| தகவல் பலகை | |
|---|---|
| சிவஸ்தலம் பெயர் | திருவழுந்தூர் (தேரழுந்தூர் என்றும் கூறப்படுகிறது) |
| இறைவன் பெயர் | வேதபுரீஸ்வரர் |
| இறைவி பெயர் | சௌந்தராம்பிகை |
| பதிகம் | திருஞானசம்பந்தர் - 1 |
| எப்படிப் போவது | மயிலாடுதுறை - கும்பகோணம் சாலையில் சென்று கோமல் செல்லும் சாலையில் திரும்பி மூவலூர் தாண்டிச் சென்றால் தேரழுந்தூர் அடையலாம். மயிலாடுதுறையில் இருந்து 11 கி.மீ. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது. ஊரின் தொடக்கத்திலேயே - "கம்பர் நினைவாலயம்" என்னும் பெயர்ப் பலகையுள்ள இடத்தில் இடப்பக்கமாகத் திரும்பினால் வீதியின் கோடியில் வேதபுரீஸ்வரர் திருக்கோயில் உள்ளது. வலப்புறமாகத் திரும்பிச் சென்றால் அவ்வீதியின் கோடியில் ஆமருவியப்பன் ஆலயமும் (108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்று) அதற்கு முன்பாகவே கம்பர் நினைவு மண்டபமும் உள்ளன. இத்தலம் சைவம் வைணவம் இரண்டிற்கும் சிறப்புடையது. மயிலாடுதுறையில் இருந்து நகரப் பேருந்து வசதிகள் இருக்கின்றன. |
| ஆலய முகவரி | அருள்மிகு வேதபுரீஸ்வரர் திருக்கோயில் தேரழுந்தூர் தேரழுந்தூர் அஞ்சல் மயிலாடுதுறை வட்டம் மயிலாடுதுறை மாவட்டம் PIN - 609805 இவ்வாலயம் தினந்தோறும் காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும். |
சிவனும் மகாவிஷ்ணுவும் பார்வதியை நடுவராக வைத்து சொக்கட்டான் ஆடிக்கொண்டிருந்த போது ஆட்டத்தில் காய் உருட்டியதில் சந்தேகம் வர பார்வதியிடம் கேட்கிறார் சிவன். பார்வதி மகாவிஷ்ணுவிற்கு சாதகமான பதிலை கூறியதால் சினங்கொண்ட சிவபெருமான் பார்வதியை பசுவாக பூமியில் உருவெடுத்து, பூமியில் உழன்று, பின்னர் தன்னை அடையும்படி சாபம் இடுகிறார். சிவபெருமான் உமையவளைப் பசு ஆகும்படி சபித்தது தேரழுந்தூரில் தான் என்று அவ்வூர் புராண வரலாறு கூறுகிறது.
துணைவியைப் பிரிந்த சிவபெருமான் அந்தணர் வேடம் பூண்டு, இத்தலத்தில் மரத்தின் கீழ் அமர்ந்து வேதம் ஓதி வந்தார். அதனால் அவர் வேதபுரீஸ்வரர் என்று பெயர் பெற்றார்.
கோவில் அமைப்பு : தேரழுந்தூர் என்று இன்று அறியப்படும் ஊரின் கிழக்குப் பகுதியில் வேதபுரீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இதே ஊரின் மேற்கே மற்றொரு பகுதியில் 108 திவ்யதேசங்களில் ஒன்றான ஆமருவியப்பன் ஆலயமும் இருக்கிறது. 5 நிலை ராஜகோபுரம் மேற்கில் அமைந்துள்ள இவ்வாலயத்தில் இரண்டு பிரகாரங்கள் உள்ளன. கோபுரம் தாண்டி உள்ளே சென்றவுடன் விசாலமான இடம். அப்படியே வெளிப் பிரகாரம் சுற்றி வர முடியும். உள் வாயில் அருகே கொடிமரத்தையும், கொடிமர மாடத்து விநாயகரையும் நாம் காணலாம். உள் வாயில் கடந்து உள்ளே சென்றால் இருப்பது இரண்டாவது பிரகாரம். கருவறையில் வேதபுரீஸ்வரர் மேற்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். ஆலயத்தின் வடமேற்கு மூலையில் மற்றொரு சிறிய கோவிலில் ஸ்ரீமடேஸ்வரர் சந்நிதி உள்ளது. அம்பாள் திருநாமம் ஸ்ரீமடேஸ்வரி. இதுதான் ஆதி கோவில் என்றும், வேதபுரீஸ்வரர் சந்நிதி இதற்குப் பின்னரே தோன்றியதென்றும் கூறுகிறார்கள். உட்பிரகாரத்தில் வலம் வரும்போது வடமேற்கு மூலையில் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர் சந்நிதியும், வடகிழக்கு மூலையில் நவக்கிரக சந்நிதியும் அமைந்துள்ளன. பக்கத்தில் காவேரி அம்மன், அடுத்து சூரியன், காலபைரவர் முதலியவர்களும் இருக்கின்றனர். அகத்தியர், மார்க்கண்டேயர், காவேரி ஆகியோர் இத்தலத்தில் இறைவனை வழிபட்டு மோட்சம் பெற்றிருக்கின்றனர்.
கிழக்குப் பிரகாரத்தில் தல விருட்சமான சந்தன மரம் இருக்கிறது. இம்மரத்தினடியில் தான் சிவபெருமான் அந்தணர்களுக்கு வேதம் பயிற்றுவித்ததாக தலபுராணம் கூறுகிறது. அதன் அடையாளமாக பக்கத்தில் ஷேத்திர லிங்கத்தையும், நந்தியையும் காணலாம். தென் பிரகாரத்தில் கிழக்கே நோக்கியபடி உள்ள வலஞ்சுழி விநாயகர் சந்நிதி உள்ளது. இந்த வெளிப் பிரகாரத்தில் தான் தென்மேற்குப் பகுதியில் ஸ்ரீமடேஸ்ரர் சந்நிதிக்கு எதிரில் இறைவி சௌந்தராம்பிகையின் சந்நிதி கிழக்கு நோக்கி சிவன் சந்நிதியை நோக்கி தனிக் கோவிலாகவே அமைந்துள்ளது.
தலப் பெயர்க் காரணம்: ஊர்த்துவரதன் என்ற மழவ அரசன் தவத்திறகு மெச்சி பிரம்மா அவனுக்கு ஆகாயத்தில் பறந்து செல்லக் கூடிய ஒரு தேரைப் பரிசாக அளித்தார். அந்த தேரில் ஏறி ஒரு முறை ஊர்த்துவரதன் ஆகாயத்தில் சென்று கொண்டு இருந்த போது ஓரிடத்திற்கு மேல் தேர் முன்னே செல்ல முடியாமல் தடுமாறியது. அதோடு இல்லாமல் பூமியை நோக்கி கீழே இறங்கி பூமியில் அழுந்தி நின்றது. ஊர்த்துவரதன் தேர் பூமியில் இறங்கி அழுந்தி நின்றதற்கு காரணம் என்ன என்று பார்த்த போது அவ்விடத்தில் அகத்திய முனிவர் இறைவனை பூஜித்து வந்ததைப் பார்த்தான். அதனாலேயே தேர் அவ்விடத்தைத் தாண்டிச் செல்லாமல் கீழே இறங்கி அழுந்தி நின்றது எனபதைக் கண்டான். தேர் கீழே அழுந்தி நின்றதால் இத்தலம் தேரழுந்தூர் என்று பெயர் பெற்றது. மேலும் திருஞானசம்பந்தர் தனது பதிகத்தில் ஒவ்வொரு பாடலிலும் இத்தலத்தை "அழுந்தை" என்றே குறிப்பிடுகிறார். அழுந்தை எனபதே மருவி அழுந்தூர் என்று மாறியது என்றும் கூறுவர்.
திருவழுந்தூர் வேதம் தழைத்த ஊர். வேத முழக்கம் எதிரொலித்த ஊர். ஒமப்புகை எங்கும் பரவிய ஊர். இங்குள்ள அந்தணர்கள் பெருமளவில் வாழ்ந்து வேதம் ஓதி, வேத தர்மத்தில் திளைத்து, வேதத்தை பறை சாற்றி இறைவனைத் தொழுது வழிபடுதலில் வல்லவர்களாக விளங்கினர். இத்தலத்திற்கு வருகை தந்த திருஞானசம்பந்தர் அழுந்தூர் வாழ் மறையவர்களின் பெருமையைப் போற்றி ஒரு பதிகமே பாடியிருக்கிறார். அழுந்தை மறையோர் என்று ஒவ்வொரு பாட்டிலும் அவர்களுக்குத் தனி ஏற்றம் தருகிறார். திருஞானசம்பந்தர் பாடியருளியுள்ள இத்தலத்திற்கான பதிகம் இரண்டாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது.
Top
5 நிலை இராஜகோபுரம்
ஆலயம் உட்புறத் தோற்றம்
கொடிமரம், பலிபீடம், நந்தி
2-வது நுழைவாயில்
ஆலயம் வெளிப் பிராகாரம்
தல விருட்சம் சந்தன மரம்
கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி
அம்பாள் சந்நிதி விமானம்
அம்பாள் சந்நிதி நுழைவாயில்