கோவில் அமைப்பு : செய்யாற்றின் வடகரையில் கிழக்கு நோக்கிய 5 நிலை இராஜகோபுரத்துடனும், இரண்டு பிராகரங்களுடனும் இவ்வாலயம் விளங்குகிறது. மூலவர் மாகறலீஸ்வரர் சுயம்புலிங்க வடிவில் கிழக்கு நோக்கியும், அம்மன் திருபுவனநாயகி தெற்கு நோக்கியும் எழுந்தருளியுள்ளனர். வடக்குப் பிராகாரத்தில் தலமரம் எலுமிச்சை உள்ளது. பிராகாரத்தில் பொய்யாவிநாயகர், ஆறுமுகர், 63 நாயன்மார்கள், நால்வர், நவக்கிரகங்கள் ஆகிய சந்நிதிகள் உள்ளன. கருவறை கோஷ்ட மூர்த்தங்களாக விநாயகர், சிறிய தட்சிணாமூர்த்தி, விஷ்ணு, பிரம்மா, துர்க்கை முதலிய திருமேனிகள் உள்ளன. விசாலமான வெளிப்பிரகாரம் வலமாக வந்து படிக்கட்டுகளையேறி, விநாயகரையும், மறுபுறம் சுப்பிரமணியரையும் வணங்கியவாறே, துவாரபாலகர்களைக் கடந்து உட்புகுந்தால் நேரே மூலவர் காட்சி தருகிறார். இறைவன் மாகறலீஸ்வரர் எங்கும் காண இயலாத உருவில் உடும்பின் வால் போன்று விளங்கக் காணலாம். இராஜேந்திர சோழ மன்னருக்கு உடும்பின் வால் வடிவில் இவ்வாலயத்தின் இறைவன் காட்சியளித்துள்ளார்.
இத்தலத்தில் முருகப்பெருமான் மயில் மீது ஆறு திருமுகங்களுடன் இருதேவியர் உடனிருக்க வடக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். இவ்வாலயத்தின் தீர்த்தங்களாக அக்னி தீர்த்தமும், செய்யாறும் உள்ளன. அக்னி தீர்த்தத்தில் நீராடி அகத்தீசுவரரை வணங்கினால் எமலோக பயம் நீங்கி சிவலோகத்தில் எப்பொழுதும் வாழலாம் என்று தலபுராணம் விவரிக்கிறது. மற்றொரு தீர்த்தமான செய்யாறு இத்தலத்திற்குத் தெற்கில் ஓடுகிறது. இத்தலத்தில் சோமவார தரிசனம் விசேடமாகும். பிள்ளைப்பேறு இல்லாதவர் இக்கோயிலை உடலால் வலம் வந்தால் பிள்ளைப்பேற்றை அடைவர் என்று பக்தர்கள் நம்புகின்றனர். இத்தலத்தைத் தேவேந்திரன் வழிபட்டுப் பேறு பெற்றான் என்றும் தலபுராணம் விவரிக்கிறது.
தல புராண வரலாறு: மும்மூர்த்திகளில் தானே சிறந்தவன் என்று செருக்குற்று இருந்த பிரம்மாவை சிவபெருமான் சபித்தார். தனது சாபம் நீங்க பிரம்மா இத்தலம் வந்து ஒரு லிங்கம் பிரதிஷடை செய்து இறைவனை வழிபட்டு பேறு பெற்றார். அதன்பின் சத்தியலோகம் திரும்பிச் செல்லுமுன் இத்தல எல்லையில் தினம் ஒரு பழம் தரும் அதிசய பலாமரத்தை உண்டாக்கிச் சென்றார். இம்மரத்தின் சுவைமிக்க பலாப்பழத்தைப் பற்றி கேள்விப்பட்ட இராஜேந்திர சோழ மன்னன், இப்பழத்தை தினந்தோறும் சிதம்பரம் நடராஜருக்கு நிவேதனம் செய்து, அதன்பின் தனக்கு கொண்டுவந்து கொடுக்க வேண்டும் என்று ஊர் மக்களுக்குத் தெரிவித்தான். ஊர் மக்களும் அவ்வாறே செய்து வந்தனர். ஆனாலும் ஊர் மக்கள் தினந்தோறும் சிதம்பரம் சென்று அதன்பின சோழ மன்னனின் தலைநகர் சென்று அரசனுக்கு பழத்தை அளித்துவிட்டு திரும்ப சிரமப்படுவதைக் கண்ட ஒரு அந்தணன் மகன் பலாமரத்தை வெட்டிவிட்டான். பழம் வருவது நின்று போனதைக் கண்ட மன்னன் அதைப் பற்றி விசாரித்து மரம் வெட்டப்பட்டதை அறிந்தான். பலாமரத்தை வெட்டியவனை நாடு கடத்தும் படி உத்தரவிட்டான். இரவு முழுவதும் பயணம் செய்து எவ்வளவு தொலைவில் விடமுடியுமோ அவ்வளவு தூரம் சென்று விட்டுவிடும் படி காவலருக்குச் சொல்லி அரசன் தானும் கூடச் சென்று தண்டனை நிறைவேற்றப்பட்டதை உறுதி செய்துகொண்டு திரும்பினான்.
மன்னன் ஊர் திரும்பும்போது இத்தல எல்லையில் புதர் மண்டிய ஓரிடத்தில் பென்னிற உடும்பு ஒன்று அரசனின் கண்களுக்குத் தென்பட்டது. அதனைப் பிடிக்க முயலும் போது அவ்வுடும்பு ஓர் புற்றினுள் சென்று மறைந்தது. மன்னன் ஆட்கள் சிலரை அழைத்து புற்றைச் சோதித்துப் பார்க்க உத்தரவிட்டான். ஆட்கள் ஆயதங்களால் புற்றை அகழ்ந்த போது உடும்பின் வாலில் ஆயுதம் பட்டு இரத்தம் பீறிட்டுவர அதைக் கண்ட மன்னன் மயங்கிக் கீழே விழுந்தான். மயக்கம் தெளிந்து எழுந்த அரசனுக்கு தான் அவ்விடம் இருப்பதை உணர்த்தி அங்கு சிவாலயம் எடுக்குமாறு அசரீரியாக கட்டளையிட்டு அரசனுக்கு அருளினார். இராஜேந்திர சோழ மன்னனும் அவ்வாறே இறைவன் பணித்தபடி திருமாகறல் தலத்தில் இறைவனுக்கு பெரிய சிவாலயம் ஒன்றைக் கட்டி நாள்தோறும் வழிபாடுகள் செய்வித்து இறையருள் பெற்றான்.
இத்தலத்திற்கான சம்பந்தர் பதிகம் முதலாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. இப்பதிகம் வினை தீர்க்கும் பதிகம் என்று போற்றப்படுகிறது. திருமாகறல் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் அப்பெருமானைப் போற்றி அருளிய இப்பதிகத்தை உணர்ந்து ஓதவல்லவர்களின் தொல்வினைகள் நீங்கும் என்று சம்பந்தர் தனது பதிகத்தில் குறிப்பிடுகிறார்.