தகவல் பலகை | |
---|---|
சிவஸ்தலம் பெயர் | திருமங்கலக்குடி |
இறைவன் பெயர் | பிராண நாதேஸ்வரர் |
இறைவி பெயர் | மங்களநாயகி, மங்களாம்பிகை |
பதிகம் | திருநாவுக்கரசர் - 1 திருஞானசம்பந்தர் - 1 |
எப்படிப் போவது | கும்பகோணம் - மயிலாடுதுறை சாலை வழியிலுள்ள ஆடுதுறை அடைந்து அங்கிருந்து திருப்பனந்தாள் செல்லும் சாலையில் சுமார் 2 கி.மீ. தொலைவில் திருமங்கலக்குடி சிவஸ்தலம் இருக்கிறது. |
ஆலய முகவரி | அருள்மிகு பிராணவரதேஸ்வரர் திருக்கோவில் திருமங்கலக்குடி திருமங்கலக்குடி அஞ்சல் திருவிடைமருதூர் வட்டம் தஞ்சாவூர் மாவட்டம் PIN - 612102 இவ்வாலயம் காலை 6-30 மணி முதல் 12-30 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8-30 மணி வரையிலும் திறந்திருக்கும். |
ஆடுதுறையில் இருந்து திருமங்கலக்குடி செல்லும் வழி வரைபடம்
Map courtesy by: Google Maps
"பஞ்ச மங்களத் தலம்" என்று சிறப்பித்துப் போற்றப்படுவது திருமங்கலக்குடி திருத்தலம். ஊரின் பெயர் மங்கலக்குடி, அம்பாள் பெயர் மங்களாம்பிகை, இக்கோவில் விமானம் மங்கள விமானம், இத்தல விநாயகரின் பெயர் மங்கள விநாயகர், இத்தல தீர்த்தம் மங்கள தீர்த்தம் ஆகிய ஐந்தும் இத்தலத்தில் அமைந்திருப்பதாலேயே இந்தத் திருப்பெயர் ஏற்பட்டது. கிழக்கு திசை நோக்கியுள்ள ஐந்து நிலைகளுடன் கூடிய ராஜகோபுரத்துடனும், இரண்டு பிரகாரங்களுடனும் இவ்வாலயம் அமைந்துள்ளது. இத்தலத்தின் தல விருட்சம் வடமொழியில் கோங்கிலவம் எனப்படும் வெள்ளெருக்கு மரம். முன்மண்டபத்தில் அம்பாள் மங்களநாயகியின் சந்நிதி தெற்கு நோக்கி அமைந்துள்ளது. கருவறையில் கோவில் கொண்டிருக்கும் சிவபெருமான் நீண்டுயர்ந்த பாண வடிவில் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். சந்திரசேகரர், மயில் வாகனர், நால்வர், பிரதோஷ நாயகர் உற்சவ மூர்த்திகள் உள்ளனர். கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, ரிஷபாரூடர், பிரம்மா, துர்க்கைக்கு சந்நிதிகள் உள்ளன. உள் சுற்றில் விநாயகர், ஆறுமுகர், கஜலட்சுமி, பைரவர் சந்நிதிகளும், நடராஜ சபையும் உள்ளன. இரண்டு நடராஜ உற்சவ மூர்த்தங்கள் இங்கு காணப்படுவது சிறப்பு. ஒருவர் ஆனித் திருமஞ்சன நாளிலும் மற்றொருவர் ஆருத்ரா தரிசன நாளிலும் திருவீதி உலா வருகின்றனர்.
இத்தலத்து இறைவியை வழிபட, திருமணத் தடை நீங்கும்; மாங்கல்ய பலம் நீடிக்கும், ஆயுள், ஆரோக்கியம், ஐஸ்வர்யம் கிட்டும் என்பது பக்தர்களின் அனுபவம். கார்த்திகை மாத முதல் ஞாயிறு தொடங்கி, தொடர்ந்து 12 ஞாயிற்றுக் கிழமைகள் - தயிர் சாதத்தை வெள்ளெருக்கு இலையில் வைத்து சுவாமிக்கு நிவேதனம் செய்து அதை உண்ண, நோய் குணமடைவதாகக் கூறப்படுகிறது. இவ்வாறு செய்து பிணிகள் விலகியோர் பலருண்டு. இத்தலத்தில் ஞாயிறு மதியம் உச்சிகால பூஜையில் தயிர் சாதம் பிரசாதமாக வெள்ளெருக்கு இலையில் தரப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமைகளில் தயிர்சாதம் அன்னதானம் செய்வதால் அஷடமச்சனி, 7 1/2 ஆண்டுச்சனி, தசாபுக்தி தோஷம் ஆகியவை நிவர்த்தியாகும். மங்களநாயகியின் திருக்கரத்தில் இருக்கும் மாங்கல்ய சரடு பெண்களுக்கு பிரசாதமாக தரப்படுகிறது. மங்காளம்பிகைக்கு 5 வெள்ளிக்கிழமைகள் அர்ச்சனை செய்து வழிபட்டால் மாங்கல்ய தோஷம், களத்திர தோஷம் ஆகியவை நீங்கப்பெற்று தீரக்க சுமங்கலி பிராப்தமும், விரைவில் விவாக பிராப்தமும் கிடைக்க அம்பாள் அருள் புரிவாள். மேலும் இத்திருக்கோவிலுள்ள அகத்தீஸ்வரர் லிங்கத்திற்கு அமாவாசை தினத்தில் அபிஷேகம் செய்வதால் பூர்வ ஜன்ம தோஷம், பித்ருக்கள் சாபம் நிவர்த்தியாகும்.
சூரியன், திருமால், காளி, பிரம்மன், அகத்தியர் முதலானோர் இத்தலத்துக்கு வந்து இறைவனை வழிபட்டுப் பேறு பெற்றதாகத் தலபுராணம் கூறுகிறது. திருநாவுக்கரசர் தான் பாடிய இத்தலத்திற்கான பதிகத்தில் 3-வது பாடலில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மங்கலக்குடி ஈசனை மாகாளி வெங்கதிர்ச் செல்வன் விண்ணொடு மண்ணும் நேர் சங்குசக்கரதாரி சதுர்முகன் அங்கு அகத்தியனும் அர்ச்சித்தார் அன்றே. இப்பாடலின் பொழிப்புரை : மங்கலக்குடி இறைவனை மாகாளியும், சூரியனும், விண்ணும் மண்ணும் நிகராய சங்கு, சக்கரதாரியாகிய திருமாலும், பிரமனும், அகத்தியனும் அர்ச்சித்தார்கள்.
தல வரலாறு: பதினோராம் நூற்றாண்டைச் சேர்ந்த முதலாம் குலோத்துங்க சோழன் காலத்தில், அலைவாணர் என்பவர் அமைச்சராக இருந்தார். அவர் அரசனின் அனுமதி பெறாமல் வரிப் பணத்தை தான் வசிக்கும் திருமங்கலக்குடியில் சிவபெருமானுக்கு ஆலயம் எழுப்பச் செலவிட்டார். இதையறிந்த மன்னன் அவரை அழைக்க, அமைச்சரோ மன்னனைக் காண அஞ்சி உயிர் நீத்தார். இறக்கும்போது அவர் தனது மனைவியிடம் "நான் இறந்தவுடன் என் உடலை திருமங்கலக்குடிக்கு எடுத்துச் சென்று அங்கேயே அடக்கமும் செய்ய வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார். அவ்வாறு அவரது இறந்த உடலை எடுத்துச் செல்லும்போது, அமைச்சரின் மனைவி இறைவி மங்களாம்பிகையிடம் மாங்கல்ய பாக்கியம் அருளப் பிரார்த்தனை செய்தாள். ஊர் எல்லையருகே வந்ததும் உயிரற்ற மந்திரியின் உடல் மீண்டும் உயிர் பெற்று எழுந்தது. அனைவரும் திகைத்துப் போய் நிற்க, அமைச்சர் தான் எழுப்பிய சிவபெருமான் ஆலயத்திற்குச் சென்று, "பிராணனைக் கொடுத்த பிராண நாதா" என்று போற்றி வழி பட்டார். அன்று முதல் பிராணனைக் கொடுத்ததால் இறைவன் அருள்மிகு பிராணநாதேஸ்வரர் என்றும், மந்திரியின் மனைவி மாங்கல்யம் பெற்றதால் இத்தல அம்பிகை மாங்கல்யம் கொடுத்த அருள்மிகு மங்களாம்பிகையென்றும் போற்றப்படுகின்றனர். அப்போது அமைச்சரின் மனைவி தங்களுக்குக் காட்சி தந்த பிராணநாதர் மற்றும் மங்களாம்பிகையிடம், "எங்களுக்கு வரம் அளித்தபடி, இந்த ஆலயத்துக்கு வந்து வழிபடும் என் போன்ற மற்ற பெண்களுக்கும் மாங்கல்ய பாக்கியம் அருள வேண்டும்" என்று வேண்ட அவ்வாறே அருளினர். அதன்படி மாங்கல்ய தோஷத்தையும் நீக்கி சுமங்கலி பிராப்தம் தந்தருளும் திருத்தலமாக திருமங்கலக்குடி விளங்குகிறது.
நவக்கிரக தோஷங்களை நீக்கும் தலமாகவும் திருமங்கலக்குடி விளங்குகிறது. நவக்கிரக நாயகர்கள் இத்தல இறைவனையும், இறைவியையும் வணங்கி தங்களது சாபம் நீங்கப் பெற்றதாக புராண வரலாறு கூறுகிறது. காலவ முனிவர் எனபவர் தன் ஜாதகத்தை ஆராய்ந்து பார்த்த போது தனக்கு தொழுநோய் வர இருப்பதை உணர்ந்தார். நவக்கிரகங்களை வழிபட்டால் அந்த நோயிலிருந்து விடுபடலாம் என்றுணர்ந்து நவகிரகங்களை நோக்கி கடும் தவம் மேற்கொண்டார். முனிவரின் தவத்திற்கு இரங்கி நவகிரகங்கள் அவருக்கு காட்சி தந்து முனிவரை தொழுநோய் தாக்காதிருக்க வரமும் அளித்தனர். நவகிரங்களின் இந்த செயலை அறிந்த பிரம்மா கோபம் கொண்டார். நவகிரகங்களுக்கு வரம் கொடுக்கும் உரிமை கிடையாது என்றும், முற்பிறவியில் அனைத்து உயிர்களும் செய்த பாவ புண்ணியத்தின் பலனை மட்டுமே அவர்கள் தர வேண்டும் என பணித்திருந்தும் காலவ முனிவருக்கு தொழுநோய் தாக்காத வரம் அளித்ததால் நவகிரங்களுக்கு தொழுநோய் எற்பட்டு வருந்தும்படி பிரம்மா சாபமிட்டார். பின்பு நவகிரகங்கள் பிரம்மா கூறியபடி திருமங்கலக்குடி அருகே உள்ள வெள்ளெருக்கு காட்டில் (இவ்விடம் தற்போது சூரியனார்கோவில் என்று வழங்குகிறது) கார்த்திகை மாத முதல் ஞாயிறு முதல் 12 ஞாயிற்றுக்கிழமைகள் அங்குள்ள ஒன்பது தீர்த்தத்தில் நீராடி, பின் திங்களன்று காவிரியில் நீராடி பிராணநாதேஸ்வரரையும், மங்களநாயகியையும் வழிபட்டு, பிறகு வெள்ளெருக்கு இலையில் தயிர் சாதம் புசித்து தங்களின் சாபம் நீங்கி விமோசனம் பெற்றனர்.
நவக்கிரகங்கள் தங்கள் பாவங்களை இப்புண்ணிய தலத்து இறைவனை வழிபட்டுப் போக்கிக் கொண்டமையால், நவக்கிரக கோவில்களுக்குத் தரிசனம் செய்யச் செல்லுவோர், இத்தலத்து ஸ்ரீபிராணநாதேஸ்வரரையும் இறைவி மங்களாம்பிகையையும் முதலில் தரிசித்த பின்னரே சூரியனார் கோவில் சென்று வழிபட வேண்டுமென்பது நியதி!
Top