தேவார வைப்புத் தலங்கள்

வைப்புத் தலங்கள் இருப்பிடம் மற்றும் விபரங்கள் பற்றிக் கூறும் இணையதளம்

Main menu


இந்த வைப்புத் தலத்தைக் குறிப்பிடும் பதிகப் பாடலில் கூறப்பட்டுள்ள ஏமப்பேறூர், சடைமுடி, சாலைக்குடி, தக்களூர், கோத்திட்டை, கோட்டுக்காடு ஆகியவையும் தேவார வைப்புத் தலங்களாகும்.

தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்இடவை (இன்றையநாளில் இத்தலம் நஞ்சை இடையாறு என்று அழைக்கப்படுகிறது)
இறைவன் பெயர்திருமாலீசுவரர், திருவேலிநாதர், திருஎயிலிநாதர்
இறைவி பெயர்ஶ்ரீசுந்தரவல்லி
பதிகம்அப்பர் (6-70-3)
எப்படிப் போவது நாமக்கல் மாவட்டத்திலுள்ள மோகனூர் வைப்புத் தலத்தில் இருந்து வடமேற்கே பரமத்திவேலூர் செல்லும் வழியில் நஞ்சை இடையாறு தலம் உள்ளது. பரமத்தி வேலூரில் இருந்த கிழக்கே சுமார் 3 கி.மீ. தொலைவு.
ஆலய முகவரி அருள்மிகு திருமாலீசுவரர் திருக்கோவில்
நஞ்சை இடையாறு
நாமக்கல் மாவட்டம்
PIN - 636182

இவ்வாலயம் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்
இடவை வைப்புத் தலத்தைக் குறிப்பிடும் பதிகம்

திருநாவுக்கரசரின் 6-ம் திருமுறையில் 70-வது பதிகத்தில் 3-வது பாடலில் இந்த வைப்புத் தலத்தைப் பற்றிய குறிப்பு உள்ளது.


இடைமருது ஈங்கோய் இராமேச்சரம்
இன்னம்பர் ஏர் இடவை ஏமப்பேறூர்
சடைமுடி சாலைக்குடி தக்களூர்
தலையாலங்காடு தலைச்சங்காடு
கொடுமுடி குற்றாலம் கொள்ளம்பூதூர்
கோத்திட்டை கோட்டாறு கோட்டுக்காடு
கடைமுடி கானூர் கடம்பந்துறை
கயிலாயநாதனையே காணலாமே.

பொழிப்புரை :

இடைமருது, ஈங்கோய், இராமேச்சரம், இன்னம்பர், ஏர், இடவை, ஏமப்பேறூர், சடைமுடி, சாலைக்குடி, 
தக்களூர், தலையாலங்காடு, தலைச்சங்காடு, கொடுமுடி, குற்றாலம், கொள்ளம்பூதூர், கோத்திட்டை, 
கோட்டாறு, கோட்டுக்காடு, கடைமுடி, கானூர், கடம்பந்துறை ஆகிய இவற்றில் கயிலாய நாதனைக் 
காணலாம்.

காவிரி ஆறுக்கும், திருமணிமுத்தாறுக்கும் இடையே அமைந்த செழிப்பான ஊர் என்பதால் "நஞ்சை இடையாறு' என்ற காரணப் பெயர் இந்த தலத்திற்கு ஏற்பட்டது. கோயில்கள் நிறைந்த புண்ணிய பூமி இது. ஊரைச் சுற்றி பெருந்தெய்வ, சிறுதெய்வ கோயில்கள் உள்ளன. இந்த கோயிலின் சுற்று மதிலுக்குள்ளேயே சீனிவாச பெருமாள் கோயிலும் உள்ளது.

இராசேந்திர சிங்கவள நாட்டு மண்ணி நாட்டு இடவை எனக் கல்வெட்டுக்களில் குறிப்பிடப்பட்டுள்ள இக்கோயில் முதலாம் ராஜராஜசோழன், அவரது மகன் ராஜேந்திரசோழன் கட்டினார்கள் என்பதற்கு கல் வெட்டு சான்று உள்ளது. பழம்பெருமை வாய்ந்த இந்த கோயில் கி.பி.10ம் நூற்றாண்டில் இக்கோயில் கட்டப்பட்டதாக தகவல் உள்ளது. இத்தல இறைவனை மகாவிஷ்ணு வழிபட்டுள்ளார். கொங்கு வேளாளர் சமூகத்தின் ராஜா சாமி என்ற சிவன் கோவிலும் நஞ்சை இடையாறு தலத்தில் உள்ளது.

பஞ்ச பாண்டவர்களில் பலசாலியான பீமனால் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிவலிங்கம் நஞ்சை இடையாறில் உள்ளது. பீமன் மிகவும் பலம் மிக்கவன் என கருதிக்கொண்டிருந்தான். தன்னைவிட இந்த உலகில் பலசாலி யாருமில்லை என சொல்லித் திரிந்தான். அவன் நல்லவன் ஆயினும் இந்த ஆணவம் அவனது புகழை குறைத்தது. அவனுக்கு புத்தி புகட்ட திருமால் செய்த ஏற்பாட்டின் படி சிவபெருமான் மனித உடலும், மிருக தலையும் கொண்ட புருஷாமிருகம் என்ற ஒன்றை ஏவினார். அந்த மிருகத்தின் சக்தியின் முன் பீமனால் நிற்க முடியவில்லை. தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக, "கோவிந்தா, கோபாலா' என கதறிக்கொண்டே ஓடினான்.

சிவபெருமானின் அருளால் அந்த மிருகத்திடமிருந்து தப்பினான். சேர்வராயன்மலையில் உற்பத்தியாகி பாயும் திருமணி முத்தாற்றின் கரையோரத்தில் உள்ள ஐந்து இடங்களில் சிவ பூஜை செய்தான். அங்கே சிவபெருமான் எழுந்தருளினார். சேலம் சுகவனேசுவர் கோயில், உத்தமசோழபுரம் கரபுரநாதசுவாமி கோயில், பில்லூர் வீரட்டேஸ்வரர், பரமத்தி பீமேஸ்வரர், நஞ்சை இடையாறு திருஎயிலிநாதர் கோயில்களே அவை.

ஆலயம் பற்றிய செய்திகள் மூலம் தமிழ் விக்கிபீடியா