தேவார வைப்புத் தலங்கள்

வைப்புத் தலங்கள் இருப்பிடம் மற்றும் விபரங்கள் பற்றிக் கூறும் இணையதளம்

Main menu


இப்பதிகம் திருப்புறம்பியம் தலத்தைக் குறிக்கும் பதிகமாகும். இந்த வைப்புத் தலத்தைக் குறிப்பிடும் பதிகப் பாடலில் கூறப்பட்டுள்ள நியமம் என்ற தலமும் தேவார வைப்புத் தலமாகும்.

தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்கழுநீர்குன்றம் (திருத்தணி மலை ஒரு பகுதி)
இறைவன் பெயர்செங்கல்வராயசுவாமி
இறைவி பெயர்
பதிகம்அப்பர் (6-13-4)
எப்படிப் போவது திருந்நணி சுப்பிரமணியசுவாமி மலைக்கோவிலின் ஒரு பகுதியாக இந்த வைப்புத் தலம் உள்ளது. சென்னை, அரக்கோணம், செங்கல்பட்டு மற்றும் தமிழ்தாட்டின் பல பகுதிகளில் இருந்தும் திருத்தணிக்கு நிறைய பேருந்து வசதிகள் உள்ளன.
ஆலய முகவரி அருள்மிகு செங்கழுநீர் விநாயகர் திருக்கோவில்
அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில்,
திருத்தணி
காஞ்சீபுரம் மாவட்டம்
PIN - 631209

இவ்வாலயத்தில் பூஜைகள் ஏதுமில்லை. படிகளில் கீழே இறங்கிச் சென்று சிவலிங்க மூர்த்தத்தை தரிசனம் செய்து வரலாம்.
கழுநீர்குன்றம் வைப்புத் தலத்தைக் குறிப்பிடும் பதிகம்

திருநாவுக்கரசரின் 6-ம் திருமுறையில் 13-வது பதிகத்தில் 4-வது பாடலில் இந்த வைப்புத் தலத்தைப் பற்றிய குறிப்பு உள்ளது. இப்பதிகம் திருப்புறம்பியம் தலத்தைக் குறிக்கும் பதிகமாகும்.


பன்மலிந்த வெண்தலை கையில் ஏந்திப்`	 		
பன்முகில்போல் மேனிப் பவந்த நாதர்
நெல் மலிந்த நெய்த்தானம் சோற்றுத்துறை
நியமம் துருத்தியும் நீடூர் பாச்சில்
கல் மலிந்து ஓங்கு கழுநீர்க்குன்றம்
கடல் நாகைக் காரோணம் கைவிட்டு இந்நாள்
பொன்மலிந்த கோதையரும் தாமும் எல்லாம்
புறம்பயம் நம் ஊர் என்று போயினாரே.

பொழிப்புரை:			www.thevaaram.org

பல்மிக்க வெள்ளிய மண்டையோட்டைக் கையில் ஏந்திப் பனிபொழியும் மேகம் போன்று 
திருநீற்றால் வெள்ளிய மேனியை உடைய வஞ்சகராகிய எம் தலைவர், நெல் மிக விளையும் 
நெய்த்தானம், சோற்றுத்துறை, நியமம், துருத்தி, நீடூர், பாச்சிலாச்சிராமம், கழுநீர்குன்றம், 
கடற்கரையிலமைந்த நாகைக்காரோணம் என்ற தாம் உகந்தருளியிருந்த திருத்தலங்களை 
விடுத்து, இன்று பொலிவுமிக்க தம் தேவிமாரோடு கூடி புறம்பயம் நம் ஊர் என்று போயினார்.

திருத்தணி சுப்பிரமணிய சுவாமி மலைக்கோவில் வெளிப் பிராகாரம் சுற்றி வரும் போது மேற்குச் சுற்றில் மலை மீதிருந்து கீழே இறங்கிச் செல்ல படிக்கட்டுகள் உள்ளன. இந்தப் படிகளில் கீழே இறங்கிச் சென்றால் இடதுபுறம் ஒரு குளம் இருப்பதைக் காணலாம். குளத்திற்கு எதிலே ஒரு பாழடைந்த சிறிய மண்டபம் ஒன்று உள்ளது. இதன் உள்ளே சென்றால் ஒரு சிவலிங்கமும், அதற்கருகே ஒரு விநாயகரும் இருப்பதைக் காணலாம். இந்த சிவலிங்க மூர்த்தம் தான் செங்கல்வராயசுவாமி எனப்படுகிறார். இவர் எழுந்தருளியுள்ள சந்நிதியைத் தான் திருநாவுக்கரசர் தனது திருப்புறம்பியம் பதிகத்தில் கழுநீர்குன்றம் எனப் பாடியுள்ளார்.

இந்த மண்டபத்தில் உள்ள விநாயகர் பெயரில் இக்கோவில் செங்கழுநீர் விநாயகர் கோவில் என்று அழைக்கபடுகிறது. முன் கூறிய குளத்திற்கு நிருதி மூலையில் சரஸ்வதீஸ்வரர் கோவில் என்று ஒன்றுள்ளது. நல்ல நிலையில் விளங்கும் இக்கோவில் வைப்புத் தலமல்ல.