தலப் பெயர் காரணம்: சிவபெருமான் இத்தலத்தில் பிரளய வெள்ளத்தை ஓர் அம்பினால் சுழித்துப் பாதாளத்தில் செலுத்தியதால் இவ்வூர் திருச்சுழியல் என்று அழைக்கப்பட்டது. ஒவ்வொரு யுகத்திலும் இவ்வூரில் பெருவெள்ளம் ஏற்பட்டு பேரழிவு உண்டாவதுண்டு. துவாபர யுகத்தில் பேரழிவு ஏற்பட்ட போது இப்பகுதியை ஆண்டுவந்த மன்னன் இந்த இயற்கை அழிவிலிருந்து இவ்வூரைக் காப்பாற்ற வேண்டிச் சிவபெருமானை வேண்டினான். அவனது வேண்டுதலை ஏற்றுக் கொண்ட சிவனும் தனது சூலத்தால் தரையில் குத்தி நிலத்தில் ஒரு பெரிய ஓட்டையிட்டு; வெள்ளத்தைப் பூமியில் புகுமாறு செய்தார். சிவபெருமானின் சூலத்தைச் சுற்றி வெள்ளம் சுழித்துச் சென்றதால் "சுழி" என்று பெயர் பெற்றுப் பின்னர் "திரு" எனும் அடைமொழி சேர்ந்து "திருச்சுழியல்" ஆயிற்று என் தலபுராணம் விவரிக்கிறது.
கோவில் அமைப்பு: முகப்பு வாயில் வழியே உள்ளே துழைந்தால் விசாலமான வெளி முற்றம் காணப்படுகிறது. நேரே அம்பாள் சந்நிதி கோபுரமும், அதன் வலது பக்கம் இறைவன் சந்நிதி கோபுரமும் காணலாம். சுவாமி சந்நிதி கோபுத்திற்கு முன்னால ஒரு கற்தூண்களாலான மண்டபம் உள்ளது. இந்த மண்டபத்திற்கு முன இவ்வாலயத்தின் ஒரு தீர்த்தமான கவ்வைக்கடல் (ஒலிப்புணரி) உள்ளது. (பிப்ரவரி 2024 ல் இந்த ஆலயத்தை தரிசித்த போது, இந்த தீர்த்தம் முற்றிலும் வறண்டு இருந்தது. இந்த நீர்நிலைக்கு வரும் தண்ணீருடன் அசுத்தமான நீர் கலப்பதால், இந்த கோவில் குளத்திற்கு தண்ணீர் வருவதை உள்ளாட்சி நிர்வாகம் தடுத்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்). முதல மண்டப வாயில் வழியே உள்ளே நுழைந்தால் நாம் காண்பது கம்பத்தடி மண்டபம். இதில் பலிபீடம் கொடிமரம் ஆகியவற்றைக் காணலாம். நவக்கிரக சந்நிதி, வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர், விநாயகர் ஆகியோரின் சந்நிதிகளும் இங்குள்ளன. இம்மணடபம் சுவாமி மற்றும் அம்பாள் சந்நிதி இரண்டிற்கும் முன்னால் இணைந்து காணப்படுகிறது. இந்த கம்பத்தடி மண்டபத்திலுள்ள தூண்களில் அநேக சிற்பங்கள் காணப்படுகின்றன. ஒரு தூணில் ஆஞ்சனேயரின் சிற்பத்தையும் காணலாம்.
கம்பத்தடி மண்டபத்திலுள்ள தூண்களில் உள்ள சிற்பங்கள்.
இம்மண்டபத்தை அடுத்துள்ளது ஏழுநிலை கோபுரம். கோபுர வாயில் வழியே உள் நுழைந்து நந்தியை வணங்கி விட்டு சபா மண்டபம், அந்தராள மண்டபம், அர்த்த மண்டபம் ஆகியவற்றைக் கடந்து இறைவன் கருவறையை அடையலாம். இறைவன் திருமேனிநாதர் சுயம்புலிங்க வடிவில் சதுர ஆவுடையார் மீது கிழக்கு நோக்கி அருட்காட்சி தருகிறார். கருவறை அகழி அமைப்புடையது. கருவறை சுற்றுப் பிரகாரத்தில் உஷா, பிரத்யுஷா சமேத சூரியன், அறுபத்துமூவர், சந்தானாசாரியர், சப்தமாதர்கள் சந்நிதிகள் உள்ளன. மேலும் தென்மேற்கில் விநாயகர், மேற்கில் சோமாஸ்கந்தர், காசி விசுவநாதர், விசாலாட்சி, சுழிகைக் கோவிந்தர், வடமேற்கில் முருகன் ஆகியோர் எழுந்தருளி உள்ளனர். கருவறை சுற்றுச் சுவரில் கோஷ்ட மூர்த்தங்களாகத் தட்சிணாமூர்த்தி, லிங்கோற்பவர், துர்க்கை, பிரம்மா ஆகியோர் உள்ளனர். சபா மண்டபத்தில் நடராசர் சந்நிதி உள்ளது. இங்கு நடராசர் மூலவராகச் சிலாரூபத்தில் கம்பீரமாகக் காட்சி தருகிறார். அருகே நடராசர், சிவகாமி, பதஞ்சலி, வியாக்ரபாதர் ஆகியோரின் உற்சவ மூர்த்திகள் உள்ளனர்.
கௌதம முனிவர் தன் மனைவி அகலிகையுடன், ஸ்ரீ நடராஜரது சந்நிதிக்கு எதிரில் (அறுபத்து மூவர் நடுவில்) விளங்குவதை காணலாம். இறைவன் இவர்களுக்கு மார்கழி மாதம் திருவாதிரையில் ஆனந்த தாண்டவமும், பங்குனி மாதத்தில் பூர நக்ஷத்திரத்தில் திருக்கல்யாண கோலத்தில் அம்பிகையுடன் காட்சி தந்தார். இதன் நினைவாக வருடம் தோறும் ப்ரஹ்மோத்சவம் பங்குனி மாதம் நடை பெறுகிறது.
சுவாமி சந்நிதிக்கு தென்புறம் சகாயவல்லி என்றும், துனைமாலை நாயகி என்றும் அழைக்கப்படும் இறைவியின் கோவில் தனி சந்நிதியாக இருக்கிறது. இங்கும் கொடிமரம், பலிபீடம், நந்தி ஆகியவை உள்ளன. இவற்றைக் கடந்து கருவறை உள்ளே சென்றால் இறைவி கிழக்கு நோக்கி காட்சி தருகிறாள். இறைவியின் எதிரில் உள்ள மண்டபத்தின் மேற்புறத்தில் ஸ்ரீ சக்கரம் கல்லில் வடிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளது.
சுவாமி, அம்பாள் இரு சந்நிதிகளையும் சேர்த்து வெளிப் பிரகாரம் சுற்றி வரும் போது தென்மேற்கு மூலையில் அண்டபகிரண்ட விநாயகர் சந்நிதி உள்ளது. அதையடுத்து மேற்குப் பிரகாரத்தில் தலமரமான புன்னை மரக்கன்று வைத்து வளர்க்கப்படுகிறது. அதையடுத்து வடமேற்கு மூலையில் பிரளயவிடங்கர் சந்நிதி அமைதுள்ளது. இத்தலத்தில் ஏற்பட்ட பிரளய வெள்ளத்தை அடக்கியவர் இவர். மேலும் வெளிப் பிரகாரம் சுற்றி வரும்போது வடகிழக்கு மூலையில் தண்டபாணி சுவாமி சந்நிதி இருக்கிறது. சந்நிதி முன கொடிமரம், பலிபீடம், மயில் உள்ளன.
இத்திருத்தலத்தில் திருமால், இந்திரன், பிரம்மன், சூரியன், கௌதமர், அகலிகை, கண்ணுவமுனிவர், அருச்சுனன், சேரமான் பெருமாள் ஆகியோர் வழிபட்டுப் பேறு பெற்றனர் என்பது சிறப்பு. இத்தலத்தில் பூமிதேவி இறைவனை வழிபட்டிருப்பதால் இறைவனுக்கு பூமிநாதசுவாமி என்ற பெயரும் உண்டு. ஆண்டுக்கு இருமுறை சூரியஒளி மூலவரின் திருமேனி மீது விழுமாறு கருவறை அமைக்கப்பட்டிருக்கிறது.
ஸ்ரீ ரமண மஹரிஷி அவதரித்த ஸ்தலம் திருச்சுழியல். அவர் அவதரித்த இல்லத்தை, திருச்சுழியல் ஆலயத்திற்கு மிக அருகில், இன்றும் இங்கு காணலாம்.
சுந்தரர் இயற்றியுள்ள இத்தலத்திற்கான இப்பதிகம் 7-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது.