தகவல் பலகை | |
---|---|
சிவஸ்தலம் பெயர் | கீழை திருக்காட்டுப்பள்ளி |
இறைவன் பெயர் | ஆரண்ய சுந்தரேஸ்வரர் |
இறைவி பெயர் | அகிலாண்டேஸ்வரி |
பதிகம் | திருஞானசம்பந்தர் - 1 |
எப்படிப் போவது | சீர்காழியில் இருந்து சுமார் 10 கி.மீ. தொலைவிலும், திருவெண்காட்டில் இருந்து மேற்கே இளையமுதுகுளபுரம் செல்லும் சாலையில் சுமார் 1.5 கி.மீ. தொலைவிலும் இந்த சிவஸ்தலம் அமைந்துள்ளது. சீர்காழி - தரங்கம்பாடி சாலையில் அல்லி விளாகம் என்னுமிடத்தில் திருவெண்காட்டிற்குப் பிரியும் சாலையில் வந்து இலையமுதுகுளபுரம் தாண்டி கீழைத்திருக்காட்டுப்பள்ளியை அடையலாம். ஊரில் சாலையில் இருந்து சற்றுத்தள்ளி வலதுபுறம் உட்புறமாகக் கோயில் உள்ளது. |
ஆலய முகவரி | அருள்மிகு ஆரண்ய சுந்தரேஸ்வரர் திருக்கோவில் கீழைத்திருக்காட்டுப்பள்ளி திருவெண்காடு அஞ்சல் சீர்காழி வட்டம் மயிலாடுதுறை மாவட்டம் PIN - 609114 இவ்வாலயம் தினந்தோறும் காலை 9 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 7-30 மணி வரையிலும் திறந்திருக்கும். |
திருவெண்காடு தலத்தில் இருந்து கீழைதிருக்காட்டுப்பள்ளி ஆலயம் செல்லும் வழி வரைபடம்
Map courtesy by: Google Maps
கோவில் அமைப்பு : இவ்வாலயத்திற்கு இராஜகோபுரமில்லை. ஒரு முகப்பு வாயில் மட்டுமே உள்ளது. முகப்பு வாயில் வழியே உள்ளே நுழைந்ததும் இடதுபுறம் பிரம்மேசர், முனியீசர் என்ற பெயரில் மோட்சம் அருளும் இரட்டை சிவலிங்கங்கள் உள்ளன. அடுத்து, சுப்பிரமணியர், பைரவர், சூரியன் சந்நிதிகள் உள்ளன. கருவறைச் சுவரில் வெளிப்புறத்தில் ஓரிடத்தில் மன்னன் ஒருவன் சிவலிங்கத்தை வழிபடுவது போன்ற சிற்பமுள்ளது. பிரகார வலம் முடித்து வாயில் நுழைந்தால் மண்டபத்தில் மேற்கு நோக்கிய சுவாமி சந்நிதியும் இடதுபுறம் அம்பாள் சந்நிதியும் ஒரு சேரத் தரிசிக்கத்தக்க வகையில் அமைந்துள்ளன. இத்தலத்து இறைவன் ஆரண்யேஸ்வரர் சுயம்பு மூர்த்தியாக சதுரபீட ஆவுடையாரில் அருள்பாலிக்கிறார் . பிரகாரத்தில் "தசலிங்கம்" சன்னதி இருக்கிறது. இந்த சன்னதியில் ஏழு லிங்கங்கள் இருக்கிறது. இதில் ஒரே லிங்கத்தில் இரண்டு பாணங்கள் இருப்பது வித்தியாசமான அமைப்பு. அம்பாள் அகிலாண்டேஸ்வரி அழகிய சிறிய திருமேனியுடன் தெற்கு நோக்கி தனிச்சன்னதியில் இருக்கிறாள். இங்கு சுவாமியே பிரதானம் என்பதால் இத்தலத்தில் நவக்கிரக சந்நிதி இல்லை.
ததீசி முனிவரின் முதுகுத் தண்டை ஆயுதமாகப் பெற்று இந்திரன் விருத்திராசுரன் என்ற அசுரனை அழித்தான். அதனால் இந்திரனுக்கு பிரம்மஹத்தி தோஷம் பற்றிக் கொண்டது. அதைப் போக்கிக் கொள்ள பிரம்மாவின் வழிகாட்டுதல் படி இத்தலம் வந்து இறைவனை நோக்கி தவம் செய்து வழிபட்டு பிரம்மஹத்தி தோஷம் நீங்கப் பெற்று மீண்டும் இந்திர பதவியைப் பெற்றான் என தலபுராணம் சொல்கிறது. இந்தக் கோயிலில் உள்ள ஸ்ரீபிரம்மேஸ்வர லிங்கத்தை வழி படுவோர் 100 அஸ்வமேத யாகங்கள் செய்த பலனைப் பெறுவார்கள் என்பது ஐதீகம்.
சுவாமி கோஷ்டத்திலுள்ள தட்சிணாமூர்த்தி ஆறு சீடர்களுடன் வீற்றிருக்கிறார். பொதுவாக சனகர், சனாதனர், சனந்தனர், சனத்குமாரர் ஆகிய நால்வருடன் மட்டும் காட்சி தரும் தட்சிணாமூர்த்தி, இத்தலத்தில் ஆறு பேருடன் காட்சி தருவது விசேஷம். பைரவர், சூரியன், சனீஸ்வரர் ஆகியோரும் பிரகாரத்தில் இருக்கின்றனர். இத்தலத்திலுள்ள விநாயகர் மிகவும் விசேஷமானவர். ஒரு சாபத்தால் நண்டு வடிவம் எடுத்த கந்தர்வன் இவரை வழிபட்டதால், இவர் நண்டு விநாயகர் என்று அழைக்கப்படுகிறார். இந்த விநாயகரின் பீடத்தில் நண்டு இருப்பது வித்தியாசமான அமைப்பு. பொதுவாக விநாயகருக்கு இருக்க வேண்டிய மூசிக வாகனமும் இங்கு கிடையாது. நண்டு, இவருக்கு வாகனமாக இருப்பதால் மூசிக வாகனம் இல்லை என்கிறார்கள்.
ஆரண்ய முனிவர் வழிபட்ட தலம் இது. கோஷ்டத்தில் மகாகாளர் சிவ வழிபாட்டிற்காக சங்கு ஊதிக் கொண்டிருக்க, ஆரண்ய முனிவர் சிவனை பூஜை செய்யும் சிற்பம் இருக்கிறது. உச்சி கால பூஜையின் போது மாகாளர் அருகில் சங்கு ஊதும் சப்தம் கேட்கும் என்று சொல்லப்படுகிறது.
Top