தேவார வைப்புத் தலங்கள்

வைப்புத் தலங்கள் இருப்பிடம் மற்றும் விபரங்கள் பற்றிக் கூறும் இணையதளம்

Main menu


இந்த வைப்புத் தலத்தைக் குறிப்பிடும் பதிகப் பாடல்களில் கூறப்பட்டுள்ள மந்தாரம், வாரணாசி, விராடபுரம், விளத்தொட்டி, கண்ணை, காறை,ஆகியவையும் தேவார வைப்புத் தலங்களாகும்.

தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்பிரம்பில் (இன்றைய நாளில் இத்தலம் கள்ளப்பெரம்பூர் என்று வழங்குகிறது)
இறைவன் பெயர்கயிலாசநாதர்
இறைவி பெயர்பெரியநாயகி, ஸ்ரீமதிநாயகி
பதிகம்அப்பர் (6-70-6)
எப்படிப் போவது தஞ்சாவூரில் இருந்து திருச்சிராப்பள்ளி செல்லும் சாலையில் பூதலூர் அருகே தஞ்சாவூரில் இருந்து சுமார் 12 கி.மீ. தொலைவில் கள்ளப்பெரம்பூர் உள்ளது.
ஆலய முகவரிஅருள்மிகு கயிலாசநாதர் திருக்கோவில்
கள்ளப்பெரம்பூர்
கள்ளப்பெரம்பூர் அஞ்சல்
பூதலூர் வட்டம்
தஞ்சாவூர் மாவட்டம்
PIN - 613601

இவ்வாலயம் தினந்தோறும் காலை 9 மணி முதல் பகல் 11 மணி வரையில் திறந்திருக்கும்.
பிரம்பில் வைப்புத் தலத்தைக் குறிப்பிடும் பதிகம்

திருநாவக்கரசரின் 6-ம் திருமுறையில் 70-வது பதிகத்தில் 6-வது பாடலில் இந்த வைப்புத் தலத்தைப் பற்றிய குறிப்பு உள்ளது.


மண்ணிப் படிக்கரை வாழ்கொளிபுத்தூர்		
வக்கரை மந்தாரம் வாரணாசி
வெண்ணி விளத்தொட்டி வேள்விக்குடி
விளமர் விராடபுரம் வேட்களத்தும்
பெண்ணை அருட்டுறை தண் பெண்ணாகடம்
பிரம்பில் பெரும்புலியூர் பெருவேளூரும்
கண்ணை களர் காறை கழிப்பாலையும்
கயிலாய நாதனையே காணலாமே.

பொழிப்புரை :		www.thevaaram.org	

மண்ணிப்படிக்கரை, வாழ்கொளிபுத்தூர், வக்கரை , மந்தாரம், வாரணாசி, விளத்தொட்டி, 
வெண்ணி, வேள்விக்குடி, விளமர், விராடபுரம், வேட்களம், பெண்ணையாற்றங்கரையிலுள்ள 
அருட்டுறை, பெண்ணாகடம், பிரம்பில், பெரும்புலியூர், பெரு வேளூர், கண்ணை, 
களர், காறை, கழிப்பாலை முதலிய இடங்களில் கயிலாயநாதனைக் காணலாம்
தஞ்சாவூரில் இருந்து கள்ளப்பெரம்பூர் (பிரம்பில்) இருப்பிடத்தைக் காட்டும் வரைபடம்
Map courtesy by: Google Maps

கள்ளப்பெரம்பூர் ஆலயத்தின் இன்றைய நிலை. இந்த வீடியோ 19-2-2021 அன்று எடுக்கப்பட்டது.

மாமன்னர் ராஜராஜசோழர் தன் வீரத்தாலும், அபரிமிதமான போர் திறமையாலும், அலைகடல் போன்ற போர் படையாலும், பாண்டியர்களுக்கு எமன் போல திகழ்ந்தார். அதனால் பாண்டிய குலாசனி என பட்ட பெயர் அவருக்கு உண்டு, பாண்டிய குலாசனி வளநாட்டில்தான் தஞ்சாவூர் என்ற தலைநகரம் இருந்தது. மேலும் பாண்டிய குலாசனி வளநாட்டில் 21 நாடுகள் இருந்தன. தஞ்சாவூர் கூற்றத்தில் பல ஊர்கள் இருந்தன. அவை தஞ்சாவூர் கண்ணங்குடி(கண்ணந்தங்குடி). கருந்திட்டான்குடி. குருகாடி(குருவாடி), நத்தமங்கலம், நெற்குப்பை. பெண்ணாகடம், ராஜசுந்தர சதுர்வேதி மங்கலம் (கள்ளப்பெரம்பூர்). தஞ்சை, சிவகங்கை பூங்காவை ஒட்டி உள்ள அகழியை தாண்டி மேற்கில் பூதலூர் செல்லும் சாலையில், சக்கரசாமந்தம் தாண்டி சுமார் 12 கி.மீ. தொலைவில் இருக்கிறது கள்ளப்பெரம்பூர்.

புறவழிச்சாலையை தாண்டியதும் இருபுறமும் கண்ணுக்கெட்டிய தூரம் வரை நெல் வயல்கள் காய்கறி தோட்டங்கள் என பச்சைப்பசேல் என இதமான சூழல் மனதை லேசாக்குகிறது. வெண்ணாற்றின் தென்கரை பகுதியில் தான் இந்த கிராமம் அமைந்துள்ளது. ஊரின் தென்புறம் 640 ஏக்கர் பரப்பில் கள்ளபெரம்பூர் ஏரி அமைந்துள்ளது. இது ஒரு பறவைகள் சரணாலயமாக திகழ்கிறது. அதிகபட்சமாக 84 வகை பறவைகள் வந்து செல்வதாக கணக்கிடப்பட்டுள்ளது. இவ்வூரில் சிவாலயம் ஒன்றும் வரதராஜ பெருமாள் கோயில் ஒன்றும் உள்ளது. இரு கோயில்களுமே முதலாம் குலோத்துங்கன் காலத்தவை. ஊரில் நாயன்மார்களில் முதன்மையானவர்களான திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் இருவருக்கும் திருக்கோவில்களை எழுப்பப்பட்டுள்ளது.

முதலாம் குலோத்துங்க சோழன் காலத்திய கல்வெட்டில், இந்த ஊர் பிரம்பில் என்றும், இராஜசுந்தரி சதுர்வேதி மங்கலம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இராஜசுந்தரி என்பவர் குலோத்துங்கனின் மகளாவார். மற்றொரு கல்வெட்டு இந்தக் கோயிலை ‘ஸ்ரீகயிலாயம்’ என்றும், ‘குலோத்துங்க சோழீச்சரம்’ என்றும் குறிப்பிடுகிறது. கள்ளர் இனத்தவர் வாழும் ஊர் என்பதால் கள்ளர் பிரம்பில் என அழைக்கப்பட்டு இப்போது கள்ளப்பெரம்பூர் என உள்ளது. ஊரின் கிழக்கு பகுதியில் பெரியதொரு குளத்தை எதிரில் கொண்டு ‘ஸ்ரீகயிலாசநாதர்’ என்ற பழைமையான ஒரு சிவாலயம் கம்பீரமாக அமைந்துள்ளது. ராஜ கோபுரம், மண்டபங்கள், உயர்ந்த மதில்சுவர் சிறப்பான மூர்த்திகள், பெரிய மடைப்பள்ளி திருக்குளம் என்று ஆலயம் அனைத்து அம்சங்களுடன் உள்ளது.

சோழர்கள் காலத்திய ஆறு கல்வெட்டுகள் இந்த ஆலயத்தில் உள்ளன. முதலாம் குலோத்துங்கன் தவிர, மூன்றாம் ராஜேந்திரன், மூன்றாம் குலோத்துங்கன் ஆகிய சோழ அரசர்களின் கல்வெட்டுகளோடு, தஞ்சை நாயக்க அரசன் விஜயராகவன், இந்தக் கோயிலுக்கு அளித்த கொடை பற்றிய செய்தி கூறும் கல்வெட்டு ஒன்றும் உண்டு என்கிறது ஒரு குறிப்பு. இக்கோயிலில் காணப்படும் குலோத்துங்கனின் கல்வெட்டு ஒன்று உள்ளூர் சபை தேர்தல்களில் கடைபிடிக்கவேண்டிய சட்டதிட்டங்கள் பற்றியது. ஒரு முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மீண்டும் இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகுதான் தேர்தலில் நிற்க முடியும். மூன்றாம் ஆண்டில் மன்றம் கூட்டப்பட்டு அவர்களின் பெயர்கள் மீண்டும் முன்மொழியப்பட்டால், அவர்கள் தேர்ந்தெடுக்கப்படலாம். இந்த விதிமுறையை எந்த வகையிலும் மீறுபவர்கள் கிராமத்திற்கு துரோகிகள் என்று சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படுவார்கள் என உள்ளது. குலோத்துங்கசோழனின் 49வது ஆட்சியாண்டான 1119 ADல் வெட்டப்பட்ட கல்வெட்டு ஒன்று “ஸ்ரீ கயிலாசம்” என்றழைக்கப்படும் இக்கோயில் திருமடைவிளாகத்தில் வசிக்கும் தில்லையார் குலஅரண் தேர்பிடாரன் இரண்டைரப்பிச்சன் என்பவர், இக்கோயில் பக்தர்களுக்கு உணவளிப்பதற்காக மடப்புரம் என நிலம் வழங்கியதை இது பதிவு செய்கிறது.

‘‘சூரிய பூஜை இங்கே சிறப்பு. ஒவ்வொரு வருஷமும் பங்குனி மாதம் 12, 13, 14 ஆகிய தேதிகளில் காலை சூரிய உதயத்தின் போது சூரியஒளி கயிலாசநாதர் மேல் விழும் காட்சியைக் காணலாம். ஆலயத்துக்கு நேர் எதிரில் சூரிய புஷ்கரணி. எனும் பெரியதொரு குளம் உள்ளது, இது தல தீர்த்தம். மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் இக்குளத்தில் நீராடி விளக்கேற்றி இறைவனை வழிபட்டால் நலம் பெறுவார்கள்.

கிழக்கு நோக்கி உயர்ந்து நிற்கும் அழகிய மூன்றுநிலை நெடுமாடம், அதன் முன்னர் நந்தி மண்டபமும், இதன் வலதுபுறம் 7 படிகள் கொண்டு, உயர்ந்து இருக்கும் மண்டபத்துடன் கூடிய அம்பிகை திருக்கோயில். ராஜராஜன் காலத்தில் காமக்கோட்டம் எனப்படும் அம்பிகை திருக்கோயில் ராஜகோபுரத்தின் வெளியிலேயே அமைக்கும் வழக்கம் இருந்தது. ராஜகோபுரம் வாயிலில் நர்த்தன கணபதி சிலை செதுக்கப்பட்டுள்ளது, சற்று தள்ளி தனித்த ஒரு கல்லில் மகாலட்சுமி செதுக்கப்பட்ட அழகான பலகை கல்வெட்டு ஒன்று உள்ளது. கோபுரத்தின் உட்புறசுவர்களில் பல கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன. இறைவன் முன்னர் அர்த்தமண்டபம் அகன்ற மகாமண்டபம் ஆகியவை உள்ளன. பிரதான கருவறை பிரஸ்தரம் வரை கருங்கல் கொண்டும் விமானம் செங்கல் கொண்டும் கட்டப்பட்டுள்ளது. அர்த்தமண்டபம் கருங்கல் கொண்டும், அடுத்துள்ள முகப்பு மண்டபம் செங்கல் கருங்கல் இரண்டையும் கலந்து கட்டிய கட்டுமானமாக உள்ளது. கருவறையில் இறைவன் அழகிய பெரிய லிங்கமூர்த்தியாக உள்ளார். எதிரில் சிறிய நந்தி ஒருவரும் உள்ளார். முகப்பு மண்டபத்தில் நவகிரகங்கள் உள்ளன, அதில் சூரியன் தன் இரு மனைவியருடன் இருப்பது சிறப்பு. அர்த்த மண்டபத்தின் வெளிப்புறம் வலமாக வரும்போது தென்பக்கம் கோஷ்டம் அமைக்கப்பட்டு அதில் திருஞானசம்பந்தரை வைத்துள்ளமை வித்தியாசமான ஒன்று. அருகில் நடராஜரும் ஒரு கோஷ்டமூர்த்தியாக உள்ளார். இதுபோல் அமைந்த திருத்தல கட்டுமானங்கள் அபூர்வம். ‘இதனால் இது பிரம்பில் எனும் அப்பரால் பாடப்பட்ட வைப்புத் தலமாக இருக்கலாம் என்றும், திருஞானசம்பந்தர் இங்கு வந்து பாடிய பாடல்கள் கிடைக்கக் பெறாமல் போயிருக்கலாம் என்கின்றனர். தென்புறம் தக்ஷணமூர்த்தி சன்னதியை ஒட்டி பல நூறாண்டுகள் பழமையான வன்னி மரம் ஒன்று உள்ளது. வன்னி மரத்தை வழிபடுவது லிங்கமூர்த்தியை வழிபடுவதற்கு ஒப்பாகும் செல்லும்போது இதனை வழிபட மறக்கவேண்டாம். கருவறை கோஷ்டத்தில் தக்ஷணமூர்த்தி, லிங்கோத்பவர் ஆகிய மூர்த்திகள் உள்ளன. பிரம்மா, துர்கை ஆகிய மூர்த்திகளை காணவில்லை. தெற்கு வடக்காக உள்ள திருமாளிகைபத்தியில் முதல் சன்னதி காலியாக உள்ளது, அடுத்து நிருதிகணபதி, வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணியர், சன்னதிகளும், சண்டேசர் வழமையான இடத்தில் செம்பாறாங்கல் கொண்ட கட்டுமானத்தில் உள்ளார், இது பிற்சேர்க்கையாக இருக்கலாம்.

நெல் நிரப்பி வைப்பதற்காக இரண்டு பெரிய பத்தாயங்கள் இருக்கின்றன. ஆலய ஊழியர்களுக்கு சில ஆண்டுகள் முன்பு வரை நெல் ஊதியமாக வழங்கப்பட்டு வந்தது, இப்போது குத்தகைதாரர்களை பணமாக கட்டுமாறு கூறி, துறையினர் வாங்கி சென்று விடுகின்றனர். பொருள் வைப்பு அறை ஒன்றும் சில சிதைவடைந்த வாகனங்களும் போட்டு வைத்துள்ளனர். வடகிழக்கில் உள்ள தனித்த சன்னதி நடராஜருக்கு உரியதாக இருக்கலாம். அதில் சில லிங்க பாணங்களும், லிங்கமூர்த்தி ஒன்றும் மேற்கு நோக்கி பைரவரும் சூரியனும் உள்ளனர். வெளியில் உள்ள சன்னதிகளில் பாதுகாப்பில்லை என இங்கு வைக்கப்பட்டிருக்கலாம். கோயில் குடமுழுக்கு கண்டு நூறாண்டுகளுக்கு மேல் ஆகியிருக்கலாம். எங்கெங்கு காணினும் சிதிலங்கள், மரம் செடிகொடிகள் பற்றி நிற்கின்றன. அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு திருப்பணிகள் ஆரம்பிக்க ஏற்பாடாகி உள்ளது என்கின்றனர்.