இந்த வைப்புத் தலத்தைக் குறிப்பிடும் பதிகப் பாடல்களில் கூறப்பட்டுள்ள மந்தாரம், வாரணாசி, விராடபுரம், பிரம்பில், கண்ணை, காறை,ஆகியவையும் தேவார வைப்புத் தலங்களாகும்.
கோவிலின் வெளிப்புறத் தோற்றம்
கோவிலின் உட்புறத் தோற்றம்தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
| தகவல் பலகை | |
|---|---|
| சிவஸ்தலம் பெயர் | விளத்தொட்டி |
| இறைவன் பெயர் | பிரம்மபுரீஸ்வரர் |
| இறைவி பெயர் | இஷுரசநாயகி |
| பதிகம் | அப்பர் (6-70-6) |
| எப்படிப் போவது | பந்தநல்லூர் - மணல்மேடு பேருந்து வழித்தடத்தில் சுமார் 3 கி.மீ. சென்றவுடன் மரத்துறை என்ற இடத்தில் இடதுபுறம் விளத்தொட்டி செல்லும் சாலை பிரிகிறது. சாலை பிரியுமிடத்தில் ஒரு வளைவு உள்ளது. அதன் வழியே சுமார் 2 கி.மீ. சென்று விளத்தொட்டியை அடையலாம். மணல்மேட்டில் இருந்து பந்தநல்லூர் வரும் போது வழியில் திருச்சிற்றம்பலம் செல்லும் சாலை வலதுபுறம் பிரிகிறது. அதன் வழியே திருச்சிற்றம்பலம் சென்று அங்கிருந்து சுமார் ஒரு கி.மீ. சென்றால் விளத்தொட்டியை அடையலாம். பந்தநல்லூரில் இருந்து மணல்மேடு செல்லும் மினி. நகரப் பேருந்து விளத்தொட்டி - திருச்சிற்றம்பலம் வழியாகச் செல்கிறது. இந்தப் பேருந்தில் சென்றால் விளத்தொட்டி கோவிலருகே இறங்கலாம். |
| ஆலய முகவரி |
அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவில் விளத்தொட்டி திருச்சிற்றம்பலம் அஞ்சல் திருவிடைமருதூர் வட்டம் தஞ்சாவூர் மாவட்டம் PIN - 609204 இவ்வாலயம் தினந்தோறும் காலை 10 மணி முதல் பகல் 11 மணி வரையில் திறந்திருக்கும். கோவில் குருக்கள் சுமார் ஒரு கி.மீ. தொலைவிலுள்ள திருச்சிற்றம்பலத்திலிருந்து வருகிறார். கோவில் அருகே வசிக்கும் திரு அருணாசலம் என்பவரை முன்கூட்டியே தொடர்பு கொண்டு எந்நேரமும் தரிசிக்கலாம். அவரின் கைபேசி எண்: 9488337540 |
திருநாவுக்கரசரின் 6-ம் திருமுறையில் 70-வது பதிகத்தில் 6-வது பாடலில் இந்த வைப்புத் தலத்தைப் பற்றிய குறிப்பு உள்ளது.
மண்ணிப் படிக்கரை வாழ்கொளி புத்தூர் வக்கரை மந்தாரம் வாரணாசி வெண்ணி விளத்தொட்டி வேள்விக்குடி விளமர் விராடபுரம் வேட்களத்தும் பெண்ணை அருட்டுறை தண் பெண்ணாகடம் பிரம்பில் பெரும்புலியூர் பெருவேளூரும் கண்ணை களர் காறை கழிப்பாலையும் கயிலாய நாதனையே காணலாமே. பொழிப்புரை : www.thevaaram.org மண்ணிப்படிக்கரை, வாழ்கொளிபுத்தூர், வக்கரை , மந்தாரம், வாரணாசி, விளத்தொட்டி, வெண்ணி, வேள்விக்குடி, விளமர், விராடபுரம், வேட்களம், பெண்ணையாற்றங்கரையிலுள்ள அருட்டுறை, பெண்ணாகடம், பிரம்பில், பெரும்புலியூர், பெரு வேளூர், கண்ணை, களர், காறை, கழிப்பாலை, முதலிய இடங்களில் கயிலாய நாதனைக் காணலாம்.
கோவில் அமைப்பு: விளத்தொட்டி பிரம்ம்புரீஸ்வரர் ஆலயம் நான்கு புறமும் மதிற்சுவருடனும் ஒரு முகப்பு வாயிலையும் கொண்டு அமைந்துள்ளது. ஒரு பிராகாரத்தைக் கொண்ட ஆலயத்திற்கு வெளியே நந்தி மண்டபமும், பலிபீடமும் உள்ளன. முகப்பு வாயில் மேற்புறத்தில் ரிஷபாரூடர் ஒரு சிறிய மண்டபத்தினுள் காணப்படுகிறார். இருபுறமும் நின்ற நிலையில் விநாயகரும், முருகப்பெறுமானும் காட்சி அளிக்கின்றனர்.

ஆலய முகப்பைக் கடந்தது உள்ளே சென்றால் முதலில் முன் மண்டபமும் அதையடுத்து மகா மண்டபமும் உள்ளன. இவ்விரண்டு மண்டபத்தை அடுத்து அர்த்த மண்டபம். பிறகு கருவறையில் லிங்க உருவில் இத்தல இறைவன் பிரம்மபுரீஸ்வரர் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார், மகா மண்டபத்தில் இடதுபுறம், ருக்மணி சத்யபாமாவுடன் தரிசனம் கொடுக்கும் வேணுகோபாலப் பெருமாள் சந்நிதி உள்ளது. இவர் சந்நிதிக்கு எதிரே கருடாழ்வார் திருமேனி உள்ளது. பிராகாரத்தில் விநாயகர் உள்ளார். கருவறைக்கு நேர் பின்புறம் பால முருகனின் சன்னதி உள்ளது சந்நிதியில் முன்னே சிவலிங்கமும், அதன் பின்னே தின்ற கோலத்தில் பாலமுருகன் அருள்பாலிக்கிறான். கஜலஷ்மி, மகாலஷ்மி, பைரவர், சூரியன், சனிபகவான் ஆகியோரின் சந்நிதிகளும் உட்பிராகாரத்தில் உள்ளன. வடக்குப் பிராகாரத்தில் சண்டிகேஸ்வரர் சந்நிதியும் அமைந்துள்ளது. அம்பாள் இஷுரசநாயகி சந்நிதி இறைவன் சந்நிதிக்கு இடதுபுறம் தனியே கிழக்கு நோக்கி அமைந்துள்ளது.
தலப்பெருமை: ஆரம்பத்தில் பிரம்மாவிற்கும் சிவனைப்போலவே ஐந்து தலைகள் இருந்தன. தனக்கும் ஐந்து தலைகள் இருப்பதை எண்ணி பெருமிதம் கொண்ட பிரம்மா தானும் சிவபெருமானுக்கு இணையானவன் என்று அகந்தை கொண்டு திரிந்தார். அவரது அகந்தை அளவுமீறிப் போக, ஒரு கட்டத்தில் சினந்த சிவபெருமான் பிரம்மாவின் தலைகளுள் ஒன்றைக் கொய்து பிரம்மாவிடம் இருந்த படைப்பாற்றலையும் பறித்தார். தன் தவறை உணர்ந்த பிரம்மா சிவபெருமானிடம் மன்னிப்புக் கோரினார். பூவுலகில் சிவபெருமான் அருள்பாலிக்கும் பல தலங்களுக்குச் சென்று அவரை வழிபட்டார். இவ்வாறு பிரம்மா பூஜித்த இடங்களிலெல்லாம் உள்ள சிவபெருமான், பிரம்ம புரீஸ்வரர் என்று அழைக்கப்படலானார். அந்த வகையில் பிரம்மா சிவபூஜை புரிந்த தலங்களுள் விளத்தொட்டியும் ஒன்று. அதனால் இத்தல இறைவனும் பிரம்மபுரீஸ்வரர் என அழைக்கப்பட்டார். தல வரலாற்றை உறுதிப்படுத்தும் வகையில் இவ்வாலயத்தின் முன் மண்டபத்தில் இடதுபுறம் பிரம்மன் சிவலிங்கத்தை வழிபடும் ஐதீகச் சிற்பம் உள்ளது.
குழந்தையாய் இருந்தபோது முருகன் இத்தலத்தில் தான் வளர்ந்து வந்ததாக தலபுராணம் தெரிவிக்கிறது.. இத்தலத்தில்தான் அன்னை பார்வதி தேவி குழந்தை பாலமுருகனை தொட்டிலில் கிடத்தி, தாலாட்டுப் பாடி தூங்க வைத்ததாகவும் அதனால் இத்தலம் வளர்தொட்டில் என அழைக்கப்பட்டு, நாளடைவில் மருவி விளத்தொட்டி என்றாயிற்று. இத்தலத்தில் வசிப்போர் தங்கள் வீட்டில் பிறக்கும் குழந்தைகளை, பிறந்து பத்து தினங்கள் வரை தொட்டிலில் படுக்க வைப்பதில்லை. மேலும் குழந்தை வரம் வேண்டி பக்தர்கள் இத்தலத்தில் அருளபாஙிக்கும் பாலமுருகனை வேண்டிச் செல்கின்றனர். தங்களது பிரார்த்தனை நிறைவேறியதும் ஒரு தொட்டில் வாங்கி வந்து பாலமுருகன் சன்னதியில் கட்டி நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
| விளத்தொட்டி பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவில் ஆலயம் புகைப்படங்கள் | ||
|---|---|---|
பிரம்ம்புரீஸ்வரர் சந்நிதி |
இரட்டை விநாயகர் |
இறைவன் கருவறை விமானம் |
பாலமுருகன் சந்நிதி |
பாமா ருக்மணி சமேத வேணுகோபாலர் |
மூலவர் பிரம்மபுரீஸ்வரர் |