Shiva temples of Tamilnadu

தேவார பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்
பாடல் பெற்ற தலம் கோவில் விபரங்கள் தமிழ்நாடு வர ஆலோசனைகள்

தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்திருவாவடுதுறை
இறைவன் பெயர்மாசிலாமனி ஈஸ்வரர், கோமுக்தீஸ்வரர்
இறைவி பெயர்அதுலகுச நாயகி, ஒப்பிலா முலையம்மை
பதிகம்திருநாவுக்கரசர் - 5
திருஞானசம்பந்தர் - 1
சுந்தரர் - 2
எப்படிப் போவது மயிலாடுதுறையில் இருந்து சுமார் 18 கி.மீ. தொலைவிலும், மயிலாடுதுறை - கும்பகோணம் ரயில் மார்க்கத்தில் உள்ள நரசிங்கன்பேட்டை ரயில் நிலையத்தில் இருந்து கிழக்கே 3 கி.மீ. தொலைவிலும் இத்தலம் இருக்கிறது. மயிலாடுதுறை - கும்பகோணம் சாலை வழியில் உள்ள திருவாலங்காடு என்ற பேருந்து நிறுத்தத்தில் இறங்கி 1 கி.மீ. ஒரு கிளைப் பாதையில் நடந்து சென்றால் இத்தலத்தை அடையலாம்.
ஆலய முகவரிஅருள்மிகு மாசிலாமனி ஈஸ்வரர் திருக்கோயில்
திருவாவடுதுறை
திருவாவடுதுறை அஞ்சல்
நாகப்பட்டிணம் மாவட்டம்
PIN - 609803

இவ்வாலயம் தினந்தோறும் காலை 7 மணி முதல் பகல் 12-30 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8-30 மணி வரையிலும் திறந்திருக்கும்.
TiruAvaduthurai mapமயிலாடுதுறையில் இருந்து திருவாவடுதுறை மாசிலாமனி ஈஸ்வரர் ஆலயம் செல்லும் வழி வரைபடம்
Map courtesy by: Yahoo Maps

தலத்தின் சிறப்பு: சிவனும் மகாவிஷ்ணுவும பார்வதியை நடுவராக வைத்து சொக்கட்டான் ஆடிக்கொண்டிருந்த போது ஆட்டத்தில் காய் உருட்டியதில் சந்தேகம் வர பார்வதியிடம் கேட்கிறார் சிவன். பார்வதி மகாவிஷ்ணுவிற்கு சாதகமான பதிலை கூறியதால் சிவபெருமான் பார்வதியை பசுவாக பூமியில் பிறக்கும் படி சாபம் இடுகிறார். இப்படி பசுவாக பிறந்த பார்வதி பூவுலகில் பல இடங்களில் இறைவனை பூஜித்தாள். இத்தலத்தில் தம்மை வழிபட்டு வர சாபம் நீங்கப்பெறும் என்றார் சிவன். அதன்படி அம்பாள் பசுவின் வடிவில் இங்கு வந்து, சிவனை வேண்டி தவமிருந்தாள். சிவன் அவளுக்கு காட்சி தந்து, தன்னுடன் அணைத்துக்கொண்டு, விமோசனம் கொடுத்தார். "கோ"வாகிய பசுவிற்கு விமோசனம் தந்தவர் என்பதால் கோமுக்தீஸ்வரர் என்று பெயர் பெற்றார்

திருஞானசம்பந்தர், இத்தலத்தில் தன் தந்தையார் சிவபாத இருதயருடன் சிலகாலம் தங்கியிருந்தார். அப்போது சீர்காழியில் யாகம் நடத்த வேண்டுமென சிவபாத இருதயர் விரும்பினார். எனவே யாகத்திற்கு வேண்டிய பொன்னும், பொருளும் வேண்டுமென சம்பந்தரிடம் கேட்டார். சம்பந்தர் யாகத்திற்கு பொருள் வேண்டி இடரினுந் தளரினும் எனதுறுநோய் தொடரினும் உனகழல் தொழுதெழுவேன் என்று தொடங்கும் பதிகம் பாடினார். சிவன் பூதகணங்கள் மூலமாக, எடுக்கக் குறையாத ஆயிரம் பொன் கொண்ட ஒரு பொற்கிழியை கொடுத்து அதனை இக்கோயிலில் உள்ள பலிபீடத்தின் அகன்ற பீடத்தில் வைக்கச் செய்தார். பொன் பெற்ற சிவபாத இருதயர் சீர்காழிக்கு சென்று யாகத்தை நடத்தி முடித்தார். பொற்கிழி வைக்கப்பட்ட இந்த பலிபீடம் வெளிப் பிரகாரத்தில் நந்திக்கு அருகில் இருக்கிறது. இதனைச் சுற்றிலும் பொற்கிழி கொண்டு வந்த பூதகணங்கள் இருக்கிறது. இங்கிருந்து சிவனிடம் வேண்டிக்கொண்டால் குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருகும் என்பது நம்பிக்கை.

ஒன்பதாம் திருமுறையான திருவிசைப்பாவில் நான்கு பதிகங்கள் பாடிய திருமாளிகைத்தேவர் போகரின் சீடர். இவர் இத்தலத்தில் சிவத்தொண்டு செய்து வந்தார். ஒருசமயம் அவர் மீது வீண்பழி சுமத்தப்பட்டதால், மன்னன் படை வீரர்களை அனுப்பி அவரை தாக்க முயன்றான். திருமாளிகைத் தேவர், நரசிங்கன் என்னும் மன்னனின் படைகளை கோயில் மதிலில் உள்ள நந்திகளை உயிர் பெற்றெழச் செய்து விரட்டி அற்புதம் நிகழ்த்திய தலம் திருவாவடுதுறை. இன்றும் இவ்வாலயத்தின் மதில்களில் நந்திகள் இல்லையென்பதைக் காணலாம்.

முசுகுந்த சக்கரவர்த்திக்கு மகப்பேறு அருளி இத்தலத்தைத் திருவாரூராகவும் தம்மைத் தியாகேசராகவும் காட்டிய சிறப்பும் உடையது இத்தலம். புத்திர பாக்கியம் இல்லாமல் தவித்த முசுகுந்த சக்கரவர்த்தி இந்திரனிடம் பெற்ற தியாகேசரை தொடர்ந்து வழிபட்டு வந்தான். ஒருசமயம் சிவன் அவரது கனவில் தோன்றி, இத்தலத்தில் தன்னை வழிபட குழந்தை பாக்கியம் கிடைக்கப்பெறும் என்றார். அதன்படி இங்கு வந்து சிவனை வணங்கி புத்திரப்பேறு பெற்றார் முசுகுந்தன். எனவே, புத்திரப்பேறு இல்லாதவர்கள் இங்கு வேண்டிக்கொண்டால் அப்பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

சுந்தரநாதர் எனும் சிவயோகியார் கயிலாயத்திலிருந்து பூலோகம் வந்து சிவத்தலங்களை தரிசித்து வந்தார். அவர் இத்தலம் வந்தபோது, மூலன் எனும் இடையன் இறந்து கிடக்க, அவனைச் சுற்றிலும் பசுக்கள் அழுது கொண்டிருந்ததைக் கண்டார். பசுக்களின் மீது பரிவு காட்டிய அவர் தன் உயிரை மூலன் உடலில் புகுத்தி எழுந்தார். பின் பசுக்களை வீட்டில் விட்டுவிட்டு இத்தலத்தில் தவம் செய்யத் துவங்கினார். மூலன் வீட்டிற்கு திரும்பாததால், அவனது மனைவி இங்கு வந்து சுந்தரநாதரை தன்னுடன் வரும்படி அழைத்தார். அவர் செல்ல மறுத்தார். மூலன் சிவஞானம் பெற்றதாக உறவினர்கள் கூறவே மனைவியும் விட்டுச் சென்றுவிட்டாள். இவரே திருமூலர் என்று பெயர் பெற்றார். இவர் ஆண்டுக்கு ஒரு பாடல் வீதம், மொத்தம் 3 ஆயிரம் பாடல்களை பாடினார். இவையே திருமூலர் திருமந்திரமாக தொகுக்கப்பட்டது. இத்தலத்தின் வெளிப் பிரகாரத்தில் திருமூலருக்கு சன்னதி இருக்கிறது.

சுவாமி சன்னதிக்கு வலப்புறத்தில் தியாகேசர் சந்நிதி உள்ளது. பிரகாரத்தில் தெற்கு நோக்கிய சந்நிதியில் இத்தலத்தின் உற்சவ மூர்த்தியான அணைத்தெழுந்த நாயகர் இருக்கிறார். இவர் அம்பாளை அணைத்த கோலத்தில் இருந்தாலும், அம்பாள் மீது கைகள் படாதவாறு சிலை அமைக்கப்பட்டிருப்பது சிறப்பம்சம். இவர் இங்கு வரப்பிரசாதியாக திகழ்கிறார். பிரிந்திருக்கும் தம்பதியர் இவரிடம் வேண்டிக்கொண்டால் மீண்டும் இணைவர் என்பது நம்பிக்கை.

5 நிலை கிழக்கு நோக்கிய இராஜகோபுரத்துடன் இவ்வாலயம் விளங்குகிறது. கோபுர வாயிலுக்கு எதிரில் கோமுக்தி தீர்த்தம் உள்ளது. கோபுர வாயிலின் இருபுறமும் பசுவான உமைக்குத் துணையாக வந்த விநாயகர், முருகன் சந்நிதிகள் உள்ளன. கோபுர வாயிலைக் கடந்தால் நீண்ட நடைபாதை. அதன் முடிவில் உள்ள மண்டபத்தில் பெரிய நந்தியுள்ளது. இந்த நந்திக்குப் பின்னால் உள்ள பலிபீடமே ஞானசம்பந்தருக்குப் பொற்கிழி வைத்தருளிய இடமாகும். பலீபீடத்தின் நான்கு புறமும் பூதகணங்கள் தாங்கி நிற்கின்றன. திருஞானசம்பந்தர் இப்பீடத்தின் அருகில் தமிழ்மணம் கமழ்வதை அறிந்து பீடத்தின் கற்களை பெயர்க்க அதன் அடியில் இருந்து திருமூலர் பாடிய திருமந்திரம் வெளிப்பட்டது. பெரிய நந்திக்கு முன்புறம் மற்றொரு சிறிய நந்தியும் இருக்கிறது. பிரதோஷ வேளையில் இவருக்கு மகாஅபிஷேகம் நடக்கிறது. திருவிடைமருதூர் தலத்திற்கான பரிவாரத் தலங்களில் இத்தலம் நந்தி தலமாக இருப்பதால் இங்கு நந்தியிடம் வேண்டிக்கொள்வது விசேஷம்.

சிவன் இத்தலத்தில் போகர் முதலிய நவகோடி சித்தர்களுக்கு அஷ்டமாசித்திகளை உபதேசித்ததாக ஐதீகம். தருமதேவதை இறைவனை வழிபட்டு அவருக்கு வாகனமாகும் பேறு பெற்றதும் இத்தலத்தில் தான். திருமூலர், திருமாளிகைத் தேவர் முதலிய மகான்களுடைய சமாதிகள் இருப்பதும் இத்தலத்தில் தான். இவ்வளவு சிறப்புப் பெற்ற திருவாவடுதுறை தலத்தை அவசியம் சென்று தரிசியுங்கள்.

Top
மாசிலாமனி ஈஸ்வரர் ஆலயம் புகைப்படங்கள்
5 நிலை இராஜகோபுரம்
நந்தி, பலிபீடம், கொடிமரம் உள்ள முன் மண்டபம்
பெரிய நந்தி
மாசிலாமனிஈசர் சந்நிதி
5 நிலை இராஜகோபுரம் - உள்ளிருந்து தோற்றம்
சம்பந்தர் பொற்கிழி பெற்ற பலிபீடம்
நீண்ட வெளிப் பிரகாரம்
கோமுக்தி தீர்த்தம்
பிரகாரத்தில் சனி பகவான், பைரவர்
பிரகாரத்தில் நந்தி, பலிபீடம்
திருமூலர் சந்நிதிக்கு செல்லும் வழி