Shiva Temples of Tamilnadu

தேவார பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்


வேதபுரீஸ்வரர் திருக்கோவில், திருவோத்தூர்

தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்திருவோத்தூர் ( தற்போது செய்யாறு, திருவத்தூர், திருவத்திபுரம் என்று அறியப்படுகிறது )
இறைவன் பெயர்வேதபுரீஸ்வரர், வேதநாதர்
இறைவி பெயர்பால குசாம்பிகை, இளமுலைநாயகி
பதிகம்திருஞானசம்பந்தர் - 1
எப்படிப் போவது காஞ்சிபுரத்தில் இருந்து வந்தவாசி செல்லும் சாலையில் சுமார் 14 கி.மீ.சென்றால் செய்யார் செல்லும் சாலை வலதுபுறம் பிரிகிறது. அச்சாலையில் சுமார் 20 கி.மீ. சென்றால்.இந்த சிவஸ்தலம் இருக்கிறது. காஞ்சிபுரத்தில் இருந்து தென்மேற்கே சுமார் 34 கி.மீ. தொலைவு. காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வந்தவாசி, போளூர், ஆரணி ஆகிய இடங்களிலிருந்து இத்தலத்திற்கு பேருந்து வசதிகள் இருக்கின்றன.
ஆலய முகவரிஅருள்மிகு வேதபுரீஸ்வரர் திருக்கோவில்
திருவத்திபுரம்
செய்யாறு வட்டம்
திருவண்ணாமலை மாவட்டம்
PIN - 604407

இவ்வாலயம் காலை 6 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8-30 மணி வரையிலும் தரிசனத்திற்காக திறந்திருக்கும்.


நாக தோஷம் மற்றும் சகல தோஷங்களும் விலக, வேதபுரீஸ்வரர் கோவில், திருவோத்தூர்.

மேலும் படிக்க.....

படிக்கும் நேரம் - நிமிடங்கள்

கோவில் அமைப்பு மற்றும் சிறப்பு :சிவபெருமான் இத்தலத்தில் தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் வேதத்தை அருளிச் செய்தமையால் இத்தலம் ஓத்தூர் எனப் பெயர் பெற்றது. "திரு" அடைமொழி சேர்ந்து திருஓத்தூர், திருவோத்தூர் என்றாயிற்று. சேயாற்றின் வடகரையில் அமைந்துள்ள இவ்வாலயம் 5 ஏக்கர் நிலப்பரளவில் கிழக்கு நோக்கிய 7 நிலை இராஜகோபுரத்துடனும், 2 பிராகாரங்களுடனும் அமைந்துள்ளது. இராஜகோபுர வாயில் வழியே உள்ளே நுழைந்தவுடன் நீண்ட முன் மண்டபம் உள்ளது. அதையடுத்து 2வது கோபுரம் 5 நிலைகளுடன் காட்சி அளிக்கிறது. முன் மண்டபத்திற்கும், 2வது கோபுர வாயிலுக்கும் இடையே கொடிமரம், பலிபீடம், நந்தி மண்டபம் ஆகியவை உள்ளன. நந்தி சுவாமியை நோக்கியிராமல் முன் கோபுரத்தைப் பார்த்தபடி கிழக்கு நோக்கி காட்சியளிக்கறது. இறைவன தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் வேதத்தை ஓதுவிக்கும் போது தக்கவர் தவிர வேறு யாரும் உள்ளே வராமல் தடுக்கவே இவ்வாறு நந்தி திரும்பி இருப்பதாக கூறப்படுகிறது. இறைவன் சுயம்புலிங்கமாக வேதபுரீஸ்வரர் என்ற பெயருடன் காட்சி அளிக்கிறார். ஆவுடை சதுர வடிவமான அமைப்புடையது. சிவபெருமான் வீரநடனம் புரிந்த தலம் இதுவாகும்


வெளிப் பிராகாரம் வலம் வரும்போது வடக்குப் பிராகாரத்தில் தலமரம் பனை ஓங்கி வளர்ந்துள்ளதைக் காணலாம். பனையைத் தலமரமாகக் கொண்ட பாடல் பெற்ற தலங்கள் ஐந்தினுள் இதுவும் ஒன்று. ஏனையவை (1) திருப்பனந்தாள், (2) திருப்பனையூர், (3) திருவன்பார்த்தான் பனங்காட்டூர் (திருப்பனங்காடு), (4) புறவார் பனங்காட்டூர் என்பன. உள் சுற்றுப் பிராகாரத்தில் தென்கிழக்கில் கருங்கல்லால் ஆன பனைமரமும், அதனடியில் ஒரு சிவலிங்கமும், சம்பந்தர் ஆண்பனை பெண்பனையாகுமாறு பாடிக்கொண்டு நிற்கும் காட்சியும் ஐதிகச் சிற்பமாக அமைந்து விளங்குவதைக் காணலாம்..


உள் பிராகாரத்தில் வலம் வரும்போது விநாயகர், சுப்பிரமணியர், நாகநாதர், நடராஜர், 63 நாயன்மார்கள், சப்தமாதாக்கள் ஆகியோரின் சந்நிதிகள் உள்ளன. இப்பிபராகாரத்தில் பஞ்சபூத லிங்கங்கள் உள்ளன. இந்த லிங்கங்களை தரிசனம் செய்தால் காஞ்சீபுரம், திருவண்ணாமலை, திருவானைக்கா, சிதம்பரம் மற்றும் காளஹஸ்தி ஆகிய தலங்களைத் தரிசித்த பலனுண்டு. கோஷ்ட மூர்த்தங்களாக விநாயகரும், தனிக் கோயிலாகத் தக்ஷிணாமூர்த்தியும், துர்க்கையும் காட்சி தருகின்றனர். மகா மண்டபத்தின் நடுவில் நின்றால் சுவாமி, அம்மன், விநாயகர், முருகன், நவக்கிரகம் ஆகிய இவை அனைத்தையும் ஒரே நேரத்தில் தரிசனம் செய்யலாம். இவ்வமைப்பு வேறு எங்கும் காணமுடியாது.



மேலும் உட்பிராகாரத்தில் உயரமான பீடத்தில் அமைந்துள்ள நாகலிங்கத்தை வழிபட்டால் நாகதோஷம் நிவர்த்தியாகும். திருவோத்துரின் தென்திசையிலுள்ள புனதகைகுட்டு என்ற இடத்தில் இருந்து சமணர்கள் ஒரு வேள்வி செய்து ஐந்து தலை உடைய ஒரு நாகத்தை சம்பந்தர் மீது ஏவினார்கள். அச்சமயம் இறைவன் ஒரு பாம்பாட்டியாக வந்து பாம்பின் தலை மீது ஏறி அதை அடக்கி ஞானசம்பந்தருடன் கோவிலுனுள் வந்து லிங்கமாக அமர்ந்தார். அதுவே இங்குள்ள நாகலிங்கம். திருமணம் ஆகாதவர்கள் சனிக்கிழமை ராகு காலத்தில் தீபமேற்றி நாகலிங்கத்தை வழிபட்டால் திருமணம் நிறைவேறும். மேலும் நாகலிங்க சந்நிதிக்கு நேர் ஏதிரே சனி பகவான் உள்ளதால் சகல தோஷங்களும் விலகும்.


அம்மன் பாலகுஜாம்பிகை தனிக்கோயிலில் தரிசனம் தருகிறாள். சுற்றுப் பிராகாரம் உள்ளது. நின்ற திருக்கோலத்தில் நான்கு திருக்கரங்களுடன் காட்சியளிக்கிறாள். ஆலயத்திற்கு வெளியே உள்ள சேயாறும், வெளிப் பிராகாரத்திலுள்ள கல்யாணகோடி தீர்த்தமும் இவ்வாலயத்தின் தீர்த்தங்களாக உள்ளன. சிவாலயத்துள்ளேயே ஆதிகேசவப்பெருமாள் சந்நிதியும் இருக்கிறது

முருகப் பெருமான் இறைவனை பூஜித்த தலங்களில் இத்தலமும் ஒன்று. சிவபெருமான் சந்நிதிக்கு வாயு மூலையில் ஆறுமுகர் சந்நிதி உள்ளது. இங்கு முருகர் 12 திருக்கரங்களுடன் மயில் மீதமர்ந்து வள்ளி தெய்வானையுடன் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். திருப்புகழில் ஒரு பாடல் உள்ளது.


திருஞானசம்பந்தர் இத்தலத்திற்கு எழுந்தருளியபோது கோயிலைப் பராமரித்துவந்த சிவனடியார் ஒருவர் கோயில் நிலங்களில் பனைவைத்து வளர்த்து வந்தார். அவையாவும் ஆண்பனையாயின. சமணர்கள் பரிகசித்தனர். அதைக்கண்டு சிவனடியார் வருந்திச் சம்பந்தரிடம் விண்ணப்பித்தார். திருஞானசம்பந்தர் ஆண்பனைகளை பெண்பனைகளாக மாறும்படி திருப்பதிகம் பாடி அற்புதம் நிகழ்த்திய தலம் திருவோத்தூர். திருக்கடைக்காப்பில் குரும்பை யாண்பனை யீன்குலை யோத்தூர் என்று அருளியபோது அவை பெண்பனைகளாயின.

சம்பந்தர் பாடியருளிய இத்தலத்திற்கான பதிகம் முதலாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது.


திருஞானசம்பந்தர் அருளிய இத்தலத்து பதிகம்

  1. பூத்தேர்ந் தாயன கொண்டுநின் பொன்னடி

அருணகிரிநாதர் அருளிய இத்தலத்து திருப்புகழ்

  1. தவர்வாட் டோமர சூலந் தரியாக் காதிய
வேதபுரீஸ்வரர் ஆலயம்
புகைப்படங்கள்

ஆலயத்தின் 5 நிலை கோபுரம் மற்றும் முன் மண்டபம்
கல்யாணகோடி தீர்த்தம்
தலவிருட்சம் பனைமரம்
வள்ளி தெய்வானையுடன் முருகர்
நந்தி
கருங்கல்லால் ஆன பனைமரம், அதனருகே ஒரு சிவலிங்கம் மற்றும் சம்பந்தர்