக்கு எதிரிலுள்ள மகேந்திர தீர்த்தம்
3 நிலை இராஜகோபுரம்
சுவாமி சந்நிதி விமானம்
அம்பாள் சந்நிதி விமானம்
அம்பாள் வடிவாம்பிகை சந்நிதி
ஆலயத்தின் உட்புறத் தோற்றம்
சுவாமி சந்நிதி முன் நந்தி, பலிபீடம்