தகவல் பலகை | |
---|---|
சிவஸ்தலம் பெயர் | திருப்பனையூர் |
இறைவன் பெயர் | சௌந்தரேஸ்வரர், அழகியநாதர் |
இறைவி பெயர் | பெரியநாயகி |
பதிகம் | திருஞானசம்பந்தர் - 1 சுந்தரர் - 1 |
எப்படிப் போவது | திருவாரூர் - மயிலாடுதுறை சாலையில் உள்ள ஆண்டிப்பந்தலில் இருந்து கிழக்கே 2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது பனையூர். நன்னிலத்தில் இருந்தும் சுமார் 3 கி.மீ. சென்று இத்தலத்தை அடையலாம். பேரளம் - திருவாரூர் பேருந்து சாலை வழியில் சன்னாநல்லூரைக் கடந்து மேலும் சென்றால் "பனையூர்" என்று கைகாட்டி உள்ளது. குறுகலான அக்கிளைப் பாதையில் 1 கி.மீ. சென்றால் இத்தலத்தை அடையலாம். இவ்வழியில் பேருந்து செல்லாது. கார், வேன் செல்லும். |
ஆலய முகவரி | நிர்வாக அதிகாரி அருள்மிகு சௌந்தரேஸ்வரர் திருக்கோவில் பனையூர் சன்னாநால்லூர் அஞ்சல் நன்னிலம் வட்டம் திருவாரூர் மாவட்டம் PIN - 609504 இவ்வாலயம் தினந்தோறும் காலை 7 மணி முதல் 9 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் திறந்திருக்கும். ஆலய தொடர்புக்கு: கல்யாணசுந்தர குருக்கள், அர்ச்சகர், கைபேசி: 9942281758, 9965981574 |
திருவாரூரில் இருந்து திருப்பனையூர் சௌந்தரேஸ்வரர் ஆலயம் செல்லும் வழி வரைபடம்
Map courtesy by: Google Maps
தலத்தின் சிறப்பு: முற்காலச் சோழர்களில் மிகவும் புகழ் பெற்றவன் கரிகாலச் சோழன். இவன் சிறியவனாக இருக்கும் போது தாயாதிகளின் சூழ்ச்சியால் அவனது தந்தை கொல்லப்பட்டார். தந்தையை கொன்ற தாயாதிகள் கரிகாலனையும் கொன்று சோழ நாட்டைக் கைப்பற்ற முனைந்த போது. அவனது தாய்மாமன் "இரும்பிடர்த்தலையார்" என்னும் சங்கப் புலவர், பிறர் அறியாமல், குழந்தையையும் தாயையும் பனையூருக்கு அனுப்பிவைத்தார். அரசி, தன் மகனுடன் இவ்வூருக்கு வந்து, இக்கோயிலில் அடைக்கலம் புகுந்து, இவ்விநாயகரிடம் முறையிட, விநாயகரின் துணையால் கரிகாலன் எட்டு ஆண்டுகள் இத்தலத்தில் பாதுகாப்பாக இருந்தான். கரிகாலச் சோழனுக்குத் துணையிருந்ததனால் இத்தல விநாயகர் "துணையிருந்த விநாயகர்" என்னும் பெயர் பெற்றார்.
சுந்தரர் திருவாரூர்ப் பங்குனி உத்திரத் திருநாளுக்காகப் பரவையாரின் வேண்டுகோளின்படி, திருப்புகலூர் இறைவனிடம் பதிகம் பாடி வணங்கி உறங்கும் போது தலைக்கு வைத்துக் கொண்ட செங்கல் செம்பொன்னாகப் பெற்று, அடுத்து திருப்பனையூர் தலத்திற்கு வந்தார். அப்போது ஊரின் எல்லையில் இறைவன் சுந்தரருக்கு நடனக் காட்சி காட்டியருள, சுந்தரர் எதிர் சென்று தொழுது, வீழ்ந்து வணங்கி பதிகம் பாடி அருள் பெற்றார்.
கோவில் அமைப்பு: இவ்வாலயத்திற்கு இராஜகோபுரமில்லை. கிழக்கு நோக்கியுள்ள ஒரு முகப்பு வாயில் மட்டும் உள்ளது. முகப்பு வாயில் மேல் ரிஷபாரூடர் சிற்பம் சுதையால் ஆக்கப்பட்டுள்ளது. வாயில் வழியே உள்ளே நுழைந்ததும் வலதுபுறம் தெற்கு நோக்கிய பெரியநாயகி அம்பாள் சந்நிதி உள்ளது. அம்பாள் நின்ற திருக்கோலத்தில் எழுந்தருளியுள்ளாள். அம்பாள் சந்நிதிக்கு முன்னால் கரிகாலனைக் காப்பாற்றிய துணை இருந்த விநாயகர் சந்நிதி உள்ளது. 2-வது நுழைவாயில் கடந்து உள்ளே சென்றால் இறைவன் வீற்றிருக்கும் கருவறையும், சுற்றுக் பிராகாரமும் உள்ளது.
சப்தரிஷிகள், பராசர முனிவர், மகாலட்சுமி, கரிகாற்சோழன் ஆகியோர் இத்தல இறைவனை வழிபட்டுள்ளனர். கருவறையில் மூரவர் சுயம்பு லிங்கத் திருமேனியுடன் காட்சி தருகிறார். கோஷ்ட மூர்த்தங்களாக தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, துர்க்கை ஆகியோர் காட்சி தருகின்றனர். சண்டேசுவரர் சந்நிதியும் உள்ளது. பிரகாரத்தில் பராசர முனிவர் உருவம் உள்ளது. பராசர முனிவர் பிரதிஷ்டை செய்து வழிபட்ட சிவலிங்கத் திருமேனி மேற்கு நோக்கி உள்ளது இவர் தாலவனேஸ்வரர் என்ற பெயருடன் சதுர ஆவுடையார் மீது எழுந்தருளியுள்ளார். பனைமரங்களை மிகுதியாக உடைய ஊரானதால் தாலவனம் என்றும் இத்தலத்திற்கு பெயருண்டு. தாலம் என்பது பனை மரத்தைக் குறிக்கும். இத்தலத்தின் தலவிருட்சம் மனைமரம்.
Top