Shiva temples of Tamilnadu

தேவார பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்
பாடல் பெற்ற தலம் கோவில் விபரங்கள் தமிழ்நாடு வர ஆலோசனைகள்

தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்தென்திருமுல்லைவாசல்
இறைவன் பெயர்முல்லைவன நாதர், யூதிகாபரமேஸ்வரர்
இறைவி பெயர்அணிகொண்ட கோதை, சத்யானந்த சௌந்தரி
பதிகம்திருஞானசம்பந்தர் - 1
எப்படிப் போவது சீர்காழியில் இருந்து 14 கி.மீ. தொலைவில் வங்கக் கடலோரம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. சீர்காழியில் இருந்து நகரப் பேருந்து வசதிகள் இருக்கின்றன.
ஆலய முகவரிஅருள்மிகு முல்லைவன நாதர் திருக்கோவில்
திருமுல்லைவாசல்
திருமுல்லைவாசல் அஞ்சல்
வழி சீர்காழி
சீர்காழி வட்டம்
மயிலாடுதுறை மாவட்டம்
PIN - 609113

இவ்வாலயம் தினந்தோறும் காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும். ஆலய குருக்கள் வீடு அருகில் இருப்பதால் அவரை தொடர்பு கொண்டு எந்நேரமும் தரிசிக்கலாம்.

ஆலய அர்ச்சகர் ஆத்மநாத குருக்கள் கைபேசி: 94863 39538
Tirumullaivayil route map

சீர்காழியில் இருந்து திருமுல்லைவாசல் செல்லும் வழி வரைபடம்
Map courtesy by: Google Maps

திருமுல்லைவாயில் என்ற பெயரில் இரண்டு பாடல் பெற்ற சிவஸ்தலங்கள் இருக்கின்றன. இவற்றை வேறுபடுத்திக் காட்ட தொண்டை நாட்டில் உள்ள சிவஸ்தலம் வடதிருமுல்லைவாயில் என்றும், காவிரியின் வடகரையில் சீர்காழிக்கு அருகில் உள்ள சிவஸ்தலம் தென்திருமுல்லைவாசல் என்றும் குறிப்பிடப்படுகின்றன.

தல வரலாறு: முதலாம் கிள்ளி வளவன் என்ற சோழ மன்னன் சரும நோயால் மிகவும் வேதனைப்பட்டான். நோய் தீரவேண்டுமானால் சிவத்தலம் ஒன்றில் உள்ள தீர்த்தத்தில் நீராட வேண்டுமென அரண்மனை வைத்தியர்கள் கூற, அதன்படி இத்தலத்தற்கு அருகிலுள்ள கடலில் நோய் தீருவதற்காக தன் பரிவாரங்களுடன் நீராட வந்தான். அப்போது இந்த பகுதி முழுவதும் முல்லை கொடிகளாக இருந்தது. எனவே இவர்கள் வந்த குதிரையின் குளம்பு முல்லை கொடிகளில் சிக்கிக் கொண்டது. அதற்கு மேல் குதிரைகளால் நகர முடியவில்லை. முல்லைக் கொடிகளை கிள்ளிவளவன் வாளால் வெட்டும் போது, அதன் கீழேயிருந்த சுயம்பு மூர்த்தியின் மீது பட்டு ரத்தம் பெருகியது. அதிர்ச்சியடைந்த மன்னன் ஏதோ ஒரு உயிரை வெட்டி விட்டோமே என பார்க்க, அங்கே லிங்கம் ஒன்று ரத்தம் வழிய காட்சியளித்தது. மன்னன் தன் தவறுணர்ந்து தன் கழுத்தை அறுத்துக் கொள்ள முயல்கையில் இறைவன் ரிஷபாரூடராய்க் காடசி தந்ததாகத் தல வரலாறு கூறுகிறது. லிங்கத்தில் வாளால் வெட்டுப்பட்ட காயத்தழும்பை இன்றும் காணலாம்.

திருமுல்லைவாசல் ஒரு கடற்கரைத் தலம். உப்பனாற்றின் வடகரையில் இத்தலம் அமைந்துள்ளது. ஆலயத்திற்கு இராஜகோபுரமில்லை. ஒரு முகப்பு வாயில் மட்டுமே உள்ளது. முகப்பு வாயிலைக் கடந்தவுடன் நேரே பலிபீடம், கொடிமரம், நந்தி மண்டபத்தைக் காணலாம். ஒரு பிராகாரத்துடன் விளங்கும் இவ்வாலயத்தின் இறைவன் முல்லைவனநாதர் மூன்றரை அடி உயரத்தில் பெரிய சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இவருக்கு மாணிலாமணி ஈஸ்வரர், யூதிகா பரமேஸ்வரர் என்ற பெயர்களும் உண்டு. உள் பிராகரத்தில் வரசக்தி விநாயகர், வள்ளி தெய்வானையுடன் கூடிய ஷண்முக சுப்பிரமணியர், தட்சிணாமூர்த்தி, பைரவர், திருஞானசம்பந்தர் ஆகிய சந்நிதிகள் உள்ளன. தட்சிணாமூர்த்தியின் திருவுருவம் மிக அழகாக உள்ளது. ஆலயத்தின் தலவிருட்சம் முல்லை. தீர்த்தம் பிரம்ம, சந்திர தீர்த்தங்கள். பஞ்சாட்சர மந்திரம் பற்றி அறிந்து கொள்ள இங்குள்ள முல்லைவன நாதரை அம்மன் வழிபட்டதால், சிவபெருமான் குருவாக இருந்து அம்மனுக்கு உபதேசித்தார். எனவே இத்தலத்தில் சிவன் குருவாக வீற்றிருக்கிறார். உமாதேவி வழிபட்டுத் தட்சிணாமூர்த்தியிடம் ஐந்தெழுத்து உபதேசம் பெற்ற தலமாதலால் இங்கு பள்ளியறையும், பூஜையும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. சூரிய, சந்திர கிரகணம், அமாவாசை காலங்களில் இங்கு வந்து பஞ்சாட்சர மந்திரத்தை ஜெபிப்பவர்களுக்கு மறு பிறப்பில்லை என்பது ஐதீகம்.

இத்தலத்தில் வாயு திசையிலுள்ள கிணற்றில் கங்கை நித்திய வாசம் செய்கிறாள். அக்னி திசையிலுள்ள பிரம்ம தீர்த்தத்தில் மூழ்கி சந்திரன் தனக்கிருந்த நோயைப் போக்கிக் கொண்ட தலம் இதுவாகும்.

தல வரலாற்றை விளக்கும் சிற்பம்

திருஞனசம்பந்தர் பாடியருளிய இத்தலத்திற்கான பதிகம் 2-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது.

Top
முல்லைவன நாதர் ஆலயம் புகைப்படங்கள்
ஆலயத்தின் முகப்பு வாயில்
நந்தி மண்டபம், பலிபீடம்
முல்லைவன நாதர் சந்நிதி வாயில்
அணிகொண்ட கோதை சந்நிதி வாயில்
ஷண்முக சுப்பிரமணியர்
சனகாதி முனிவர்களுடன் கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி