Shiva temples of Tamilnadu

தேவார பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்
பாடல் பெற்ற தலம் கோவில் விபரங்கள் தமிழ்நாடு வர ஆலோசனைகள்

தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்திருப்பூந்துருத்தி
இறைவன் பெயர்புஷ்பவன நாதர்
இறைவி பெயர்சௌந்தர்ய நாயகி, அழகாலமர்ந்த நாயகி
பதிகம்திருநாவுக்கரசர் - 3
எப்படிப் போவது அஷ்ட வீரட்டான ஸ்தலங்களில் ஒன்றான திருக்கண்டியூர் என்ற சிவஸ்தலத்தில் இருந்து திருக்காட்டுப்பள்ளி செல்லும் சாலை வழியில் 4 கி.மீ. தொலைவிலும், திருவையாற்றில் இருந்து சுமார் 7 கி.மீ. தொலைவிலும் திருப்பூந்துருத்தி இருக்கிறது. திருவையாற்றில் இருந்து திருப்பூந்துருத்தி செல்ல நகரப் பேருந்து வசதி உண்டு.
ஆலய முகவரி அருள்மிகு புஷ்பவனேஸ்வரர் திருக்கோயில்
திருப்பூந்துருத்தி
திருப்பூந்துருத்தி அஞ்சல்
(வழி) கண்டியூர்
திருவையாறு வட்டம்
தஞ்சை மாவட்டம்
PIN - 613103

இவ்வாலயம் தினந்தோறும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
Tirupoonthuruthi route mapதிருவையாறில் இருந்து திருப்பூந்துருத்தி செல்லும் வழி வரைபடம்
Map courtesy by: Google Maps

இரண்டு ஆற்றிற்கு நடுவே அமைந்துள்ள ஊர்கள் துருத்தி என்று அழைக்கப்படும். இத்தலம் காவிரிக்கும் குடமுருட்டிக்கும் இடையில் உள்ளதால் இப்பெயர் பெற்றது. ஊர் மேலத்திருப்பூந்துருத்தி, கீழத்திருப்பூந்துருத்தி என்று இரண்டு பகுதிகளாக உள்ளது. கோயில் உள்ள பகுதி மேலத்திருப்பூந்துருத்தி ஆகும்.

கோவில் அமைப்பு: இக்கோவிலின் இராஜ கோபுரம் ஐந்து நிலைகளுடன் கிழக்கு நோக்கியுள்ளது. கோபுர வாயில் வழியே உள்ளே நுழைந்ததும் பஞ்சமூர்த்தி மண்டபம் உள்ளது. கொடிமரம் இல்லை. பலிபீடமும், நந்தி மண்டபம் மட்டும் உள்ளன. நந்தி மண்டபத்திலுள்ள பெரிய நந்தி சற்றே பள்ளத்தில் இறைவன் சந்நிதிக்கு நேராக இல்லாமல் விலகியுள்ளது. வெளிப் பிரகாரத்தில் வலதுபுறம் தெற்கு நோக்கிய அம்பாள் சந்நிதி உள்ளது. இரண்டாவது உள்வாயிலைத் தாண்டியதும் வசந்த மண்டபம். கொடிமரம், பலிபீடம், உள்ளன. இங்கும் நந்தி சந்நிதி விட்டு விலகியவாறு உள்ளது. அப்பர் உழவாரத் தொண்டு செய்த தலமென்று எண்ணி, காலால் மிதிக்கவும் அஞ்சி வெளியில் நின்ற ஞானசம்பந்தருக்கு இறைவன் நந்தியை விலகச் செய்து காட்சி தந்ததாகத் தலபுராணம் கூறுகிறது. சுவாமி சந்நிதிக்குத் தென்புறம் சோமாஸ்கந்த மண்டபமும் அடுத்து நடராச சபையுமுள்ளது. உள் பிராகாரத்தில் விநாயகர், சப்தமாதர்கள், நால்வர் சந்நிதிகள் உள்ளன. கருவறையின் தென்புறம் தென்கயிலையும் வடபுறத்தில் வடகயிலையுமாகிய கோயில்கள் விளங்குகின்றன. மகா மண்டபம், அர்த்த மண்டபம் கடந்து கருவறையில் மூலவர் புஷ்பவன நாதர் எழுந்தருளியுள்ளார். கோஷ்ட மூர்த்தங்களில் வீணாதர தட்சிணாமூர்த்தி திருமேனி மிகவும் சிறப்பானது. மேற்கு கோஷ்டத்தில் அர்த்தநாரீஸ்வரர் உள்ளார். மகிடனையழித்த பாவத்தைப்போக்க ஒற்றைக் காலில் நின்று தவம் செய்யும் துர்க்கையும், அமர்ந்த கோலத்தில் அப்பர்பெருமானும், அருகில் பரவை நாச்சியார் - சங்கிலி நாச்சியார் ஆகிய இரு மனைவியுருடன் சுந்தரர் இருக்கும் சிலா உருவங்கள் காணத்தக்கன. பூந்துருத்தி காடவநம்பியின் திருவுருவமும் தரிசிக்கச் சிறப்புடையன. அம்பாள் கோயிலில் பழைய திருமேனியும் வைக்கப்பட்டுள்ளது.

சப்த ஸ்தானத் தலம்: திருவையாறைத் தலைமை தலமாகக் கொண்டு விளங்கும் சப்த ஸ்தானத் தலங்களில் இத்தலம் ஆறாவது தலமாகும்.

காசிப முனிவர் கங்கையை இத்தலத்திலுள்ள கிணற்றில் வரவைத்து அந்நீரால் இறைவனுக்கு அபஷேகம் செய்து அருள் பெற்றார் என்று தல வரலாறு கூறுகிறது.

இத்தலத்து முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது ஒரு பாடல் உள்ளது. இத்தலத்தில் முருகப்பெருமான் ஒரு திருமுகத்துடனும் நான்கு திருக்கரங்களுடனும் தனது தேவியர் இருவருடன் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார்.

கோயிலுக்கு வெளியே அப்பர் அமைத்த திருமடம் உள்ளது. அப்பர் பலகாலம் திருமடம் அமைத்து இத்தலத்தில் தங்கி திருப்பணி செய்து வந்தார். இங்கு இருந்துதான் அப்பர் பெருமான் திரு அங்கமாலை, அடைவு திருத்தாண்டகம், பலவகை திருத்தாண்டகம், தனி திருத்தாண்டகம் உள்ளிட்ட பல தாண்டகங்களையும் பல குறுந்தொகை பதிகங்களையும் பாடியருளினார். பாண்டி நாட்டு யாத்திரையை முடித்துக் கொண்டு திரும்பிய ஞானசம்பந்தர் திருப்பூந்துருத்தியில் அப்பர் தங்கியிருப்பது பற்றி கேள்விப்பட்டு அங்கு வந்து சேர்ந்தார். சம்பந்தர் வருகையைப் பற்றி தெரிந்து கோண்ட அப்ப்ர் தன்னை இன்னாரென்று காட்டிக் கொள்ளாமல், கூட்டத்தினுள் புகுந்து சம்பந்தர் ஏறி வந்த சிவிகையை தாங்கி வந்தார். திருப்பூந்துருத்தி நெருங்கியதும் அப்பர் எங்கு உள்ளார் என்று சம்பந்தர் வினவ "உங்கள் சிவிகையை தாங்கும் பேறு பெற்று இங்குள்ளேன்" என்று அப்பர் பதிலளித்தார். சம்பந்தர் சிவிகையினின்றும் கீழே குதித்து அப்பரை வணங்க, அப்பரும் சம்பந்தரை வணங்கி இருவரும் உளமுருகித் தொழுது போற்றினர். சம்பந்தரும் அப்பர் அமைத்த திருமடத்தில் சிறிது காலம் தங்கி இருந்தார்.

திருநாவுக்கரசர் இத்தலத்து இறைவன் மேல் மூன்று பதிகங்களும், பொது பதிகங்கள் 15-ம் இத்தலத்தில் தங்கி இருந்த காலத்தில் பாடியருளியுள்ளார். நில்லாத நீர் சடை மேல் நிற்பித்தானை என்று தொடங்கும் பதிகத்தில் அப்பர் பெருமான் திருப்பூந்துருத்தியிலுள்ள இறைவனை தரிசித்து உய்ந்த பேறு பற்றி ஒவ்வொரு பாடலிலும் புறிப்பிடுகிறார். மேலும் அவர் பாடிய அங்கமாலை என்ற பதிகம் மிக அருமையானது. நமது உடல் உறுப்புகளான தலை, காது, கண், மூக்கு, நாக்கு, கால்கள், கைகள், நெஞ்சம் ஆகியவை யாவும் இறைவனை துதிப்பதற்கென்றே ஏற்பட்டவை என்று குறிப்பிடுகிறார். திருமாலும், நான்முகனும் அடிமுடி தேடியும் காணக் கிடைக்காத எம்பெருமானை தன் செஞ்சத்துள்ளே தேடிக் கண்டு கொண்டேன் என்று மனமுருகி குறிப்பிடுகிறார்.

Top
புஷ்பவனநாதர் ஆலயம் புகைப்படங்கள்
5 நிலை இராஜகோபுரம்
2-வது நுழைவாயில் கோபுரம்
நந்தி மண்டபம், பலிபீடம்
ஆதி விநாயகர் சந்நிதி
ஆலய மதிற்சுவரில் அர்த்தநாரீஸ்வரர்
பள்ளத்திலுள்ள நந்தி
அம்பாள் சந்நிதி தனி கோவில்
அப்பர், பரவை, சங்கிலியுடன் சுந்தரர்
மேற்கு கோஷ்டத்தில் அர்த்தநாரீஸ்வரர்
தனது தேவியர் இருவருடன் முருகர்