இந்த வைப்புத் தலத்தைக் குறிப்பிடும் பதிகப் பாடலில் கூறப்பட்டுள்ள நியமம் என்ற சொல் பரிதிநியமம் என்கிற காவிரி தென்கரை பாடல் பெற்ற சிவஸ்தலத்தைக் குறிப்பிடுகிறது என்றும் அது ஒரு வைப்புத் தலத்தைக் குறிக்கும் சொல் அல்ல என்றும் ஒரு சாரார் கூறுவர்.
தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
| தகவல் பலகை | |
|---|---|
| சிவஸ்தலம் பெயர் | நியமம் (நேமம்) |
| இறைவன் பெயர் | ஐராவதேஸ்வரர் |
| இறைவி பெயர் | அலங்காரவல்லி |
| பதிகம் | அப்பர் (6-13-4) |
| எப்படிப் போவது | தஞ்சாவூர் - திருவையாறு சாலையில் திருக்கண்டியூர் அடைந்து, அங்கிருந்து பிரிந்து செல்லும் கல்லணை சாலை வழியில் மேலதிருக்காட்டுப்பள்ளியை அடைந்து அங்கிருந்து 3 கி.மீ தொலைவில் நியமம் உள்ளது. |
| ஆலய முகவரி |
அருள்மிகு ஐராவதேஸ்வரர் திருக்கோவில் நேமம் அஞ்சல் வழி திருக்காட்டுப்பள்ளி திருவையாறு வட்டம் தஞ்சாவூர் மாவட்டம் PIN - 613104 இவ்வாலயம் தினந்தோறும் காலை 10 மணி முதல் 11-30 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும். |
திருநாவுக்கரசரின் 6-ம் திருமுறையில் 13-வது பதிகத்தில் 4-வது பாடலில் இந்த வைப்புத் தலத்தைப் பற்றிய குறிப்பு உள்ளது. இந்த பதிகம் திருப்புறம்பியம் பாடல் பெற்ற சிவஸ்தலத்தைப் போற்றி அப்பர் பாடியுள்ள பதிகமாகும்.
பன்மலிந்த வெண்தலை கையில் ஏந்திப் பன்முகில்போல் மேனிப்ப வந்த நாதர் நென்மலிந்த நெய்த்தானம் சோற்றுத் துறை நியமம் துருத்தியும் நீடூர் பாச்சில் கன்மலிந்து ஓங்கும் கழுநீர்க் குன்றம் கடல் நாகைக் காரோணம் கைவிட் டிந்நாள் பொன்மலிந்த கோதையருந் தாமு மெல்லாம் புறம்பயம் நம் ஊர் என்று போயினாரே. பொழிப்புரை : பல்மிக்க வெள்ளிய மண்டையோட்டைக் கையில் ஏந்திப் பனிபொழியும் மேகம் போன்று திருநீற்றால் வெள்ளிய மேனியை உடைய வஞ்சகராகிய எம் தலைவர் , நெல் மிக விளையும் நெய்த்தானம், சோற்றுத்துறை, நியமம், துருத்தி, நீடூர், பாச்சிலாச்சிராமம், கற்கள் மிக்க உயர்ந்த கழுக்குன்றம், கடற்கரையிலமைந்த நாகைக்காரோணம் என்ற தாம் உகந்தருளியிருந்த திருத்தலங்களை விடுத்து, இன்று பொலிவுமிக்க தம் தேவிமாரோடு கூடியதாம் புறம்பயம் நம் ஊர் என்று போயினார்
தல வரலாறு: காவிரி நதியின் தென்கரையில் அமைந்துள்ள நியமம் என்றும் இக்காலத்தில் நேமம் என்றும் அழைக்கப்படும் இத்தலம் ஒரு புராண தலமாகும். கிருதா யுகத்தில் பாரிஜாதவனம் என்றும், திரேதா யுகத்தில் பீமேஸ்வரம் என்றும், துவாகர யுகத்தில் இந்திரவனம் என்றும்ர இக்கலி யுகத்தில் ஐராவதேஸ்வரம் என்றும் நியமம் போற்றப்பட்டு உள்ளது. பிரம்மா, இந்திரன், ரம்பை, இந்திரன் வாகனமான ஐராவதம் ஆகியோர் இத்தல இறைவனை வழிபட்டுள்ளனர். பிரம்மாண்ட புராணத்தில் இத்தல இறைவன் பாரிஜாதவனேஸ்வரர், பிரம்மபுரீஸ்வரர், இந்திரபுரீஸ்வரர், புஷ்பவனேஸ்வரர், ஐராவதேஸ்வரர் என்று 5 பெயர்களால் அழைக்கப்பட்டுள்ளார்.
ஒரு சமயம் தேவலோகத்தில் நடனம் புரிந்த ரம்பை அதன் பின களைப்பு மிகுதியால் படுத்து உறங்கி விட்டாள். தூக்கத்தில் அவள் மேலாடை விலகியது. அதை உணராமல் அவள் தூங்கிக் கொண்டு இருக்க அவ்வழியே வந்த நாரதர் அதை கவனித்து கோபம் கொண்டு அவளை பூலோகம் சென்று வாழும் படி சபித்தார். ரம்பையும் பூலோகம் வந்து இத்தலத்தில் சிவபெருமானை வழிபட்டு வந்தாள். இந்திர லோகத்தில் ரம்பை இல்லாமல் நடனம் சோபையின்றி உள்ளதை கவனித்த இந்திரன் அவளை அழைத்து வர ஐராவதத்தை அனுப்பினான். ஐராவதமும் இத்தலம் வந்து ரம்பையைக் கண்டு தேவலோகம் திரும்பி வரும்படி கூற, ரம்பை சிவபெருமான் அனுமதியின்றி திரும்பி வர மாட்டேன் என்று கூறினாள். ரம்பையை பலவந்தமாக தேவலோகம் கூட்டிச் செல்ல தன் துதிக்கையால் தூக்கிச் செல்ல முயன்று அதன் முயற்சியில் தோல்வியுற்று ஐராவதமும் தளர்ந்து கீழே விழுந்தது. ரம்பையும், ஐராவதத்தையும் காணாமல் இந்திரன் இத்தலம் வந்தான். சிவபெருமானை போற்றித் துதித்து ரம்பை மற்றும் ஐராவதத்தையும் இந்திரலோகம் கூட்டிச்செல்ல அனுமதி கேட்டான். இறைவனும் அவர்களை ஆசீர்வதித்து அனுப்பினார்.
ஆலய அமைப்பு: இவ்வாலயம் கிழக்கு தோக்கிய ஒரு மூன்று நிலை இராஜ கோபுரத்துடன் காட்சி அளிக்கிறது. கோபுர வாயிலைக் கடந்து உள்ளே சென்றால் நந்தியெம்பெருமான் சுமார் 3 அடி பள்ளத்தில் காட்சி தருகிறார். உள்ளே கருவறையில் ஐராவதேஸ்வரர் கிழக்கு தோக்கி அருட்காட்சி தருகிறார். கருவறை கோஷ்டங்களில் பிரம்மா, தட்சிணாமூர்த்தி, துர்க்கை ஆகியோரைக் காணலாம். கருவறை மேற்குச் சுற்றில் விநாயகர் மற்றும் வள்ளி தெய்வானையுடன் முருகர் காட்சி தருகின்றனர். நவக்கிரக சந்நிதியும் இங்குள்ளது. சனி பகவான் தனது காக வாகனத்துடன் காட்சி தருகிறார். இத்தலத்தில் இரண்டு அம்மன்கள் உள்ளனர் இருவருமே அலங்காரவல்லி என்ற பெயருடன் விளங்குகின்றனர்.
| நியமம் (நேமம்) ஐராவதேஸ்வரர் ஆலயம் புகைப்படங்கள் | ||
|---|---|---|
நவக்கிரக சந்நிதி |
இறைவன் கருவறை விமானம் |
ஆலயம் உட்புறத் தோற்றம் |
வள்ளி தெய்வானையுடன் முருகர் |
பள்ளத்தில் நந்தி |
காக வாகனத்துடன் சனி பகவான் |