இந்த வைப்புத் தலத்தைக் குறிப்பிடும் பதிகப் பாடல்களில் கூறப்பட்டுள்ள நெய்தல்வாயில், அண்ணல்வாயில், ஞாழல்வாயில், குணவாயில், நெற்குன்றம், நற்குன்றம், உஞ்சேனை மாகாளம் ஆகியவையும் தேவார வைப்புத் தலங்களாகும்.
தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
| தகவல் பலகை | |
|---|---|
| சிவஸ்தலம் பெயர் | நெடுவாயில் (இன்றைய நாளில் நெடுவாசல் என்று பெயர்) |
| இறைவன் பெயர் | சௌந்தரேஸ்வரர் |
| இறைவி பெயர் | அகிலாண்டேஸ்வரி |
| பதிகம் | அப்பர் (6-71-7), சம்பந்தர் (2-39-9) |
| எப்படிப் போவது | மயிலாடுதுறையில் இருந்து ஆக்கூர் செல்லும் சாலை வழியிலுள்ள செம்பொனார்கோவில் அடைந்து அங்கிருந்து தென்கிழக்கே சுமார் 11 கி.மீ. தொலைவில் உள்ள நெடுவாசலை அடையலாம். மயிலாடுதுறை - பொறையார் சாலை வழியிலுள்ள சங்கரன்பந்தல் அடைந்து அங்கிருந்தும் ஆட்டோ மூலம் நெடுவாசல் சென்று அடையலாம். |
| ஆலய முகவரி |
அருள்மிகு சௌந்தரேஸ்வரர் திருக்கோவில் நெடுவாசல் நல்லிச்சேரி அஞ்சல் வழி சங்கரன்பந்தல் தரங்கம்பாடி வட்டம் மயிலாடுதுறை மாவட்டம் PIN - 609309 இவ்வாலயம் தினந்தோறும் காலை 8-30 மணி முதல் பகல் 12-30 மணி வரையிலும், மாலை 4-30 மணி முதல் இரவு 8-30 மணி வரையிலும் திறந்திருக்கும். |
திருநாவுக்கரசரின் 6-ம் திருமுறையில் 70-வது பதிகத்தில் 2-வது பாடலில் இந்த வைப்புத் தலத்தைப் பற்றிய குறிப்பு உள்ளது.
கடு வாயர்தமை நீக்கிஎன்னை ஆட்கொள் கண் நுதலோன் நண்ணும் இடம் அண்ணல்வாயில் நெடுவாயில் நிறை வயல் சூழ் நெய்தல்வாயில் நிகழ் முல்லைவாயிலொடு ஞாழல்வாயில் மடு ஆர் தென்மதுரைநகர் ஆலவாயில் மறிகடல் சூழ் புனவாயில் மாடம் நீடு குடவாயில் குணவாயில் ஆன எல்லாம் புகுவாரைக் கொடுவினைகள் கூடா அன்றே. பொழிப்புரை : கடுக்காயைத் தின்னும் வாயினராகிய சமணரை நீக்கி என்னை ஆட்கொண்ட கண்ணுதற் கடவுளாகிய சிவ பெருமான் விரும்பித் தங்கும் இடங்களாகிய அண்ணல்வாயில், நெடுவாயில், பயிர் நிறைந்த, வயல் சூழ்ந்த நெய்தல்வாயில், நிலவும் முல்லைவாயில், ஞாழல்வாயில், வைகை நீர் பொருந்திய அழகிய மதுரை நகரத்து ஆலவாயில், அலை எழுந்து மடங்கும் கடல் சூழ்ந்த புனவாயில், மாடங்கள் உயர்ந்து தோன்றும் குடவாயில், குண வாயில், ஆகிய இவற்றுள் எல்லாம் புகுந்து வணங்குவாரைக் கொடுவினைகள் ஏதும் ஒரு நாளும் பற்றாது.
சம்பந்தரின் 2-ம் திருமுறையில் 39-வது பதிகத்தில் 9-வது பாடலில் இந்த வைப்புத் தலத்தைப் பற்றிய குறிப்பு உள்ளது.
நெற்குன்றம் ஓத்தூர் நிறைநீர் மருகல்
நெடுவாயில் குறும்பலா நீடு
திருநற்குன்றம் வலம்புரம் நாகேச்சுரம்
நளிர்சோலை உஞ்சேனைமாகாளம் வாய்மூர்
கற்குன்றம் ஒன்று ஏந்தி மழைதடுத்த
கடல் வண்ணனும் மாமலரோனும் காணாச்
சொற்கு என்றும் தொலைவு இலாதான் உறையும்
குடமூக்கென்று சொல்லிக் குலாவுமினே.