Shiva Temples of Tamilnadu

தேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்

பாம்பு புரேஸ்வரர் கோவில், திருபாம்புரம்

தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி


தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்திருபாம்புரம்
இறைவன் பெயர்பாம்பு புரேஸ்வரர், பாம்புர நாதர்
இறைவி பெயர்வண்டமர் பூங்குழலியம்மை
பதிகம்திருஞானசம்பந்தர் - 1
எப்படிப் போவது மயிலாடுதுறை - திருவாரூர் சாலையில் உள்ள பேரளம் என்ற ஊரிலிருந்து மேற்கே 7 கி.மி.தொலைவில் இத்தலம் உள்ளது. கும்பகோணம் - காரைக்கால் சாலை வழிப்பாதையில் கற்கத்தி என்ற இடத்தில் இறங்கி தெற்கே 3 கி.மி. சென்றும் இத்தலத்தை அடையலாம்.

திருப்பாம்பரம் ஒரு ராகு - கேது நிவர்த்தி ஸ்தலம். திருநாகேஸ்வரம், காளஹஸ்தி, கீழப்பெரும்பள்ளம் ஆகிய நாக தோஷ பரிகார ஸ்தலங்கள் அனைத்தையும் தரிசித்த பலன் திருப்பாம்பரம் ஒன்றை மட்டும் தரிசித்தாலே போதும் என்பது ஸ்தலமகாத்மியம். ராகுவும் கேதுவும் ஏக சரீரியாக அதவது ஓருடலாக இருந்து தன் நெஞ்சில் சிவபெருமானை வைத்து வழிபட்டதால் இத்தலம் ராகு கேது பரிகாரத் தலமாக விளங்கிகிறது. மேலும் சிவராத்திரி அன்று இரவில் ஆதிசேஷன் வழிபடும் நான்கு தலங்களில் இத்தலம் முதலாவதாகும்.

இவ்வாலயத்தின் இராஜகோபுரம் 3 நிலைகளுடன் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. இராஜகோபுரத்தின் எதிரே ஆதிசேஷ தீர்த்தம் இருக்கிறது. இத்தலத்தில் கோவில் கொண்டுள்ள பாம்பு புரேஸ்வரரை வழிபட்டால் எல்லா வகையான நாக தோஷங்கள் விலகி விடுகின்றன. மூலவர் பாம்புபுரேஸ்வரர் கிழக்கு நோக்கி நாக கவசம் சாற்றப்பட்டு காட்சி தருகிறார். அம்பாள் சந்நிதியும் கிழக்கு நோக்கி அமைந்திருக்கிறது. அம்பாள் ஒரு கையில் தாமரை மலரையும் மற்றொரு கையில் ருத்திராக்ஷ மாலையுடனும் அபய முத்திரையுடன் காட்சி தருகிறாள். இக்கோவிலில் உள்ள சட்டநாதர் சந்நிதி மிகவும் விசேஷமானது. தலவிநாயகர் ராஜராஜ விநாயகர் சந்நிதி, தேவார மூவர் சந்நிதி, சனீஸ்வரன் சந்நிதி ஆகியவை இங்குள்ள மற்ற சந்நிதிகளாகும். திருவீழிமிழலை என்ற மற்றொரு பாடல் பெற்ற ஸ்தலம் இங்கிருந்து அருகில் இருக்கிறது. இத்தலத்து கோவிலின் பிரகாரத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருந்து பார்த்தால் திருவீழிமிழலை கோவில் விமானம் தெரியும் என்று கூறப்படுகிறது.

ஆதிசேஷன் வழிபட்ட கோவில் ஆதலால் இன்றும் கோவிலின் உள்ளே பாம்புகள் நடமாட்டம் உள்ளதாக கூறுகிறார்கள். ஞாயிறு, செவ்வாய், வெள்ளிகிழமைகளில் திருப்பாம்பரம் கோவிலுக்குள் மல்லிகையின் மணமோ, தாழம்பூவின் மணமோ வீசுவதாகவும் அச்சமயம் பாம்பு கோவிலுக்குள் எங்கேனும் உலாவிக் கொண்டு இருக்கும் என்று கூறப்படுகிறது. இத்தலத்தில் பாம்புகள் யாரையும் கடிப்பது இல்லை என்கிறார்கள். விஷம் தீண்டாப் பதி என்ற சிறப்பு இத்தலத்திற்கு உள்ளது.

திருஞானசம்பந்தரின் இத்தலத்திற்கான இப்பதிகம் முதலாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது.

சீரணி திகழ்திரு மார்பில் வெண்ணூலர் 
திரிபுர மெரிசெய்த செல்வர்
வாரணி வனமுலை மங்கையோர் பங்கர் 
மான்மறி யேந்திய மைந்தர்
காரணி மணிதிகழ் மிடறுடை யண்ணல் 
கண்ணுதல் விண்ணவ ரேத்தும்
பாரணி திகழ்தரு நான்மறை யாளர் 
பாம்புர நன்னக ராரே. 

கொக்கிற கோடு கூவிள மத்தங் 
கொன்றையொ டெருக்கணி சடையர்
அக்கினொ டாமை பூண்டழ காக 
அனலது ஆடுமெம் மடிகள்
மிக்கநல் வேத வேள்வியு ளெங்கும் 
விண்ணவர் விரைமலர் தூவப்
பக்கம்பல் பூதம் பாடிட வருவார் 
பாம்புர நன்னக ராரே.  

துன்னலி னாடை யுடுத்ததன் மேலோர் 
சூறைநல் லரவது சுற்றிப்
பின்னுவார் சடைகள் தாழவிட் டாடிப் 
பித்தராய்த் திரியுமெம் பெருமான்
மன்னுமா மலர்கள் தூவிட நாளும் 
மாமலை யாட்டியுந் தாமும்
பன்னுநான் மறைகள் பாடிட வருவார் 
பாம்புர நன்னக ராரே.  

துஞ்சுநாள் துறந்து தோற்றமு மில்லாச் 
சுடர்விடு சோதியெம் பெருமான்
நஞ்சுசேர் கண்ட முடையவென் நாதர் 
நள்ளிருள் நடஞ்செயும் நம்பர்
மஞ்சுதோய் சோலை மாமயி லாட 
மாடமா ளிகைதன்மே லேறி
பஞ்சுசேர் மெல்லடிப் பாவையர் பயிலும் 
பாம்புர நன்னக ராரே.  

நதியத னயலே நகுதலை மாலை 
நாண்மதி சடைமிசை யணிந்து
கதியது வாகக் காளிமுன் காணக் 
கானிடை நடஞ்செய்த கருத்தர்
விதியது வழுவா வேதியர் வேள்வி 
செய்தவர் ஓத்தொலி ஓவாப்
பதியது வாகப் பாவையுந் தாமும் 
பாம்புர நன்னக ராரே.  

ஓதிநன் குணர்வார்க் குணர்வுடை யொருவர் 
ஒளிதிகழ் உருவஞ் சேரொருவர்
மாதினை யிடமா வைத்தவெம் வள்ளல் 
மான்மறி யேந்திய மைந்தர்
ஆதிநீ யருளென் றமரர்கள் பணிய 
அலைகடல் கடையவன் றெழுந்த
பாதிவெண் பிறைசடை வைத்தவெம் பரமர் 
பாம்புர நன்னக ராரே. 

மாலினுக் கன்று சக்கர மீந்து 
மலரவற் கொருமுக மொழித்து
ஆலின்கீ ழறமோர் நால்வருக் கருளி 
அனலது ஆடுமெம் மடிகள்
காலனைக் காய்ந்து தங்கழ லடியாற் 
காமனைப் பொடிபட நோக்கிப்
பாலனுக் கருள்கள் செய்தவெம் மடிகள் 
பாம்புர நன்னக ராரே.  

விடைத்தவல் லரக்கன் வெற்பினை யெடுக்க 
மெல்லிய திருவிர லூன்றி
அடர்த்தவன் றனக்கன் றருள்செய்த வடிகள் 
அனலது ஆடுமெம் மண்ணல்
மடக்கொடி யவர்கள் வருபுன லாட 
வந்திழி அரிசிலின் கரைமேற்
படப்பையிற் கொணர்ந்து பருமணி சிதறும் 
பாம்புர நன்னக ராரே. 

கடிபடு கமலத் தயனொடு மாலுங் 
காதலோ டடிமுடி தேடச்
செடிபடு வினைகள் தீர்த்தருள் செய்யுந் 
தீவணர் எம்முடைச் செல்வர்
முடியுடையமரர் முனிகணத் தவர்கள் 
முறைமுறை யடிபணிந் தேத்தப்
படியது வாகப் பாவையுந் தாமும் 
பாம்புர நன்னக ராரே.  

குண்டர்சாக் கியருங் குணமிலா தாருங் 
குற்றுவிட் டுடுக்கையர் தாமுங்
கண்டவா றுரைத்துக் கால்நிமிர்த் துண்ணுங் 
கையர்தாம் உள்ளவா றறியார்
வண்டுசேர் குழலி மலைமகள் நடுங்க 
வாரணம் உரிசெய்து போர்த்தார்
பண்டுநாம் செய்த பாவங்கள் தீர்ப்பார் 
பாம்புர நன்னக ராரே.  

பார்மலிந் தோங்கிப் பருமதில் சூழ்ந்த 
பாம்புர நன்னக ராரைக்
கார்மலிந் தழகார் கழனிசூழ் மாடக் 
கழுமல முதுபதிக் கவுணி
நார்மலிந் தோங்கும் நால்மறை ஞான 
சம்பந்தன் செந்தமிழ் வல்லார்
சீர்மலிந் தழகார் செல்வம தோங்கிச் 
சிவனடி நண்ணுவர் தாமே.