தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
| தகவல் பலகை | |
|---|---|
| சிவஸ்தலம் பெயர் | தேனூர் (தென்னூர்) |
| இறைவன் பெயர் | நந்திகேசுவரர் |
| இறைவி பெயர் | மகாசம்பத்கௌரி. |
| பதிகம் | சம்பந்தர் (1-61-9), அப்பர் (6-41-9) |
| எப்படிப் போவது | திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து எதுமலை வழியாக துறையூர் செல்லும் சாலை வழியில் வடக்கே சுமார் 32 கி.மீ. தொலைவில் தேனூர் உள்ளது. திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் இருந்தும் வடமேற்கே சுமார் 11 கி.மீ. தொலைவில் உள்ள இத்தலத்தை அடையலாம். |
| ஆலய முகவரி |
அருள்மிகு நந்திகேசுவரர் திருக்கோவில் தேனூர் வழி எதுமலை பெரம்பலூர் வட்டம் பெரம்பலூர் மாவட்டம் PIN - 621114 இவ்வாலயத்தில் ஒரு கால பூஜை நடைபெறுகிறது. |
சம்பந்தரின் 1-ம் திருமுறையில் 61-வது பதிகத்தில் 9-வது பாடலில் இந்த வைப்புத் தலத்தைப் பற்றிய குறிப்பு உள்ளது. இந்தப் பதிகம் திருசெங்காட்டங்குடி தலத்தைப் போற்றி அருளிய பதிகமாகும்.
ஆனூரா வுழி தருவான் அன்றி இருவர் தேர்ந்துணரா வானூரான் வையகத்தான் வாழ்த்துவார் மனத்துளான் தேனூரான் செங்காட்டங்குடியான் சிற்றம்பலத்தான் கானூரான் கழுமலத்தான் கணபதீச் சரத்தானே. பொழிப்புரை; www.thevaaram.org விடைமிசை ஏறி அதனை ஊர்ந்து பல இடங்களிலும் திரிபவன். முன்னொரு காலத்தே திருமால் பிரமன் ஆகிய இருவர் அடிமுடிகளைத் தேர்ந்து உணர முடியாதவாறு வானளாவ ஓங்கி நின்றவன். இவ்வுலகில் சிற்றம்பலத்திலும் தேனூரிலும், கானூரிலும், கழுமலத்திலும் விளங்குபவன். அவ்விறைவன் திருச்செங்காட்டங்குடியில் கணபதீச்சரத்தில் எழுந்தருளியுள்ளான்திருநாவுக்கரசரின் 6-ம் திருமுறையில் 41-வது பதிகத்தில் 9-வது பாடலிலும் இந்த வைப்புத் தலத்தைப் பற்றிய குறிப்பு உள்ளது. இந்தப் பதிகம் திருநெய்த்தானம் தலத்தைப் போற்றி அருளிய பதிகமாகும்.
தந்தை தாயில்லாதாய் நீயே யென்றும் தலையார் கயிலாயன் நீயே யென்றும் எந்தாய் எம்பிரானானாய் நீயே யென்றும் ஏகம்பத்து என்னீசன் நீயே யென்றும் முந்திய முக்கணாய் நீயே யென்றும் மூவலூர் மேவினாய் நீயே யென்றும் சிந்தையாய்த் தேனூராய் நீயே யென்றும் நின்ற நெய்த்தானாம் என் நெஞ்சுளாயே. பொழிப்புரை; www.thevaaram.org நின்ற நெய்த்தானா ! நீ எங்கள் உள்ளத்திலும் மேம்பட்ட கயிலாயம், ஏகம்பம், மூவலூர், தேனூர் என்ற திருத்தலங்களிலும் உறைகின்றாய். தந்தைதாய் இல்லாத பிறவாயாக்கைப் பெரியோனாய், யாவருக்கும் முற்பட்ட முக்கண்ணனாய், எங்களுக்குத் தாய் தந்தையாகவும் தலைவனாகவும் உள்ளாய் என்று அடியார்கள் நாங்கள் நினைத்து துதிக்கின்றோம்.
சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து தேனூர் இருப்பிடத்தைக் காட்டும் வரைபடம்