திருஅன்னியூர் என்ற பெயரில் இரண்டு தேவாரத் தலங்கள் இருக்கின்றன. அதில் ஒன்று காவிரி வடகரைத் தலம், மற்றொன்று காவிரி தென்கரைத் தலம். காவிரி வடகரைத் தலமான திருஅன்னியூர் இன்றைய நாளில் பொன்னூர் என்று அழைக்கப்படுகிறது.

கோவில் அமைப்பு: ஆரவாரமற்ற அமைதியான இந்த பொன்னூர் கிராமத்தின் வடகோடியில் எழிலுற அமைந்திருக்கிறது இச்சிவாலயம். கிழக்கு முகம் கொண்ட இச்சிவாலயம் சிறிய ஆலயமாக சிறப்புறத் திகழ்கிறது. இவ்வாலயத்திற்கு கோபுரம் இல்லை. கிழக்கு நோக்கிய ஒரு தோரண வாயில் மட்டும் உள்ளது. முகப்பு வாயிலின் மேல் அழகிய சுதைச் சிற்பங்கள் உள்ளன. முகப்பு வாயிலுக்கு எதிரில் வருண தீர்த்தம் (அக்னி தீர்த்தம் என்றும் இதற்குப் பெயர் உண்டு) உள்ளது.

முகப்பு வாயிலைக் கடந்து உள்ளே சென்றால் ஒரு சிறிய விமானத்துடன் கூடிய நந்தி மண்டபமும் அதையடுத்து இறைவன் கருவறைக்குச் செல்லும் மற்றொரு நுழைவு வாயிலும் உள்ளன. இந்த இரண்டாவது நுழைவு வாயில் மேற்புரத்திலும் அழகிய சுதை வேலைப்பாடுகள் கொண்ட உருவங்கள் காணப்படுகின்றன. வெளிப் பிரகாரத்தில் விநாயகர், முருகன், மகாலட்சுமி, நவக்கிரக சந்நிதிகள் உள்ளன. கருவறை முன் உள்ள மகா மண்டபத்தில் தெற்கு நோக்கிய அம்பாள் பிருஹந்நாயகி சந்நிதி உள்ளது. அம்பாளைத் தொழுது வரும்போது பிராகாரத்தில் ஆதிமூல லிங்கம் - அக்கினிக்குக் காட்சி தந்த மூர்த்தி உள்ளார்.
கருவறை அர்த்த மண்டபத்தில் விநாயகர் தரிசனம் தருகிறார். கருவறையில் ஆபத்சகாயேஸ்வரர் லிங்க உருவில் சுயம்புமூர்த்தியாக கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். இத்தல நாதனான ஆபத்சாகயேஸ்வரர் பெறும் ஆபத்துகளையும் நீக்க வல்லவர். ஒரே மகாமண்டபத்தைக் கொண்டு ஸ்வாமி சன்னதி கிழக்கு நோக்கியும், அம்பாள் சன்னதி தெற்கு நோக்கியும் அமையப் பெற்றுள்ளது. கோஷ்ட மூர்த்தங்களாக நர்த்தன கணபதி, தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், துர்க்கை உள்ளனர். கருவறை சுற்றுப் பிரகாரத்தில் விநாயகர், வள்ளி - தெய்வயானையுடன் முருகர், சந்திரசேகரர், நடராஜர், சிவகாமி, ஆடிப்பூர அம்மன், துர்க்கை, அஸ்திரதேவர் முதலிய மூர்த்தங்கள் உள்ளன. வள்ளி, தெய்வானையுடன் இருக்கும் சுப்பிரமணியர், காதுகளில் வட்ட வடிவமான காதணி அணிந்த கோலத்தில் காட்சி தருவது சிறப்பம்சம்.
இவ்வாலயத்தின் தலவிருட்சம் எலுமிச்சை மரம். அக்கினி, சூரியன், ரதி, பாண்டவர் முதலியோர் இத்தல இறைவனை வழிபட்டுள்ளனர்.
தலத்தின் பெருமை:
- சூரியன் சாபவிமோசனம் பெற்ற தலம்: ஆதியில் திருக்குறுக்கை திருத்தலத்திலே மன்மதனை எரித்தார் சிவபெருமான். கணவனை இழந்து வாடியிருந்த ரதியின் மீது இச்சை கொண்டான் சூரியன். பதிவிரதையான ரதியோ சூரியனின் வலக்கரம் பின்னமாக சாபமிடுகிறாள். மனம் வருந்திய சூரியனோ, சாபவிமோசனம் பெற அன்னியூரை அடைந்து வழிபடுகின்றான். ஈசனது பேரருளால் சூரியன் தனது இழந்த கையை மீண்டும் பெற்று விமோசனம் பெற்றான்.
- ரதிதேவி தனது கணவன் மன்மதனை மீட்க இத்தலத்தில் விளங்கும் ஆபத்சகாயரை பிரார்த்திக்கின்றாள். அவளுடைய பிரார்த்தனைக்கு செவி சாய்த்து ஈசன் ரதியின் கண்களுக்கு மட்டும் தெரியும்படி மன்மதனுக்கு மீண்டும் வாழ்வு அளித்தார்.
- தட்சன் செய்த யாகத்தில் கலந்து கொண்டதால் வீரபத்திரரால் தண்டிக்கப்பட்ட அக்னிதேவன் தனது சாபம் தீர ஈசனை பல தலங்களில் வழிபட்டான். அதில் திரு அன்னியூர் தலமும் ஒன்றாகும். இத்தலத்தில் தன் பெயரில் தீர்த்தம் உண்டாக்கி ஈசனை இங்கு வழிபட்டுள்ளான். இத்தீர்த்தமே அக்னி தீர்த்தம் என்ற பெயரில் ஆலயத்திற்கு வெளியே நுழைவாயிலுக்கு எதிரே உள்ளது.
- தீரா வெண்குஷ்டத்தால் அவதியுற்ற ஹரிச்சந்திர மகாராஜா இத்தலத்தில் நீராடி, இறைவனின் கட்டளைப்படி வைகாசி விசாக நன்னாளில் தயிர் சாதம் நிவேதனம் செய்து, ஆபத்சகாயரை வணங்கி, வழிபட்டு விமோசனம் பெற்றுள்ளார்.
- இத்தலத்தில் வருணன் மற்றும் பாண்டவர்கள் ஐவரும் பூஜித்து, பெரும் பேறு பெற்றுள்ளனர்.
- சூரிய பரிகாரத்திற்கு உகந்த இத்திருத்தலத்தில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் 25 ஆம் தேதி முதல் 29 தேதி வரை 5 நாட்கள் காலையில் சூரியக் கதிர்கள் ஸ்வாமி மீது விழும் சூரிய பூஜை வெகு சிறப்பாக இங்கு நடக்கிறது. ஆகையால் இத்தலம் பாஸ்கர ஷேத்ரம் என்றும் அழைக்கப்படுகிறது.
வைகாசி விசாகத்தில் இத்தலத்தில் நீராடி, ஸ்வாமி, அம்பாளுக்கு அபிஷேகம் நடத்தி, தயிர் சாதம் நிவேதித்து, வழிபடுவோரது பெரும் ஆபத்துகள் நீங்கும் என்பது இத்தலத்தின் பிரார்த்தனையாக அனுசரிக்கப்படுகிறது. இவ்வூரில் அமைந்துள்ள கரியமாணிக்கப் பெருமாள் கோயிலும் தரிசிக்க வேண்டிய ஒன்றாகும்.