Shiva Temples of Tamilnadu

தேவார பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்


திரிபுராந்தகர் திருக்கோவில், திருவிற்கோலம்

தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்திருவிற்கோலம் (தற்போது கூவம் என்று வழங்குகிறது)
இறைவன் பெயர்திரிபுராந்தக சுவாமி, தீண்டாத் திருமேனி நாதர்
இறைவி பெயர்திரிபுரசுந்தரி அம்பாள்
பதிகம்திருஞானசம்பந்தர் - 1
எப்படிப் போவது சென்னை - அரக்கோணம் ரயில் பாதையில் உள்ள கடம்பத்தூர் ரயில் நிலையத்தில் இருந்து 9 கி.மீ தொலைவில் இந்த சிவஸ்தலம் அமைந்துள்ளது. அருகில் உள்ள ஊர் திருவள்ளூர். திருவள்ளூரில் இருந்து காஞ்சீபுரம செல்லும் பேருந்து கடம்பத்தூர், பேரம்பாக்கம் வழியாக கூவம் செல்கிறது. கூவம் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி சுமார் 1 கி.மீ. சென்றால் இந்த சிவஸ்தலம் அமைந்துள்ளது.
அருகில் உள்ள பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்1. இலம்பையங்கோட்டூர் - 7 கி.மீ -
2. திருவாலங்காடு - 17 கி.மீ -
3. திருவாலங்காடு, திருவிற்கோலம், இலம்பயங்கோட்டூர், தக்கோலம், திருமாற்பேறு ஆகிய தலங்களை இணைக்கும் வரைபடம் காண்க
ஆலய முகவரிஅருள்மிகு
திரிபுராந்தக சுவாமி திருக்கோவில்
கூவம் கிராமம்
கடம்பத்தூர் அஞ்சல்
வழி திருவள்ளூர்
திருவள்ளூர் மாவட்டம்
PIN - 631203

இவ்வாலயம் தினந்தோறும் காலை 6 முதல் 11 மணி வரையிலும் மாலை 4 முதல் இரவு 7-30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

படிக்கும் நேரம் - நிமிடங்கள்

கோவில் விபரம்: கூவம் என்ற பெயரில் தற்போது அறியப்படும் இத்தலம் திருவள்ளூர் மாவட்டத்தில் சென்னையிலிருந்து சுமார் 50 கி.மீ. தொலைவில் இருக்கிறது. இத்தலத்தின் அருகே தான் கூவம் ஆறு உற்பத்தியாகிறது. சுத்தமான நீரோட்டம் உள்ள இந்த ஆறு சென்னையை நெருங்கும் போது மிகவும் அசுத்தமடைந்து விடுகிறது. இத்தலத்து இறைவன் ஒரு சுயம்பு லிங்கம். இங்குள்ள இறைவனை, லிங்கத் திருமேனியை ஆலய அர்ச்சகர்கள் கூட தொடுவதில்லை. அதனால் இறைவன் தீண்டாத் திருமேனி நாதர் என்றும் பெயர் கொண்டுள்ளார். இங்குள்ள லிங்கம் காலத்திற்கு ஏற்ப நிறம் மாறுவதாக கூறப்படுகிறது. அதிக மழைபெய்வதாக இருந்தால் இறைவரின் திருமேனியில் வெண்மை நிறம் தோன்றுவதும், யுத்தம் ஏற்படுவதாயிருந்தால் சிவப்புநிறம் படர்வதும் ஆகிய அற்புதம் பொருந்திய தலம். இத்தலத்திற்கு வரும் பக்தர்கள் முதலில் இறைவி திருபுரசுந்தரியை வணங்கிவிட்டுத் தான் பிறகு மூலவர் திரிபுராந்தகரை வழிபடவேண்டும் என்ற நியதி வழக்கத்தில் உள்ளது. திருமணமான தம்பதியர்களுக்கு இடையே ஏற்படும் எந்தவிதமான பிரச்னைகளும் இத்தலத்து இறைவனை வழிபடுவதின் மூலம் தீர்ந்துவிடும் என்பது நம்பிக்கை.


தெற்கு திசையிலுள்ள 5 நிலை இராஜகோபுரம் தான் இவ்வாலயத்தின் பிரதான வாயிலாகும். கோபுர வாயில் வழியாக உள்ளே நுழைந்து தெற்கு வெளிப் பிரகாரத்தில் உள்ள வாயில் வழியாக அம்பாள் மற்றும் சுவாமி சந்நிதிகள் உள்ள பகுதிக்குள் செல்லலாம். முதலில் அம்பாள் திரிபுரசுந்தரி சந்நிதியும், அதையடுத்து திரிபுராந்தக சுவாமி சந்நிதியும் கிழக்கு நோக்கு அமைந்துள்ளன. சுவாமி சந்நிதி விமானம் கஜப்பிரஷ்ட அமைப்புடையது. இரண்டு சந்நிதிகளையும் சேர்த்து வலம் வர பிரகாரம் உள்ளது. உட்பிரகாரத்தின் தென்மேற்கு மூலையில் அச்சிறுத்த விநாயகர் சந்நிதி அமைந்திருக்கிறது. அம்பாள் மற்றும் சுவாமி சந்நிதிகளுக்கு தனித்தனியே கொடிமரம், பலிபீடம் இருக்கின்றன. சுவாமி சந்நிதி நுழை வாயிலுக்கு முன் இருபுறமும் உள்ள துவாரபாலகர்கள் திரிபுராதிகள் மூவருள் இருவர் இவர்கள் என்று சொல்லப்படுகிறது. சுவாமி சந்நிதி நுழை வாயிலுக்கு முன் வலதுபுறம் தெற்கு நோக்கிய நடராஜர் சந்நிதி உள்ளது. வள்ளி தெய்வானையுடன் உள்ள முருகர், தட்சினாமூர்த்தி ஆகிய மூர்த்தங்களும் பார்க்க வேண்டியவை. சுவாமி கருவறை கோஷ்டத்தில் உள்ள லிங்கோத்பவர் சிற்பமும் கலையழகுடன் உள்ளது. மஹாவிஷ்னு வராக அவதாரம் எடுத்து பூமியைக் குடைவதும், பிரம்மா அன்னப் பறவை உருவில் ஜோதி உருவமான சிவபெருமானின் முடியைக் காண முயலுவதும் லிங்கோத்பவர் சிற்பத்தில் காணலாம். பக்கத்தில் பாலமுருகன் சந்நிதியும் அடுத்து மீனாட்சி சுந்தரேஸ்வரர் சந்நிதியும் உள்ளன. துர்க்கை சந்நிதிக்கு எதிரில் சந்தன மேடை உள்ளது. இதில் அரைத்த சந்தனம் சுவாமிக்குச் சார்த்தப்படுகிறது.நவக்கிரக சந்நிதி வடக்கு வெளிப் பிரகாரத்தின் வடகிழக்கு மூலையில் உள்ளது.



புராண வரலாறு: இத்தலம் சிவபெருமான் நிகழ்த்திய திரிபுர சம்ஹாரத்துடன் சம்பந்தம் கொண்டதாகும். சிவபெருமான் திரிபுர சம்ஹாரம் செய்ய புறப்பட்ட போது முழுமுதற் கடவுள் விநாயகரை வழிபட்டு கிளம்பாததால் சிவன் ஏறிய தேரின் அச்சு முறிந்து விட்டது. பிறகு விநாயகர் வழிபாடு செய்து புறப்பட்டார் என்று புராணங்கள் கூறுகின்றன. சிவபெருமான் வில் கையிலேந்தி காட்சி கொடுப்பதால் இத்தலம் திருவிற்கோலம் என்ற பெயரில் ஒரு பாடல் பெற்ற தலமாக விளங்குகிறது. இத்தலத்திலுள்ள விநாயகருக்கு அச்சிறுத்த விநாயகர் என்று பெயர்.

மேலும் பார்க்கவும் - திரிபுர சம்ஹாரம் சம்பந்தப்பட்ட பிற பாடல் பெற்ற சிவஸ்தலங்கள் - 1) திருவதிகை, 2) இலம்பையங்கோட்டூர், 3) அச்சிறுபாக்கம்.


ஆலய சிறப்பு: இந்த கோவிலிலுள்ள தீர்த்தம் அக்னி தீர்த்தம் (கூபாக்கினிதீர்த்தம் ) எனப்படும். ஆலய அர்ச்சகர்கள் இந்த அக்னி தீர்த்தத்தில் நீராடிய பிறகே தினசரி பூஜைகள் செய்வார்கள். கடுமையான வறட்சி காலத்திலும் இந்த அக்னி தீர்த்தம் வற்றுவதில்லை என்று கூறப்படுகிறது. மேலும் 4 கி.மி தொலவிலுள்ள கூவம் ஆற்றிலிருந்து கொண்டு வரும் நீரால் மட்டுமே இறைவனுக்கு அபிஷேகம் செய்யும் வழக்கத்தை அர்ச்சகர்கள் கடைபிடித்து வருகின்றனர். சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக என்றேனும் இவ்வாறு கூவம் ஆற்று நீர் அபிஷேகத்திற்கு இல்லையெனில் இளநீர் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. பகல்நேர அபிஷேகம் செய்ய அருகில் உள்ள பிஞ்சவாக்கம் என்ற கிராமத்தில் இருந்து கொண்டு வரப்படும் பால் பயன்படுத்தப்படுகிறது. பிஞ்சவாக்கம் கிராமத்தில் வசிக்கும் மக்கள் இவ்வாலய இறைவன் அபிஷேகத்திற்கு பால் கொடுப்பதை தங்கள் கடமையாக நினைத்து செயல்படுகின்றனர்.


அதிக மழை, வெள்ளம் வரும் அறிகுறி இருந்தால் சுவாமி மீது வெண்மை படரும் என்றும், போர் நிகழ்வதாயின் செம்மை படரும் என்றும் சொல்லப்படுகின்றது. இது பற்றியே ஞானசம்பந்தர் தம் பதிகத்தின் 3-வது பாடலில் ஐயன் நல் அதிசயன் என்று குறிப்பிடுகின்றார். இவ்வண்ண மாற்றம் தற்போது காணப்படவில்லையாம். மூலவர் - திரிபுரம் எரித்த மூர்த்தி. அபிஷேகங்கள் செய்வதால் உண்டாகும் மேற்புறப் படிவுகள் தானாகவே பெயர்ந்து விழுந்து திருமேனி சுத்தமாகி விடும் என்று சொல்லப்படுகிறது.

கோயிலுக்கு வெளியே - திரிபுர சம்ஹார காலத்தில் தேர் அச்சு முறிந்திட, உடனே பெருமானை விடையாக இருந்து தாஙகியதாகச் சொல்லப்படும் - கரிய மாணிக்கப் பெருமாள் கோயில் உள்ளது.

திருஞானசம்பந்தர் இயற்றியுள்ள இத்தலத்திற்கான பதிகம் மூன்றாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது


திருஞானசம்பந்தர் அருளிய இத்தலத்து பதிகம்

  1. உருவினார் உமையொடும்
திரிபுராந்தகர் ஆலயம் புகைப்படங்கள்

நுழைவு கோபுரம்
அம்பாள் சந்நிதி முன் கொடிமரம், பலிபீடம்
திரிபுரசுந்தரி அம்பாள் சந்நிதி
திரிபுராந்தக சுவாமி சந்நிதி
துவாரபாலகர்கள் திரிபுராதிகள் நடராஜர் சந்நிதி
அச்சிறுத்த விநாயகர் சந்நிதி
சுவாமி கருவறை கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி
வள்ளி தெய்வானையுடன் முருகர்
சுவாமி சந்நிதி முன் கொடிமரம், பலிபீடம், நந்தி
ஆலயத்தின் தோற்றமும் செல்லும் வழியும்