தகவல் பலகை | |
---|---|
சிவஸ்தலம் பெயர் | திருக்கலிகாமூர் ( தற்போது அன்னப்பன் பேட்டை என்று வழங்குகிறது ) |
இறைவன் பெயர் | சுந்தரேஸ்வரர் |
இறைவி பெயர் | அழகம்மை, அழகுமுலையம்மை |
பதிகம் | திருஞானசம்பந்தர் - 1 |
எப்படிப் போவது | சீர்காழி - திருவெண்காடு சாலையில் மங்கைமடம் என்ற ஊருக்குச் சென்று அங்கிருந்து திருநகரி செல்லும் சாலையில் சென்று இத்தலத்தை அடையலாம். சீர்காழியில் இருந்து கோனையாம்பட்டினம் செல்லும் நகரப் பேருந்து அன்னப்பன் பேட்டை வழியாகச் செல்கிறது. ஊர் சாலையோரத்தில் உள்ளது. ஊர் நடுவே சாலைக்குப் பக்கத்தில் கோயில் உள்ளது. திருக்கலிகாமூருக்கு அருகாமையில் திருபல்லவனீச்சுரம், தெண்திருமுல்லைவாயில் என்ற பாடல் பெற்ற சிவஸ்தலங்களும் இருக்கின்றன. |
ஆலய முகவரி | அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோவில் அன்னப்பன் பேட்டை தேனாம்பட்டினம் அஞ்சல் வழி மங்கைமடம் சீர்காழி வட்டம் மயிலாடுதுறை மாவட்டம் PIN - 609106 இவ்வாலயம் தினந்தோறும் காலை 9 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் 7 மணி வரையிலும் திறந்திருக்கும். ஆலயம் தொடர்புக்கு: ராஜாமணி குருக்கள் - கைபேசி: 9715170451 |
கோவில் அமைப்பு : உப்பனாற்றின் தென்கரையில் அமைந்துள்ள இந்த ஆலயத்திற்கு இராஜகோபுரமில்லை. ஒரு முகப்பு வாயில் மட்டும் உள்ளது. கோயிலுக்கு எதிரில் சந்திர தீர்த்தம் உள்ளது. முகப்பு வாயிலைக் கடந்து உள் சென்றால் நந்தி மண்டபத்தைக் காணலாம். இங்கு கொடிமரம் இல்லை. பிராகாரத்தில் சிவலிங்கத்தை வணங்கியபடி பராசர மகரிஷி காட்சி தருகிறார். வெளிப் பிராகாரத்தின் மேற்குச் சுற்றில் விநாயகர், வள்ளி, தெய்வானையுடன் சுப்பிரமணியர், வில்வநாதர், அகிலாண்டேஸ்வரி, மகாலட்சுமி ஆகியோரின் சந்நிதிகள் உள்ளன. அடுத்துள்ள இடத்தில் பைரவர், சனீஸ்வரன், விநாயகர், கைலாசநாதர், பத்திரகாளி முதலிய சிலாரூபங்கள் வரிசையாக வைக்கப்பட்டுள்ளன.
வலம் முடித்து உட்சென்றால் நேரே மூலவர் சுந்தரேஸ்வரர் சதுரபீடத்தில் சற்று குட்டையான பாணத்துடன் கூடிய சிவலிங்கத் திருமேனி உருவில் சுயம்பு மூர்த்தியாக கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். மூலவரைத் தரிசிக்கும் நமக்கு வலதுபுறம் தெற்கு நோக்கிய அம்பாள் சந்நிதி உள்ளது. இத்தலத்தின் அம்பாள் கடலில் இருந்து கண்டெடுக்கப்பட்டவள். சிவாலயங்களில் தீர்த்தவாரி நடைபெறும் போது இறைவன் கடற்கரை அல்லது நதிக்கரைக்கு எழுந்தருள்வது வழக்கம். ஆனால் இத்தலத்தில் அம்பாள் அழகம்மை மாசி மாத பெளர்ணமி அன்று கடலில் நடைபெறும் தீர்த்தவாரிக்கு எழுந்தருள்கிறாள். இது தவிர மாத பிரதோஷம், சிவராத்திர், ஆருத்ரா போன்ற விசேஷங்களும் இத்தலத்தில் விமரிசையாக தடைபெறுகின்றன.
பராசர முனிவர் அசுரன் உதிரனை அழித்ததால் ஏற்பட்ட தோஷம் நீங்க பல தலங்களுக்கு யாத்திரை சென்றார். அவர் இத்தலம் வந்தபோது சிவன் காட்சி தந்து, விமோசனம் கொடுத்தருளினார். அவரது வேண்டுதலுக்காக இத்தலத்தில் இறைவன் எழுந்தருளினார். பராசர முனிவர் ஜோதிடத்தில் நல்ல புலமை பெற்றவர். ஆகையால் ஜோதிடத்தைத் தொழிலாகக் கொண்டவர்கள், ஜோதிடம் கற்க விரும்புவர்கள் பராசர முனிவர் பூஜித்த இத்தல இறைவனை வணங்கினால் நல்ல பலன் கிடைக்கும்.
வணிகன் ஒருவன் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டான். திருமுல்லைவாயில் அடைந்து அத்தல இறைவனிடம் தன் வயிற்று வலியைப் போக்கி அருளுமாறு வேண்டினான். அவனூடைய வயிற்று வலியை தீக்காது வேறொரு தலத்திற்கு அவனுக்கு வழிகாட்டினார் இறைவன். கடற்கரை ஓரமாகவே நடந்து வந்த அவன் மீனவர் வலையில் சிக்கிய ஒரு அழகிய அம்பாள் சிலையைக் கண்டான். அதை எடுத்து வந்து வழிபட அவனது தீராத வயிற்று வலி மறைந்தது. பின் இறைவன் ஆணைப்படி இத்தலம் வந்து சுயம்பு லிங்கமாக எழுந்தருளி இருக்கும் இத்தல ஈசனுக்கு அருகில் அம்பாளையும் பிரதிஷ்டை செய்து வழிபட்டான். இந்தப் புராண வரலாற்றை ஆதாரமாகக் கொண்டு இன்றும் தீராத வயிற்று வலியால் அவதிப்படுவர்கள் இத்தல இறைவனை வணங்கி வழிபட்ட்டால் பலன் கிடைக்கும் என்று பக்தர்கள் நம்புகின்றனர்.
திருஞானசம்பந்தர் பாடிய இத்தலத்திற்கான பதிகம் 3-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. தனது பதிகத்தில் இத்தல இறைவனை வணங்கித் துதிக்கத் துன்பங்கள் தொடராது, அத்துன்பங்களுக்குக் காரணமான, அநுபவித்துக் கழிந்தவை போக எஞ்சியுள்ள வினைகளும் அழிந்துபோகும், சிவபெருமானை மனத்தால் நினைந்து போற்ற எக்காலத்தும் அழியாத புகழ் வந்து சேரும், சிவபெருமானை மெய்யுணர்வால் தொழுது போற்றுபவர்களைச் செல்வம் வந்தடையும்,. அவர்கள் எந்தவித குறைவும் இல்லாமல் இருப்பார்கள், மேலும் அவர்களிடம் செம்மையான சிவஞானம் உண்டாகும், இத்தல இறைவனை வணங்கிப் போற்ற, அவர்களை நோய்கள் வந்து அணுகாது என்று பலவிதமாகப் போற்றிப் பாடியுள்ளார்.
Top