தேவார வைப்புத் தலங்கள்

வைப்புத் தலங்கள் இருப்பிடம் மற்றும் விபரங்கள் பற்றிக் கூறும் இணையதளம்

Main menu


இத்திருத்தாண்டகம் மலையாய் உள்ள தலங்களை வகுத்து அருளிச்செய்தது. இந்த வைப்புத் தலத்தைக் குறிப்பிடும் பதிகப் பாடலில் கூறப்பட்டுள்ள மகேந்திரம், நீலமலை, விந்தம், சையம், மேரு, உதயமலை, அத்தமலை ஆகியவையும் தேவார வைப்புத் தலங்களாகும்.

தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்கந்தமாதனம் (திருச்செந்தூர் முருகன் கோவிலின் ஒரு பகுதி)
இறைவன் பெயர்செந்திலாண்டவர்
இறைவி பெயர்
பதிகம்அப்பர் (6-71-9)
எப்படிப் போவது மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய ஊர்களிலிருந்து திருச்செந்தூர் செல்ல நிறைய பேருந்து வசதிகள் உள்ளன. சென்னையில் இருந்து திருச்செந்தூருக்கு நேரடி ரயில் வசதியும் உள்ளது.
ஆலய முகவரி அருள்மிகு செந்திலாண்டவர் திருக்கோவில்
திருச்செந்தூர்
தூத்துக்குடி மாவட்டம்
PIN - 628215

இவ்வாலயம் தினந்தோறும் காலை 5 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 10-30 மணி வரையிலும் திறந்திருக்கும்.
கந்தமாதனம் வைப்புத் தலத்தைக் குறிப்பிடும் பதிகம்

திருநாவுக்கரசரின் 6-ம் திருமுறையில் 71-வது பதிகத்தில் 9-வது பாடலில் இந்த வைப்புத் தலத்தைப் பற்றிய குறிப்பு உள்ளது.


கந்தமாதனம் கயிலைமலை கேதாரம்	6-71-9
காளத்தி கழுக்குன்றம் கண்ணா ரண்ணா
மந்தமாம் பொழிற்சாரல் வடபற்பதம்
மகேந்திரமாமலை நீலம் ஏமகூடம்
விந்தமாமலை வேதம் சையம் மிக்க
வியன் பொதியின்மலை மேரு உதயம் அத்தம்
இந்துசேகரன் உறையும் மலைகள் மற்றும்
ஏத்துவோம் இடர்கெடநின்று ஏத்துவோமே.

பொழிப்புரை :

கந்தமாதனம், கயிலைமலை, கேதாரம், காளத்தி, கழுக்குன்றம், இடமகன்ற அண்ணாமலை, தென்றல் 
தவழும் பொழில்களை உடைய சரிவுகளுடன் கூடிய வடபற்பதம், மகேந்திரமாமலை, நீலமலை, 
ஏமகூடமலை, விந்தமாமலை, வேதமலை, சையமலை, சோலைகள் மிக்க அகன்ற பொதியின்மலை. 
மேருமலை, உதயமலை, அத்தமலை ஆகிய இவையும் பிறவுமாகிய சந்திரனை முடியிலணிந்த 
சிவபெருமானுடைய மலைகளைப் புகழ்வோம், எம் இடர்கெடத் திசைநோக்கி நின்று அவற்றைப் 
புகழ்ந்து போற்றுவோம்.

கந்தமாதனம் திருச்செந்தூர் செந்திலாண்டவர் கோயிலின் வடபால் உள்ள பெருமாள் கோயிலை ஒட்டினாற் போல, மணலால் சிறு மலைப்பகுதி போலஅமைக்கப்பட்டுள்ளது. இவ்விடமே வைப்புத் தலமாகக் கருதப்படுகிறது. முருகப்பெருமான் விடுத்த தூதுராகிய வீரவாகு தேவர் கந்தமாதனக் குன்றினின்றும் எழுந்து வீர மகேந்திரத்தை நோக்கிச் சென்றார் என்று கந்த புராணம் மகேந்திர காண்டத்தில் கூறப்பட்டுள்ளது.