தலப் பெயர் காரணம்: இவ்வாலயம் இருக்கும் பகுதி முழுவதும் காரைச்செடி காடாக இருந்த காரணத்தால் காரைக்காடு என்று பெயர் பெற்றது. இக்காலத்தில் இப்பகுதி திருக்காலிமேடு என்ற் பெயருடனும், இவ்வாலயம் திருக்காலீஸ்வரர் கோயில் என்றும் வழங்குகின்றது. இந்திரன் வழிபட்ட காரணத்தால் இத்தலம் இந்திரபுரி என்றும் வழங்கப்பெறுகிறது.
கோவில் அமைப்பு: ஆலயம் மேற்கு நோக்கிய ஒரு முகப்பு வாயிலுடனும், அதையடுத்து 3 நிலை கோபுரத்துடனும் அமைந்திருக்கிறது. முகப்பு வாயில் வழியே கோபுரத்தை நோக்கிச் செல்லும் போது இடையில் நந்தி மண்டபம், கொடிமரம், பலிபீடம் ஆகியவற்றைக் காணலாம். கோபுர வாயிலைக் கடந்து உள்சென்று வெளிப் பிராகாரத்தை வலம் வரலாம். வெளிப் பிராகாரத்தில் குறிப்பிட்டுச் சொல்லும்படி சந்நிதிகள் ஏதுமில்லை. உள் வாயிலைக் கடந்து சென்றால் கருவறையைச் சுற்றியுள்ள முதல் பிராகாரம் உள்ளது. கோஷ்ட மூர்த்தங்களாக கணபதி, தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரமன், துர்க்கை ஆகியோர் உள்ளனர். கருவறைச் சுற்றில் நால்வர், இந்திரன், புதன், பைரவர், விநாயகர், வள்ளி தெய்வயானை சமேத ஆறுமுகர் சந்நிதிகள். அதையடுத்து கஜலட்சுமி ஆகிய மூலத் திருமேனிகள் உள்ளன.
துவார விநாயகர், துவார சுப்பிரமணியர் தரிசித்து உள்ளே சென்றால் மூலவரைத் தரிசிக்கலாம். காரை திருநாதேஸ்வரர் என்றும், சத்தியநாதசுவாமி என்றும் வழங்கப்படும் மூலவர் சுயம்புலிங்கத் திருமேனியாக மேற்கு நோக்கி காட்சியளிக்கிறார். மூலவர் செம்மண் நிறத்தில், கரகரப்பாக, சற்று உயர்ந்தும், பருத்தும் காணப்படுகிறார். அருகில் அம்பாள் உற்சவத் திருமேனி வைக்கப்பட்டுள்ளது. சூரியனின் மூலத் திருமேனியும் உள்ளேயே உள்ளது. நடராஜர் சபையும் இங்குள்ளது
இந்திரன் இங்குள்ள இறைவனை வழிபட உண்டாக்கிய தீர்த்தம் இந்திர தீர்த்தம். இது தற்போது வேப்பங்குளம் என வழங்கப் பெறுகிறது. இந்த தீர்த்தம் தற்போது நன்கு பராமரிக்கப்படாத நிலையிலுள்ளது. இத்தலத்திலுள்ள இறைவனை புதன் வழிபட்டு கிரகநிலை பெற்றதால் மிதுனம் மற்றும் கன்னி ராசியில் பிறந்தவர்கள், ஜாதகத்தில் புதன் வலுவிழந்து இருப்பவர்கள் இத்தலம் வந்து புதன்கிழமை இந்திர தீர்த்தம் என்கிற வேப்பங்குளத்தில் நீராடி காரைக்காட்டு ஈஸ்வரரை வணங்குதல் சிறப்புடையது. புதன் இத்தலத்தில் பிரகாரத்தில் சுவாமிக்கு வலதுபுறத்தில் தெற்கு பார்த்தபடி இருக்கிறார்.
இத்தலத்திற்கு திருஞானசம்பந்தர் பாடிய பதிகம் 3-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது.