Shiva temples of Tamilnadu

தேவார பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்
பாடல் பெற்ற தலம் கோவில் விபரங்கள் தமிழ்நாடு வர ஆலோசனைகள்

தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்திருபந்தனைநல்லூர் (தற்போது வழக்கில் பந்தநல்லூர் என்று பெயர்)
இறைவன் பெயர்பசுபதிநாதர்
இறைவி பெயர்வேணுபுஜாம்பிகை
பதிகம்திருநாவுக்கரசர் - 1
திருஞானசம்பந்தர் - 1
எப்படிப் போவது மயிலாடுதுறையிலிருந்து திருப்பனந்தாள் செல்லும் பேருந்து பந்தநல்லூர் வழியாகச் செல்கிறது. மயிலாடுதுறையிலிருந்து சுமார் 21 கி.மீ. தொலைவில் ஊரைத்தாண்டிச் சாலையோரத்தில் சற்று உள்ளடங்கிக் கோயில் உள்ளது. கும்பகோணம் மற்றும் குத்தாலத்தில் இருந்தும் பந்தநல்லூர் வர பேருந்து வசதிகள் உள்ளன.
ஆலய முகவரிஅருள்மிகு பசுபதிநாதர் திருக்கோவில்
பந்தனைநல்லூர் அஞ்சல்
கும்பகோணம் வட்டம்
தஞ்சாவூர் மாவட்டம்
PIN - 609807

இவ்வாலயம் காலை 6 மணி முதல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
Pandhanallur route map

மயிலாடுதுறையில் இருந்து திருபந்தனைநல்லூர் செல்லும் வழி வரைபடம்
Map courtesy by: Google Maps

தல வரலாறு: சிவனும் பார்வதியும் கைலாயத்தில் அமர்ந்திருந்தபோது பார்வதிக்கு பந்து விளையாடும் ஆசை ஏற்பட்டது. இதனால் சிவன் 4 வேதத்தையும் 4 பந்துகளாக மாற்றி பார்வதியிடம் கொடுக்கிறார். பார்வதியும் தொடர்ந்து விளையாடுகிறாள். இவள் விளையாடுவதால் சூரியன் மறையாமல் வெளிச்சம் தருகிறார். இருட்டே இல்லாமல் போக, மாலை வேளையில் சூரியன் மறையும் நேரம் முனிவர்கள் சந்தியாவந்தனம் செய்ய இயலாமல் போனது. அனைவரும் சூரியனிடம் செல்ல, பார்வதியின் கோபத்திற்கு நான் ஆளாக மாட்டேன் என கூறிவிடுகிறார். எனவே முனிவர்கள் அனைவரும் சிவனிடம் சென்று முறையிடுகின்றனர். சிவன் பார்வதியிடம் செல்கிறார். இவர் வந்ததை பார்வதி கவனிக்காமல் பந்து விளையாட்டிலேயே ஆர்வத்துடன் இருந்தாள். கோபம் கொண்ட சிவன், பந்தை தன் காலால் எட்டி உதைத்துவிட்டு பார்வதியை பசுவாக சபிக்கிறார். வருந்திய பார்வதி சாபவிமோசனம் வேண்டுகிறார். பந்து பூமியில் இத்தலத்தில் உள்ள சரக்கொன்றை மரத்தின் அடியில் விழுகிறது. இந்த மரத்தின் அடியில் உள்ள சிவலிங்கத்திற்கு பால் சொரிந்து அபிஷேகம் செய்தால் சாபவிமோசனம் கிடைக்கும் என்றார். பார்வதியை காப்பாற்ற மகாவிஷ்ணு இடையர் வடிவில் அப்பசுவை அழைத்துக்கொண்டு இத்தலம் வருகிறார். பகல் பொழுதில் பசுவை மேய விட்டு, மாலையில் அருகிலுள்ள கன்வ மகரிஷி ஆசிரமத்தில் பால் கொடுத்து வந்தார். ஒரு நாள் பசு புற்றிலிருந்த லிங்கத்தை பார்த்து, அதன் மேல் பாலை சொரிந்து விடுகிறது. அன்று மாலை மகரிஷிக்கு பால் இல்லை. இதற்கான காரணம் அறிய பசுவின் பின்னால் கன்வ மகரிஷி செல்கிறார். புற்றின் மீது பசு பால் சொரிவதை கண்டவுடன் பசுவை அடிக்கிறார். பசு துள்ளி குதித்து புற்றில் காலை வைக்க, பசுவும் இடையனாக வந்த விஷ்ணுவும் சுய உருவம் பெருகின்றனர். சாப நிவர்த்தி பெற்றவுடன் தன்னை திருமணம் செய்ய சிவனிடம் வேண்டுகிறார். அதற்கு சிவன் வடக்கு நோக்கி தவமிருந்து என்னை வந்து சேர் என்கிறார். அதன்படி செய்து அம்மன் சிவனை திருமணம் செய்கிறார். சிவன் மூலஸ்தானத்தில் கல்யாண சுந்தரராக அருள்பாலிக்கிறார். இங்கு சிவன் புற்றாக அமைந்த சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். பந்து அணைந்த தலம் ஆதலால் பந்தணை நல்லூர் என்று இத்தலம் பெயர் பெற்றது. பசுவுக்குப் பதியாக வந்து அருள் செய்தமையால் இறைவன் பசுபதிநாதர் என்று பெயர் பெற்றார். சிவலிங்க பாணத்தின் சிரசில் பசுவின் குளம்புச்சுவடு பதிந்திருப்பதை இன்றும் காணலாம்.

கோவில் அமைப்பு: இவ்வாலயத்தின் இராஜகோபுரம் ஐந்து நிலைகளுடன் காட்சி தருகிறது. கோயிலுக்கு எதிரில் நடுவில் நீராழி மண்டபத்துடன் ஆலயத்தின் தீர்த்தமான சூரிய தீர்த்தம் உள்ளது. கோபுர வாயில் வழியே உள்ளே சென்றால் விசாலமான ஒரு மண்டபம் உள்ளது. மண்டபத்தில் கவசமிட்ட கொடிமரம், பலிபீடம், நந்தி ஆகியவற்றைக் காணலாம். மண்டபத்தில் தெற்கு நோக்கிய அம்பாள் வேணுபுஜாம்பிகை சந்நிதி உள்ளது. அருகில் காளி சந்நிதியும் உள்ளது. அடுத்துள்ள நுழைவாயில் திருநாவுக்கரசர் நுழைவாயில் என்ற பெயருடன் உள்ளது. இந்த நுழைவாயிலுக்கு அருகில் வலதுபுறம் வள்ளி தெய்வானை சமேத முருகர் சந்நிதி உள்ளது. இந்த வாயில் வழி உள்ளே சென்று இடதுபுறம் திரும்பினால் நால்வர் சந்நிதியைக் காணலாம். உட்பிரகாரம் வலம் வரும்போது கன்னி மூலையில் நிருதி கணபதி சந்நிதி, அதையடுத்து கிழக்கு நோக்கியுள்ள வள்ளி, தெய்வானை சமேத ஸ்ரீசுப்பிரமணியர் சந்நிதியைக் காணலாம். அதையடுத்து கஜலட்சுமி, அண்ணபூரணி, சரஸ்வதி ஆகியோரின் சந்நிதிகள் உள்ளன. 63 நாயன்மார்களின் அணிவகுப்பு, தசலிங்கங்கள் ஆகியவையும் உட்பிரகாரத்தில் காணப்படுகின்றன. பைரவர்ரை அடுத்து நவக்கிரகங்கள் ஒரே வரிசையில் காட்சியளிக்கின்றன. இவற்றுக்கு அருகில் சந்திரன், சூரியன், விநாயகர் உள்ளனர். தனிக்கோயிலாகப் பரிமளவல்லித் தாயாருடன் ஆதிகேசவப்பெருமாள் வீற்றிருக்கின்றார்.

சுவாமி சந்நிதி வாயிலுக்குத் திருஞான சம்பந்தர் திருவாயில் என்று பெயர் எழுதப்பட்டுள்ளது. துவாரபாலகரைக் கைகூப்பித் தொழுது உட்சென்றால் இத்தலத்தின் மூலவன் பசுபதீஸ்வரர் சுயம்பு லிங்க உருவில் குட்டையான பாணத்துடன் தரிசனம் தருகிறார். புற்றாதலின் குவளை (கவசம்) சார்த்தியே அபிஷேகம் செய்கின்றனர். அர்த்த மண்டபத்தில் உற்சவ மூர்த்தங்கள் வைக்கப்பட்டுள்ளன. இவற்றுள் பிட்சாடனமூர்த்தி மிகவும் அழகுடன் உள்ளது. இத்தலத்தில் வருடத்தில் ஆவணி மாதம் 19, 20, 21 தேதிகளில் இறைவன் திருமேனியில் சூரியனுடைய ஒளிக்கதிர்கள் படுகின்றன.

காம்போச மன்னனின் மகன் குருடு நீங்கிய இடம் இத்தலம். இதனால் இம்மன்னன் தன் மகனுக்குப் பசுபதி என்று பெயர் சூட்டியதோடு, திருக்கோயில் திருப்பணிகளையும் செய்து வழிபட்டதாக வரலாறு. இன்றும் திருக்குள படித்துறை இதன் தொடர்பாகக் காம்போச மன்னன் துறை என்றழைக்கப்படுகிறது. காம்போச மன்னன் திருப்பணிகள் செய்து கட்டிய இக்கோயில் பிற்காலத்தில் சோழ மன்னர்களால் மேலும் திருப்பணிகள் செய்யப்பட்டன.

சரக்கொன்றையை தல விருடசமாகப் பெற்ற பந்தனைநல்லூர் தலம் ஒரு பித்ரு சாப நிவர்த்தி ஸ்தலம். "கண் பார்வைக் குறைபாடுகளை நீக்கியருளும் தலமும் கூட! சொத்து வழக்கில் நியாயம், கடன் பிரச்னை, தொழில் விருத்தி ஆகியவற்றைத் தந்தருள்கிறார் ஸ்ரீபசுபதீஸ்வரர். வித்தை, கல்வி, குழந்தைப்பேறு ஆகியவற்றை ஸ்ரீவேணுபுஜாம்பிகை வழங்குகிறாள்'" என்று ஸ்ரீபசுபதீஸ்வரர் கோயிலின் குருக்கள் கூறுகின்றார்.

Top
பசுபதிநாதர் ஆலயம் புகைப்படங்கள்
ஆலயத்திற்கு வெளியிலுள்ள சூரிய தீர்த்தம்
5 நிலை இராஜகோபுரம்
முன் மண்டபத்தில் கொடிமரம், பலிபீடம், நந்தி
நால்வர் சந்நிதி
வெளிப் பிரகாரம், இறைவன் கருவறை விமானம்
சுப்பிரமணியர் சந்நிதி
வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர்
63 மூவர் அணிவகுப்பு
உட்பிரகாரத்தில் தச லிங்கங்கள்
ஒரே வரிசையில் நவக்கிரகங்கள்