இந்த வைப்புத் தலத்தைக் குறிப்பிடும் பதிகப் பாடலில் கூறப்பட்டுள்ள செம்பங்குடி, நல்லக்குடி, தென்களக்குடி, கடையக்குடி, மாணிகுடி, விடைவாய்க்குடி, புற்குடி, மாகுடி, புதுக்குடி ஆகியவையும் தேவார வைப்புத் தலங்களாகும்.
கங்காளர், ரிஷி பத்தினி
வசிஷ்டர், அருந்ததி
கோஷ்டத்தில் லிங்கோத்பவர்
தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
| தகவல் பலகை | |
|---|---|
| சிவஸ்தலம் பெயர் | கருந்திட்டைக்குடி (இன்றைய நாளில் கரந்தை என்று பெயர்) |
| இறைவன் பெயர் | கருணாசுவாமி, வசிஷ்டேஸ்வரர் |
| இறைவி பெயர் | பெரியநாயகி |
| பதிகம் | அப்பர் (6-71-3) |
| எப்படிப் போவது | தஞ்சாவூர் நகரத்தின் வடபகுதியில் திருவையாறு செல்லும் வழியில் கரந்தை என்று அழைக்கப்படும் இடத்தில் இந்த வைப்புத் தல ஆலயம் உள்ளது. |
| ஆலய முகவரி |
அருள்மிகு கருணாசுவாமி திருக்கோவில் கரந்தை கருந்திட்டைக்குடி தஞ்சாவூர் தஞ்சாவூர் மாவட்டம் PIN - 613002 இவ்வாலயம் தினந்தோறும் காலை 7-30 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8-30 மணி வரையிலும் திறந்திருக்கும். |
திருநாவுக்கரசரின் 6-ம் திருமுறையில் 71-வது பதிகத்தில் 3-வது பாடலில் இந்த வைப்புத் தலத்தைப் பற்றிய குறிப்பு உள்ளது. இத்திருத்தாண்டகம் "குடி" என முடியும் தலங்களை வகுத்தருளிச் செய்தது
நற்கொடி மேல் விடையுயர்த்த நம்பன் செம்பங்குடி நல்லக்குடி நளி நாட் டியத்தான்குடி கற்குடி தென்களக்குடி செங்காட்டங்குடி கருந்திட்டைக்குடி கடையக்குடி காணுங்கால் விற்குடி வேள்விக்குடி நல் வேட்டக்குடி வேதிகுடி மாணிகுடி விடைவாய்க்குடி புற்குடி மாகுடி தேவன்குடி நீலக்குடி புதுக்குடியும் போற்ற இடர் போகுமன்றே. பொழிப்புரை : நல்ல இடபக் கொடியை மேலே உயரத்தூக்கியவனும், நம்புதற்குரியவனுமாகிய சிவபெருமானுடைய செம்பங்குடி, நல்லக்குடி, பெருமைமிக்க நாட்டியத்தான்குடி, கற்குடி, இனிய களக்குடி, செங்காட்டங்குடி, கருந்திட்டைக்குடி, கடையக்குடி ஆகியவற்றோடு ஆராயுங்கால் குடியில் முடியும் ஊர்களாகிய விற்குடி, வேள்விக் குடி, நன்மமைமிகு வேட்டக்குடி, வேதிகுடி, மாணிகுடி, விடைவாய்க் குடி, புற்குடி, மாகுடி, தேவன்குடி, நீலக்குடி, புதுக்குடி என்பனவற்றையும் புகழ்ந்து கூறத் துன்பம் நீங்கும்.
கோவில் அமைப்பு: வசிஷ்ட முனிவரால் இத்தலத்து லிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டதால் இறைவன் வசிஷ்டேஸ்வரர் என்றும், முனிவரால் தோற்றுவிக்கப்பட்ட தீர்த்தம் அவர் பெயரால் வசிஷ்ட தீர்த்தம் என்றும் அழைக்கப்படுகிறது. இத்தீர்த்தம் இறைவன் சந்நிதிக்கு எதிரில் கோவிலுக்கு வெளியே உள்ளது. கோயிலுக்கு எதிரில் உள்ள குளத்தில் நீராடி சோழ மன்னன் கரிகாலன் கருங்குஷ்டம் நோய் நீங்கப் பெற்றதால் அவனுக்கு அருள் புரிந்த இத்தல இறைவனுக்கு கருணாசுவாமி என்ற பெயரும் வழங்கலாயிற்று. இந்த வசிஷ்ட தீர்த்தத்தில் தொடர்ந்து 45 நாள்கள் நீராடி, வசிஷ்டேஸ்வரரை வழிபட்டால் கருங்குட்டம் முதலான சரும நோய்கள் தீரும் என்பது நம்பிக்கை.
ஆலயம் மூன்று நிலை கோபுரத்துடன் அமைந்திருக்கிறது. இறைவன், இறைவி தனி சந்நிதிகளில் எழுந்தருளியுள்ளனர். இறைவன் கருவறை கோஷ்டத்தில் உள்ள சிற்பங்கள் கலை துணுக்கத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளன. கோஷ்டத்தில் விரித்த சடையுடன் முயலகன் மீது காலை ஊன்றிய படி காணப்படும் ஆடலரசர் சிற்பம் மிக அழகானது. ஆனால் இடது கையும், இடது காலும் பின்னப்பட்டுள்ளன. கோஷ்டத்தில் காணப்படும் கங்காளர் சிற்பமும், லிங்கோத்பவர் சிற்பமும் கண்டு ரசிக்க வேண்டியவை. கோஷ்டத்தில் இத்தலத்தில் பூஜை செய்த வசிஷ்டருக்கும் சிலாவுருவம் இருப்பதைக் காணலாம். இத்தலத்தில் காணப்படும் அர்த்தநாரீஸ்வரர் உருவமும் சற்று வித்தியாசமானது. அநேகமாக எல்லா சிவாலயங்களிலும் உள்ள அர்த்தநாரீஸ்வரர் சிற்பத்தில் சிவன் வலதுபுறமும், உமையம்மை இடதுபுறமும் இருப்பார்கள். ஆனால் இங்கு உமை வலதுபுறத்திலும், சிவன் இடதுபுறத்திலும் மாறி இருக்கக் காணலாம்.
கரிகாலச் சோழனால் திருப்பணி செய்யப்பட்ட இவ்வாலயம் கருங்கல் கோயிலாக, வெளவால் நெற்றி மண்டப அமைப்புடன், சிற்பச் செறிவுடன் விளங்குகிறது. ஆலயத்தின் வெளிப் பிராகாரத்தில் நான்கு மூலைகளிலும் நான்கு விநாயகர் சந்நிதிகள் உள்ளன. நவக்கிரக சந்நிதியும் இங்குள்ளது. இறைவன் சந்நிதிக்குள் செல்லும் நுழைவு வாயிலில் இருபுறமும் யானைகள் காணப்படுவது சற்று வித்தியாசமாக உள்ளது. இறைவி சந்நிதிக்குள் செல்லும் நுழைவு வாயிலில் இருபுறமும் துவாரபாலகியர்களும், வாயில் மேல் முகப்பில் ரிஷப வாகனத்தில் சிவன், பார்வதியும், அருகில் இருபுறமும் விநாயகரும், முருகரும் காட்சி அளிக்கின்றனர்.
| கருந்திட்டைக்குடி கருணாசுவாமி ஆலயம் புகைப்படங்கள் | ||
|---|---|---|
ஆலயத்தின் 3 நிலை கோபுரம் |
மூலவர் கருணாசுவாமி சந்நிதி |
கோஷ்டத்தில் ஆடலரசர், அப்பர், சம்பந்தர் |
கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி |
சுவாமி மற்றும் அம்பாள் கருவறை விமானங்கள் |
ஆலயத்தின் உட்புறத் தோற்றம் |