தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
| தகவல் பலகை | |
|---|---|
| சிவஸ்தலம் பெயர் | அருள்மிகு சௌந்தர நாயகி உடனுறை நந்தீஸ்வரர் திருக்கோவில். |
| இறைவன் பெயர் | ஶ்ரீ நந்தீஸ்வரர் |
| இறைவி பெயர் | சௌந்தர நாயகி |
| பதிகம் | திருநாவுக்கரசர் ( 6-71-8 ) |
| எப்படிப் போவது | தாம்பரம் செங்கல்பட்டு சாலையில் கூடுவாஞ்சேரிக்கு அருகாமையில் உள்ளது. கூடுவாஞ்சேரி பேருந்து நிலையத்தில் இருந்து நடந்து செல்லும் தூரத்தில் உள்ளது. |
| ஆலய முகவரி | அருள்மிகு நந்தீஸ்வரர் திருக்கோவில், நந்தீஸ்வரர் காலனி சாலை, நந்திவரம், கூடுவாஞ்சேரி, செங்கல்பட்டு 603202. தினமும் கோவிலில் இரண்டு கால பூஜை நடை பெறுகிறது. காலை 7 மணிக்கு கால சந்தி பூஜையும், மாலை 4.30 மணிக்கு சாயரட்சை பூஜையும் நடைபெறுகிறது. |
நாடகமாடிட நந்திகேச்சுரம் மாகாளேச்சுரம் நாகேச்சுரம் நாகளேச்சுரம் நன் கான கோடீச்சுரம் கொண்டீச்சுரம் திண்டீச்சுரம் குக்குடேச்சுரம் மக்கீச்சுரம் கூறுங்கால் ஆடகேச்சுரம் அகத்தீச்சுரம் அயனீச்சுரம் அத்தீச்சுரம் சித்தீச்சுரம் அந்தண் கானல் ஈடுதிரை இராமேச்சுரம் என்றென்றேத்தி இறைவனுறை சுரம் பலவும் இயம்புவோமே
நந்திகேச்சுரம் என்ற பெயரில் இரு தேவார வைப்புதலங்கள் அறியப்படுகிறது. ஒன்று கூடுவாஞ்சேரியில் உள்ள நந்தீஸ்வரர்.இரண்டாவது தலம், மைசூரில் உள்ள நந்தி மலை மீதுள்ள நந்தீஸ்வரர் கோவில். மைசூரில் உள்ள நந்தீஸ்வரர் பற்றிய தகவல்கள் சரிவர கிடைக்கவில்லை.
கூடுவாஞ்சேரியில் உள்ள அருள்மிகு நந்தீஸ்வரர் திருக்கோவில் ஒரு தேவார பாடல் பெற்ற வைப்புத்தலமாகும். இந்த கோவில் மூர்த்தி, தலம், தீர்த்தம் மூன்றும் அமைய பெற்ற சிறப்புடையது. கோவில் 1500 ஆண்டுகளுக்கு முற்பட்டது.மூலவர் நந்தீஸ்வரர் சுயம்பு மூர்த்தி ஆவார்.
புகழ் பெற்ற சிவ தலமானதால் நந்திகேச்சுரம் மருவி நந்திவரம் என்றும், நந்தியம் பெருமான் தவம் இருந்து ஈசனிடம் வரம் பெற்றதால் நந்திவரம் என்று பெயர் பெற்றதாக சொல்லப்படுகிறது. பல்லவர் கால வழிபாட்டு தலமாகவும் இருந்துள்ளது.
மூலவர் நந்தீஸ்வரர் கிழக்கு நோக்கி வீற்று இருக்கிறார். அன்னை சௌந்தர நாயகி தெற்கு நோக்கி அருள் செய்கிறார். கோவிலுக்கு செல்ல கிழக்கு மற்றும் தெற்கில் நுழைவு வாயில்கள் உள்ளது. கிழக்கு வாயிலுக்கு எதிரே நந்தீஸ்வரர் தீர்த்தம் உள்ளது. திருச்சுற்றில் விநாயகர், வள்ளி தெய்வானை சுப்பிரமணியர், நடராஜர், பைரவர்,வீரபத்திரர் சன்னதிகள் உள்ளன. கோஷ்டத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா உள்ளனர். கோவிலின் வெளி பிரகாரத்தில், 63 நாயன்மார்கள், சீனிவாச பெருமாள், வராகி அம்மன், சரஸ்வதி, லக்ஷ்மி, ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர் சன்னதிகள் அமைந்துள்ளன. இங்கு உறையும் இறைவன் நந்தீஸ்வர பெருமான் என்பதால், பிரதோஷ கால தரிசனம் இங்கு மிகவும் விசேஷமானது. மேலும், நூறு ஆண்டுகளை கடந்த நாகலிங்க மரம் கோவிலின் வெளி பிரகாரத்தில் அமைந்துள்ளது. நாகலிங்க மரத்தின் அடியில் நந்தியம் பெருமான் மேற்கு நோக்கி அருள் செய்கிறார்.