இந்த வைப்புத் தலத்தைக் குறிப்பிடும் பதிகப் பாடலில் கூறப்பட்டுள்ள தேவனூர், பொன்னூர், புரிசை ஆகியவையும் தேவார வைப்புத் தலங்களாகும்.
தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
| தகவல் பலகை | |
|---|---|
| சிவஸ்தலம் பெயர் | தென்னூர் |
| இறைவன் பெயர் | தான்தோன்றீஸ்வரர் |
| இறைவி பெயர் | குங்குமவல்லி |
| பதிகம் | சுந்தரர் (7-12-6) |
| எப்படிப் போவது | காவிரி தென்கரைத் தலமான உறையூர் பஞ்சவர்னேஸ்வரர் கோவிலில் இருந்து கிழக்கே சுமார் 1 கி.மீ. தொலைவில் தென்னூர் தான்தோன்றீஸ்வரர் சிவாலயம் உள்ளது. |
| ஆலய முகவரி |
அருள்மிகு தான்தோன்றீஸ்வரர் திருக்கோவில் தென்னூர் உறையூர் அஞ்சல் திருச்சி வட்டம் திருச்சி மாவட்டம் PIN - 620003 |
சுந்தரரின் 7-ம் திருமுறையில் 12-வது பதிகத்தில் 6-வது பாடலில் இந்த வைப்புத் தலத்தைப் பற்றிய குறிப்பு உள்ளது.
தென்னூர் கைம்மைத் திருச்சுழி யற்றிருக் கானப்பேர் பன்னூர் புக்கு உறையும் பர மற்கு இடம் பாய்நலம் என்னூர் எங்கள் பிரான் உறையும் திருத்தேவனூர் பொன்னூர் நாட்டுப் பொன்னூர் புரிசை நாட்டுப் புரிசையே. பொழிப்புரை : சிறப்பித்துச் சொல்லப்படுகின்ற தலங்களிலே எழுந்தருளியிருக்கும் சிவபெருமானுக்கு இடமாய், பரவிய புகழையுடையன எவ்வூர்கள் என்றால், அவை எங்கள் பெருமான் எழுந்தருளியுள்ள தென்னூர், ஒழுக்கம் நிறைந்த சுழியல், கானப்பேர், தேவனூர், பொன்னூர் நாட்டிலுள்ள பொன்னூர், புரிசை நாட்டிலுள்ள புரிசை என்பவை
சங்க காலத்தில் சோழநாட்டுத் தலைநகராக இருந்தது உறையூர். உறையூருக்குத் தெற்கில் நேரி என்னும் ஊர் இருந்தது. எனவே உறையூர்க் கோட்டையின் தெற்குப்புற வாயில் நேரிவாயில் எனப்பட்டது. இக்காலத்தில் தென்னூர் என வழங்குகின்றனர். சோழர் தலைநகரின் தெற்குப்புறத்தில் உள்ள ஊர் என்பதால் தென்னூர் என்று பெயர் பெற்றது.. தேவாரம் பாடப்பெற்ற காலத்தில் உறையூரும், தென்னூரும் பிரபலமான ஊர்களாக இருந்தன. எனவே சுந்தரர் தனது திருநாட்டுத்தொகை பதிகத்தில் குறிப்பிட்ட தென்னூர் என்ற வைப்புத் தலம் இதுவே என்று கருதலாம்.
தல வரலாறு: உறையூரைத் தலைநகராகக் கொண்டு அரசாண்டு வந்த சோழ மன்னனின் மனைவி காந்திமதி ஒரு சிறந்த சிவபக்தை. தினந்தோறும் திருச்சிராப்பள்ளி மலைக்குச் சென்று தாயுமானவரை வழிபட்டு வந்தாள். அவள் பிள்ளைப்பேறு அடைந்த போதும் தவறாமல் வழிபாடு செய்து வந்தாள். ஒருநாள் உறையூரில் இருந்து சிராப்பள்ளி சென்று கொண்டிருந்தபோது வெய்யில் கொடுமை தாளாமல் வழியில் மயங்கி விழுந்தாள். தனது இறை வழிபாடு தடைபட்டு விட்டதே என்று மிகவும் மனம் வருந்தினாள். காந்திமதியின் மனவருத்தத்தைப் போக்க விரும்பிய இறைவன் அந்த இடத்திலேயே காந்திமதிக்குக் காட்சி தந்தார். இறைவனுக்கு தான்தோன்றீஸ்வரர் என்ற பெயரும் உண்டாயிற்று. சோழ மன்னன் அவ்விடத்தில் ஓரு கோவில் கட்டி இறைவனைத் தொழுதான். அந்த ஆலயமே இஙுகுள்ள குங்குமவல்லி சமேத தான்தோன்றீஸ்வரர் ஆலயமாகும்.
| தென்னூர் தான்தோன்றீஸ்வரர் ஆலயம் புகைப்படங்கள் | ||
|---|---|---|
ஆலயத்தின் முகப்பு வாயில் |
நவக்கிரக சந்நிதி |
கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி |
கோஷ்டத்தில் அர்த்தநாரீஸ்வரர் |
மூலவர் தான்தோன்றீஸ்வரர் |
இறைவி குங்குமவல்லி |