Shiva Temples of Tamilnadu
தேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்
வடுகூர்நாதர் கோவில், வடுகூர்
தென்னாடுடைய சிவனே போற்றிஎந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
| தகவல் பலகை | |
|---|---|
| சிவஸ்தலம் பெயர் | வடுகூர் (திருவாண்டார் கோவில் என்று தற்போது வழங்குகிறது) |
| இறைவன் பெயர் | வடுகூர்நாதர், வடுகீஸ்வரர் |
| இறைவி பெயர் | திரிபுரசுந்தரி, வடுவகிர்க்கன்னி அம்மை |
| பதிகம் | திருஞானசம்பந்தர் - 1 |
| எப்படிப் போவது | விழுப்புரம் - பாண்டிச்சேரி ரயில் பாதையில் உள்ள சின்னபாபு சமுத்திரம் ரயில் நிலையத்தில் இருந்து 4 கி.மி. தொலைவில் வடுகூர் சிவஸ்தலம் உள்ளது. அருகில் உள்ள நகரங்கள் விழுப்புரம் மற்றும் பாண்டிச்சேரி. விழுப்புரத்திலிருந்து கோலியனூர், கண்டமங்கலம் வழியாக பாண்டிச்சேரி செல்லும் தேசீய நெடுஞ்சாலையில் (NH45A) புதுவை மாநில எல்லைக்குள் நுழைந்து, சிறிது தூரம் சென்றால் சாலையோரத்திலுள்ள திருவாண்டார் கோயிலை அடையலாம். ஊரின் தொடக்கத்திலேயே இந்திய உணவுக் கார்ப்பரேஷன் அலுவலகத்தின் எதிரில் சாலையோரத்திலேயே சற்று உட்புறமாக கோயில் உள்ளது. |
| ஆலய முகவரி |
அருள்மிகு வடுகூர்நாதர் திருக்கோவில் திருவாண்டார் கோவில் அஞ்சல் வழி கண்டமங்கலம் புதுச்சேரி மாநிலம் PIN - 605102 |
![]() Map courtesy by: Yahoo Maps | |
இந்திய தொல்பொருள் ஆராய்ச்சிக் கழகத்தின் கட்டுப்பாட்டில் இருந்து வரும் இவ்வாலயத்திற்கு ராஜகோபுரம் இல்லை. அழகிய சுற்றுமதில்களுடன் கிழக்கு நோக்கிய ஒரு நுழைவாயில் மட்டுமே உள்ளது. நுழைவாயிலுக்கு வெளியே நந்தி ஒன்று காணப்படுகிறது. முகப்பு வாயிலைக் கடந்ததும் உள்ளே நுழைந்தவுடன் கொடிமரம், பலிபீடம், நந்தி மற்றும் 18 கால் மண்டபம் உள்ளது. இங்கு தெற்கு நோக்கியவாறு இறைவி வடுவகிர்க்கன்னி அம்மை சந்நிதி உள்ளது. அம்பாள் 4 கரங்களுடன் எழிலாகக் காட்சி தருகிறாள். இந்த மண்டபத்தைக் கடந்தவுடன் அர்த்த மண்டபம் உள்ளது. அர்த்த மண்டபத்தின் நுழைவாயிலின் இருபுறமும் துவாரபாலகர்கள் உருவம் சிற்பக்கலைக்கு எடுத்துக்காட்டாக காணப்படுகிறது. அர்த்த மண்டபத்தை அடுத்து மூலவர் வடுகூர்நாதர் கருவறை இருக்கிறது. மூலவர் ஒரு சுயம்பு லிங்கம். வெளிப் பிரகாரத்தில் தென் திசையில் தனி விமானத்துடன் உள்ள நால்வர் சந்நிதி, கன்னி மூலையில் விநாயகர் சந்நிதி, நிருதி மூலையில் வள்ளி தெய்வானையுடன் கூடிய ஆறுமுகன் சந்நிதி ஆகியவை இருக்கின்றன.
இத்தலத்து முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது ஒரு பாடல் உள்ளது. இத்தலத்தில் முருகப்பெருமான் ஆறு திருமுகங்களுடனும் 12 திருக்கரங்களுடனும் மயில் மீது அமர்ந்த கோலத்தில் தனது தேவியர் இருவருடன் எழுந்தருளியுள்ளார்.
அர்த்த மண்டபத்தையும், கருவறையையும் உள்ளடக்கிய சுவர்களின் வெளிப்பிரகாரத்தில் கல்வெட்டுக்கள் பல காணப்படுகின்றன. மேலும் தெற்கு நோக்கிய பிச்சாடனர், தட்சினாமூர்த்தி, மேற்கு நோக்கிய லிங்கோத்பவர், வடக்கு நோக்கிய துர்க்கை, அர்த்தநாரீசுவரர் ஆகியோரின் உருவங்கள் உள்ளன. இக்கோவிலின் கருவறை விமானம் தஞ்சை பெரிய கோவில் பாணியில் அமைந்துள்ளது. இத்தலத்தில் உள்ள கல்வெட்டுகள் மூலம் இத்தலம் முதலாம் பராந்தக சோழன் காலத்தைச் சேர்ந்தது என்று அறியப்படுகிறது. மேலும் முதலாம் ராஜராஜ சோழன், முதலாம் ராஜேந்திர சோழன், முதலாம் குலோத்துங்க சோழன் ஆகியோர் கலத்து கல்வெட்டுகளும் கணப்படுகின்றன.
தல வரலாறு: முண்டாசுரன் என்பவன் சிவனை நோக்கி கடுந்தவம் செய்து அவரிடமிருந்து தேவாசுரர்களாலும், பிறரால் சாகாமலும் இருக்க வரங்கள் பெற்றான். வரங்கள் பெற்ற முண்டாசுரன் தேவர்கள், பிரம்மா ஆகியோருடன் போர் புரிந்து வெற்றி பெற்றான். பிரம்மா முதலியோர் சிவனிடம் சரனடைந்தனர். சிவனின் ஆணைப்படி வடுகபைரவர் தோன்றி முண்டாசுரனை வதம் செய்கிறார். ஆகையால் இத்தலத்தில் சிவபெருமான் வடுகநாதர் என்றும், வடுகபைரவர் அசுரனைக் கொன்ற கொலைப்பழி தீர தவம் செய்து பேறு பெற்றதால் இத்தலம் வடுகூர் என்றும் பெயர் பெற்றது. ஆண்டார் கோயில் என்பது கோயிலுக்குப் பெயர். கோயிலின் பெயரே பிற்காலத்தில் ஊருக்குப் பெயராயிற்று. ஆண்டார் கோயில் என்பது இன்று வழக்கில் திருவாண்டார் கோயில் என்றாயிற்று.
ஆலயம் தினந்தோறும் காலை 7 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரையும் திறந்திருக்கும். நாள் தோறும் இருகால வழிபாடுகள் நடைபெறுகின்றன. கார்த்திகை அஷ்டமியில் பைரவருக்கு இங்கு விசேஷமான பூஜைகள் நடைபெறுகின்றன. இது தவிர, ஞாயிறு தோறும் அன்பர்களின் உபயமாகப் பைரவருக்கு அபிஷேகம் நடைபெறுகிறது. சித்திரைப் பெருவிழா ஏக தின உற்சவமாக நடைபெறுகிறது.
| வடுகூர்நாதர் ஆலயம் புகைப்படங்கள் | ||
|---|---|---|
![]() ஆலயத்தின் வெளிப்புறத் தோற்றம் |
![]() ஆலயத்தின் நுழைவாயில் |
|
![]() கிழக்கு வெளிப் பிரகாரத்தில் பலிபீடம், நந்தி |
![]() விநாயகர் சந்நிதி |
|
![]() ஆலயத்தின் உள்ளே |
![]() நவக்கிரக சந்நிதி |
|
![]() நால்வர் சந்நிதி |
![]() நால்வர் சந்நிதி விமானம் | |
![]() வள்ளி தெய்வானையுடன் முருகர் |
![]() விநாயகர் | |
சம்பந்தர் இயற்றியுள்ள இத்தலத்திற்கான இப்பதிகம் முதலாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது.
1. சுடுகூ ரெரிமாலை யணிவர் சுடர்வேலர் கொடுகூர் மழுவாளொன் றுடையார் விடையூர்வர் கடுகூர் பசிகாமங் கவலை பிணியில்லார் வடுகூர் புனல்சூழ்ந்த வடுகூர் அடிகளே. 2. பாலு நறுநெய்யுந் தயிரும் பயின்றாடி ஏலுஞ் சுடுநீறும் என்பும் ஒளிமல்கக் கோலம் பொழிற்சோலைக் கூடி மடவன்னம் ஆலும் வடுகூரில் ஆடும் அடிகளே. 3. சூடும் இளந்திங்கள் சுடர்பொற் சடைதன்மேல் ஓடுங் களியானை உரிபோர்த் துமையஞ்ச ஏடு மலர்மோந்தங் கெழிலார் வரிவண்டு பாடும் வடுகூரில் ஆடும் அடிகளே. 4. துவரும் புரிசையுந் துதைந்த மணிமாடம் கவர வெரியோட்டிக் கடிய மதிலெய்தார் கவரு மணிகொல்லைக் கடிய முலைநல்லார் பவரும் வடுகூரில் ஆடும் அடிகளே. 5. துணியா ருடையாடை துன்னி யரைதன்மேல் தணியா அழல்நாகந் தரியா வகைவைத்தார் பணியா ரடியார்கள் பலரும் பயின்றேத்த அணியார் வடுகூரில் ஆடும் அடிகளே. 6. தளருங் கொடியன்னாள் தன்னோ டுடனாகிக் கிளரும் அரவார்த்துக் கிளரும் முடிமேலோர் வளரும் பிறைசூடி வரிவண் டிசைபாட ஒளிரும் வடுகூரில் ஆடும் அடிகளே. 7. நெடியர் சிறிதாய நிரம்பா மதிசூடும் முடியர் விடையூர்வர் கொடியர் மொழிகொள்ளார் கடிய தொழிற்காலன் மடிய வுதைகொண்ட அடியர் வடுகூரில் ஆடும் அடிகளே. 8. பிறையும் நெடுநீரும் பிரியா முடியினார் மறையும் பலபாடி மயானத் துறைவாரும் பறையும் அதிர்குழலும் போலப் பலவண்டாங் கறையும் வடுகூரில் ஆடும் அடிகளே. 9. சந்தம் மலர்வேய்ந்த சடையின் இடைவிம்மு கந்தம் மிகுதிங்கள் சிந்து கதிர்மாலை வந்து நயந்தெம்மை நன்றும் அருள்செய்வார் அந்தண் வடுகூரில் ஆடும் அடிகளே. 10. திருமால் அடிவீழத் திசை நான்முகன் ஆய பெருமான் உணர்கில்லாப் பெருமான் நெடுமுடிசேர் செருமால் விடையூருஞ் செம்மான் திசைவில்லா அருமா வடுகூரில் ஆடும் அடிகளே. 11. படிநோன் பவையாவர் பழியில் புகழான கடிநாண் நிகழ்சோலை கமழும் வடுகூரைப் படியா னசிந்தை மொழியார் சம்பந்தன் அடி ஞானம் வல்லார் அடி சேர்வார்களே.















