தகவல் பலகை | |
---|---|
சிவஸ்தலம் பெயர் | திருதலைச்சங்காடு |
இறைவன் பெயர் | சங்காரண்யேஸ்வரர் |
இறைவி பெயர் | சௌந்தரநாயகி, பிரஹத் சுந்தராம்பிகை |
பதிகம் | திருஞானசம்பந்தர் - 1 |
எப்படிப் போவது | சீர்காழியில் இருந்து திருக்கடையூர் செல்லும் சாலை வழியில் சுமார் 16 கி.மீ. தொலைவில் தலைச்சங்காடு உள்ளது. மயிலாடுதுறையில் இருந்தும் சுமார் 21 கி.மீ. தொலைவிலுள்ள இத்தலத்தை அடையலாம். அருகில் திருஆக்கூர் என்ற பாடல் பெற்ற ஸ்தலம் இருக்கிறது. 108 திவ்யதேசங்களில் ஒன்றான திருதலைச்சங்க நான்மதியம் என்ற கோவிலும் சிவன் கோவிலில் இருந்து அருகாமையில் உள்ளது. திருக்கடையூரில் இருந்து சுமார் 8 கி.மீ. வடக்கே பயணம் செய்தும் இத்தலத்தை அடையலாம். |
ஆலய முகவரி | அருள்மிகு சங்காரண்யேசுவரர் திருக்கோயில் தலைச்சங்காடு ஆக்கூர் அஞ்சல் தரங்கம்பாடி வட்டம் மயிலாடுதுறை மாவட்டம் PIN - 609301 இவ்வாலயம் தினந்தோறும் காலை 8 மணி முதல் பகல் 10 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 7-30 மணி வரையிலும் திறந்திருக்கும். ஆலய குருக்கள் வீடு அருகில் இருப்பதால் அவரை தொடர்பு கொண்டு எந்நேரமும் தரிசிக்கலாம். ஆலய அர்ச்சகர் தொலைபேசி: 04364 280757 |
சீர்காழியில் இருந்து தலைச்சங்காடு சிவாலயம் செல்லும் வழி வரைபடம்
Map courtesy by: Google Maps
கோச்செங்கட் சோழனால் யானை நுழைய முடியாத அளவுக்கு வாசல் கொண்டு கட்டப்பட்ட மாடக் கோவில்களில் திருதலைச்சங்காடு சங்காரண்யேஸ்வரர் ஆலயமும் ஒன்றாகும். கோவிலுக்கு இராஜகோபுரம் இல்லை. ஒரு நுழைவாயில் மட்டுமே உள்ளது. கிழக்கிலுள்ள நுழைவாயில் வழியாக உள்ளே நுழைந்தவுடன் வெளிப் பிரகாரத்தில் நேர் எதிரே நந்தி மண்டபம் மற்றும் பலிபீடத்தைக் காணலாம். பலிபீடத்தின் பின்னால் சற்று உயரமான மேடையில் இறைவன் சங்காரண்யேஸ்வரர் சந்நிதி அமைந்துள்ளது. தெற்கு வெளிப் பிரகாரத்தில் உள்ள வாயில் வழியே படிகளேறி இறைவன் சந்நிதி உள்ள முன் மண்டபத்திற்குச் செல்ல வேண்டும். முன் மண்டபத்தைக் கடந்து சென்றால் கருவறையில் சங்காரண்யேஸ்வரர் லிங்க உருவில் காட்சி தருகிறார். மூலவர் சங்காரண்யேஸ்வரருக்கு நல்லெண்ணை ஊற்றி அபிஷேகம் செய்யும் போது விளக்கு வெளிச்சத்தில் பார்த்தால் லிங்கத்தின் மீது மயிர்க்கால்கள் தெரியும் சிறப்புடையது இத்தலம். கருவறை சுற்றில் ஸ்ரீசண்டிகேஸவரர், மஹாவிஷ்ணு, ஸ்ரீஜுரஹரர், ஸ்ரீராமர் சீதை மற்றும் தேவார நால்வர் உருவச் சிலைகளைக் காணலாம்.
தெற்கு வெளிப் பிரகாரத்தில் விநாயகர் சந்நிதியும், மேற்கு வெளிப் பிரகாரத்தில் முருகர் சந்நிதியும், வடக்கு வெளிப் பிரகாரத்தில் சண்டிகேஸ்வரருக்கு தனி சந்நிதியும் உள்ளன. மேற்கு வெளிப் பிரகாரத்தில் தனி சந்நிதியில் மஹாவிஷ்ணு சீதேவி, பூதேவி சமேதராய் காட்சி தருகிறார். மஹாவிஷ்ணு இத்தலத்தில் சங்காரண்யேஸ்வரரரை வழிபட்டு தனது ஆயுதமாக பாஞ்சசன்னிய சங்கைப் பெற்ற சிறப்புடையது இத்தலம். கிழக்கு வெளிப் பிரகாரத்தில் வலதுபுறம் தெற்கு நோக்கிய இறைவி சௌந்தரநாயகி சந்நிதி அமைந்துள்ளது. இறைவி கருவறை வாயிலின் வெளியே இடதுபுறம் புவனேஸ்வரியின் தனி சந்நிதி அமைந்துள்ளது.
கோயில் சோமாஸ்கந்தர் அமைப்பில் அமைந்துள்ளது. அதாவது கோயிலில் நுழைந்தவுடன் இடது பக்கம் சிவன் சன்னதியும், நடுவில் முருகன் சன்னதியும், வலது பக்கம் அம்மன் சன்னதியும் உள்ளதைக் காணலாம். இத்தலத்தின் தல விருட்சம் புரச மரம். புரச மரத்தின் அடியில் ஒரு சிவலிங்கம், மற்றும் விநாயகர் திரு உருவங்களைக் காணலாம். ஆலயத்தின் தீர்த்தம் சங்குதீர்த்தம். இது கோவிலுக்கு எதிரில் உள்ளது. இத்தீர்த்தத்தில் பௌர்ணமி நாளில் நீராடுவது விசேஷமாகும்.
திருஞானசம்பந்தர் பாடியருளியுள்ள இத்தலத்திற்கான பதிகம் இரண்டாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது.
Top