Shiva temples of Tamilnadu

தேவார பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்
பாடல் பெற்ற தலம் கோவில் விபரங்கள் தமிழ்நாடு வர ஆலோசனைகள்

தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்திருக்கோழம்பம்
இறைவன் பெயர்கோகிலேஸ்வரர், கோழம்பநாதர்
இறைவி பெயர்சௌந்தர நாயகி
பதிகம்திருநாவுக்கரசர் - 1
திருஞானசம்பந்தர் - 1
எப்படிப் போவது கும்பகோணம் - காரைக்கால் சாலையில் திருநீலக்குடியை அடுத்துள்ள எஸ்.புதூர் என்ற ஊரை அடைந்து, அங்கிருந்து வடக்கில் திருக்குழம்பியத்திற்குச் செல்லும் தனிப்பாதையில் 2 கி.மீ. சென்றால் கோயிலையடையலாம். திருவாவடுதுறை சிவஸ்தலத்தில் இருந்தும் தெற்கே சுமார் 4 கி.மீ. ஆட்டோ மூலம் பயணம் செய்தும் இத்தலத்தை அடையலாம்.
ஆலய முகவரிஅருள்மிகு கோகிலேஸ்வரர் திருக்கோயில்
திருக்கோழம்பியம்
எஸ்.புதூர் அஞ்சல்
திருவிடைமருதூர் வட்டம்
தஞ்சாவூர் மாவட்டம்
PIN - 612205

இவ்வாலயம் தினந்தோறும் காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரை மட்டும் திறந்திருக்கும். ஒரு கால பூஜை மட்டும் நடைபெறுகிறது.
tiruhozambam route map

கும்பகோணத்தில் இருந்து திருக்கோழம்பம் செல்லும் வழி

கண்டராதித்த சோழனின் மனைவி செம்பியன் மாதேவி அவர்களால் கட்டப்பட்ட ஆலயங்களில் இவ்வாலயமும் ஒன்றாகும். அம்பிகை ஒரு சமயம் சாபத்தின் காரணமாக பசு வடிவம் பெற்று பூவுலகில் பல தலங்களில் இறைவனை வழிபட்டாள். அத்தகைய தலங்களில் திருக்கோழம்பம் தலமும் ஒன்று. அவ்வாறு பசு வடிவில் வழிபட்ட போது பசுவின் காற்குளம்பு இடறியபோது வெளிப்பட்ட இத்தல இறைவன் கோகிலேசுவர் என்று பெயர் பெற்றார்.

கோவில் அமைப்பு: ஒரு முகப்பு வாயிலுடன் இவ்வாலயம் உள்ளது. முகப்பு வாயிலுக்கு எதிரே பிரம்ம தீர்த்தம் உள்ளது. முகுப்பு வாயிலில் மேலே அமர்ந்த நிலையில் சிவன் பார்வதியும், அவர்களின் ஒருபுறம் விநாயகரும், மறுபுறம் வள்ளி தெய்வானையுடன் முருகரும் சுதை வடிவில் காணப்படுகின்றனர். வாயில் வழி உள்ளே நுழைந்தால் ஒரு நீண்ட பாதை அடுத்துள்ள 3 நிலை கோபுரத்திற்கு நம்மை அழைத்துச் செல்கிறது. கோபுரத்திற்கு முன்னால் நந்தி மண்டபமும், பலிபீடமும் உள்ளன. கோபுரம் கடந்து உட்சென்றால் மகாமண்டபத்தில் நடராஜர் சபை உள்ளது. உள் பிராகாரத்தில் விநாயகர், அப்பர், முருகன், கஜலட்சுமி பைரவர் ஆகியோர் சந்நிதிகள் காணலாம். கருவறை கோஷ்டத்தில் வழக்கமாக காணப்படும் தட்சிணாமூர்த்தி, பிரம்மா, துர்க்கை, விநாயகர் ஆகியோருடன் நடராசரும், சட்டை நாதரும் பிட்சாடனரும் காட்சியளிக்கின்றனர். இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இத்தல லிங்கத்தின் பாணம் மிகவும் பெரியது. பார்வதி பசுவாய் இருந்து பூஜித்ததை எடுத்துக்காட்ட பசுவின் கால்குளம்பு ஆவுடையார் மேல் பதிந்துள்ளதைக் காணலாம்.

தல வரலாறு: சிவனும் மகாவிஷ்ணுவும் பார்வதியை நடுவராக வைத்து சொக்கட்டான் ஆடிக்கொண்டிருந்த போது ஆட்டத்தில் காய் உருட்டியதில் சந்தேகம் வர பார்வதியிடம் கேட்கிறார் சிவன். பார்வதி மகாவிஷ்ணுவிற்கு சாதகமான பதிலை கூறியதால் சிவபெருமான் பார்வதியை பசுவாக பூமியில் பிறக்கும் படி சாபம் இடுகிறார். இப்படி பசுவாக பிறந்த பார்வதி பூவுலகில் பல இடங்களில் இறைவனை பூஜித்தாள். அவைகளில் இத்தலமும் ஒன்றாகும்.

மகாவிஷ்ணுவிற்கும், பிரம்மாவிற்கும் ஒரு சமயம் தங்கள் இருவரில் யார் உயர்ந்தவர் என்பதில் பிரச்னை ஏற்பட்டது. ஜோதி ரூபமாகத் தெரிந்த சிவபெருமானின் அடிமுடியை யார் முதலில் கண்டு வருவது என்ற போட்டியில் பிரம்மன் முடியை காண்பதற்காக சென்று, முடியாமல் போக தாழம்பூவின் துணையுடன், முடியை கண்டதாக பொய் சொன்னார். இதனால் கோபப்பட்ட சிவன் பிரம்மனை தண்டித்தார். பின்பு, பிரம்மன் இத்தலம் வந்து தன் பெயரால் ஒரு குளம் அமைத்து நீராடி இறைவனை வழிபட்டார். அதுவே பிரம்ம தீர்த்தம் என்ற பெயரில் ஆலயத்திற்கு வெளியே உள்ளது.

சந்தன் என்னும் வித்யாதரன் தேவேந்திரனின் சாபத்தினால் குயிலாக மாறினான். சாபம் நீங்க இத்தலம் வந்து பல்லாண்டு காலம் பூஜித்து, சாபம் நீங்கி சுய உருவை அடைந்தான். குயில் (கோகில) வடிவத்துடன் வந்து பக்தன் பூஜித்ததால் இப்பெருமான் கோகிலேசுவரர் என அழைக்கப்பட்டார். இந்திரன் கவுதமரின் சாபம் நீங்க பல காலம் இங்கு சிவனை பூஜித்து சாபம் நீங்கப் பெற்றான்.

சிவபிரான் உறையும் வானளாவிய பொழில் சூழ்ந்த கோழம்பத்தைப் புகழ்ந்து ஞானசம்பந்தர் போற்றிய பதிகப்பாடல்கள் பத்தையும் இசைபொருந்தப் பாடவல்லவர்கட்குப் பாவம் இல்லை என்று ஞானசம்பந்தர் தனது பதிகத்தில் குறிப்பிடுகிறார்.

Top
கோகிலேஸ்வரர் ஆலயம் புகைப்படங்கள்
ஆலயத்தின் கோபுரம்
கோகிலேஸ்வரர்
சௌந்தரநாயகி
கோஷ்டத்தில் அர்த்தநாரீஸ்வரர்
கோஷ்டத்தில் அகத்தியர், நடராஜர், விநாயகர்
ஆலயத்தின் உள் பிராகாரம்