Shiva temples of Tamilnadu

தேவார பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்
பாடல் பெற்ற தலம் கோவில் விபரங்கள் தமிழ்நாடு வர ஆலோசனைகள்

தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்திருந்துதேவன்குடி (தற்போது நண்டாங் கோயில் என்று வழங்குகிறது)
இறைவன் பெயர்கற்கடேஸ்வரர், தேவதேவேசர்
இறைவி பெயர்அருமருந்துநாயகி, அபூர்வநாயகி
பதிகம்திருஞானசம்பந்தர் - 1
எப்படிப் போவது கும்பகோணத்திற்கு அருகிலுள்ள திருவியலூர் என்ற மற்றொரு பாடல் பெற்ற சிவஸ்தலத்தில் இருந்து 2 கி.மீ. தொலைவில் திருந்துதேவன்குடி சிவஸ்தலம் இருக்கிறது. கும்பகோணத்திலிருந்து திருவிசநல்லூர் செல்ல நகரப் பேருந்து வசதி உண்டு. திருவிசநல்லூரில் இருந்து நடந்தோ அல்லது ஆட்டோ மூலமோ கற்கடேஸ்வரர் கோவில் சென்று வரலாம்.
ஆலய முகவரிஅருள்மிகு கற்கடேஸ்வரர் திருக்கோவில்
நண்டாங்கோவில்
திருந்துதேவன்குடி
திருவிசலூர் அஞ்சல்
கும்பகோணம் வட்டம்
தஞ்சாவூர் மாவட்டம்
PIN - 612105

இவ்வாலயம் காலை 8-30 மணி முதல் மாலை 6-30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

தற்போது நண்டாங் கோவில் என்று அறியப்படும் இத்தலம் தேவார காலத்தில் திருந்துதேவன்குடி என்று அழைக்கப்பட்டது. கடக ராசிக்காரர்கள் வழிபட வேண்டிய கோவில் கற்கடேஸ்வரர் ஆலயம் ஆகும். தல புராணப்படி உமாதேவி ஒரு சமயம் கைலாயத்தில் இருந்து இத்தலத்திற்கு வந்து நண்டு உருவத்தில் இறைவனை வழிபட்டாள். கோவிலைச் சுற்றி உள்ள அகழியில் இருந்த நீரில் பூத்துக் குலுங்கிய தாமரை மலர்களால் இறைவனை அர்ச்சித்து வழிபட்டு வந்தாள். தேவேந்திரனும் அதே சமயம் இத்தலத்து இறைவனை வழிபட்டு வந்தான். அகழியில் தன்னால் பயிரடப்பட்ட தாமரை மலர்களை நண்டு கொண்டு வந்து இறைவனுக்கு சாத்தி வழிபடுகிறதே என்று கோபம் கொண்டான். நண்டு உருவத்தில் இறைவனை வழிபடுவது பார்வதி தேவியே என்று அறியாத இந்திரன் லிங்கத்தின் மீதேறி தாமரை மலர்களைச் சாத்த முயன்ற நண்டை கத்தியால் வெட்ட முயன்றான். முதல் வெட்டு தாடையில் விழுந்தது. அடுத்த வெட்டு சிவபெருமானின் நெற்றியில் விழுந்தது. நண்டு உருவில் இருந்த உமாதேவியைக் காப்பாற்ற நினைத்த சிவபெருமான் லிங்கத் திருமேனியில் உச்சியில் ஒரு துவாரத்தை ஏற்படுத்தி நண்டு உருவில் இருந்த சக்தியை தன்னுடன் ஐக்கியப்படுத்திக் கொண்டார். உண்மையை உணர்ந்த இந்திரன் தன் தவறுக்கு வருந்தி திருந்தினான். எனவே இக்கோவிலுக்கு திருந்துதேவன்குடி என்ற பெயர் வந்ததாக தலபுராணம் கூறுகிறது. நண்டு சிவனை வழிபடும் சிற்பம் ஒன்று கோவிலில் உள்ள ஒரு கற்தூணில் செதுக்கப்பட்டு உள்ளது.

இத்தலத்திற்கு வேறு ஒரு வரலாறும் கூறப்படுகிறது. முன்னொரு காலத்தில் துர்வாச முனிவர் கடும் தவம் செய்து கொண்டிருந்தார். அந்த இடத்திற்கு வந்த கந்தர்வன் ஒருவன் துர்வாசர் சிவபூஜை செயுது கொண்டு இருந்ததை பரிகாசம் செய்தான். துர்வாசர் கோபம் கொண்டு சிவபூஜையை பரிகசித்த நீ நண்டாகக் கடவாய் என்று சாபமிட்டார். கந்தர்வன் பயம் கொண்டு துர்வாசரிடம் சாப விமோசனம் கேட்டான். அதற்கு துர்வாசர் அவனை பூலோகத்தில் திருந்துதேவன்குடி தலத்தில் அகழியில் பூக்கும் தாமரை மலர் கொண்டு சிவபூஜை செய்து வந்தால் விமோசனம் கிடைக்கும் என்று கூறினார். நண்டு வடிவில் இருந்த கந்தர்வனும் அவ்வாறே சிவபூஜை செய்து வந்தான். தேவேந்திரனும் அதே சமயம் இத்தலத்து இறைவனை வழிபட்டு வந்தான். அகழியில் தன்னால் பயிரடப்பட்ட தாமரை மலர்களை நண்டு கொண்டு வந்து இறைவனுக்கு சாத்தி வழிபடுகிறதே என்று கோபம் கொண்டான். நண்டைக் கொல்ல முயன்றான். நண்டைக் காப்பாற்ற நினைத்த சிவபெருமான் லிங்கத் திருமேனியில் உச்சியில் ஒரு துவாரத்தை ஏற்படுத்த, நண்டு உருவிலுள்ள கந்தர்வன் அதனுள் புகுந்து சாப விமோசனம் பெற்றான்.

கற்கடேஸ்வரர் லிங்கத் திருமேனியில் இன்றும் வெட்டுத் தழும்புகள் இருக்கின்றன. சிவலிங்கத்தின் உச்சியில் ஒரு துவாரம் உள்ளது. ஆடி அமாவாசையும் பூர நட்சத்திரமும் கூடிய நேரத்தில் 21 குடம் காராம்பசு பாலைக் கொண்டு இரவில் சிவலங்கத்தை அபிஷேகித்தால் நண்டு வெளிப்பட்டு காட்சி கொடுக்கும் என்று வசிஷ்ட மகாத்மியம் கூறுகிறது. டாக்டர் உ.வே. சாமிநாத அய்யர் ஒரு நிறப்பசுவின் பால் பத்து கலம் அபிஷேகம் செய்தால் லிங்கத்தின் உச்சியில் ஒரு பொன்னிற நண்டு ஊர்தல் தரிசனம் ஆகும் என்று சொல்லியிருக்கிறார்.

கோவில் அமைப்பு: கோவில் நான்கு புறமும் நெல் வயல்கள் சூழ அமைந்துள்ளது. அருகில் ஊர் எதுவும் இல்லை. கோவில் மதிற்சுவரைச் சுற்றி கிழக்கு திசை தவிர மற்ற மூன்று புறமும் நீர் நிறைந்த அகழி உள்ளது. திருவிசநல்லூரில் இருந்து கற்கடேஸ்வரர் கோவில் வரை செல்ல நல்ல சாலை வசதி உள்ளது. முதலில் செங்கல்லால் கட்டபட்டு பிறகு கற்கோவிலாக திருப்பணி செய்யப்பட்ட இக்கோவில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. முதல் கட்டமாக ஒரு நுழைவாயிலும், இரண்டாம் கட்டமாக ஒரு கோபுரமும் வாயிலும் கொண்டு இக்கோவில் விளங்குகிறது. முதல் வாயில் வழியாக உள்ளே நுழைந்தவுடன் வீநாயகர், பலிபீடம் மற்றும் நந்தி ஆகியவற்றைக் காணலாம். முன் மண்டபத்தில் தெற்கு நோக்கிய அருமருந்துநாயகி, அபூர்வநாயகி ஆகிய இரண்டு அம்பாள் சந்நிதிகள் தெற்கு நோக்கி அமைந்துள்ளன. அம்பாள் அருமருந்து நாயகிக்கு அபிஷேகம் செய்து தரப்படும் தீர்த்தத்தை உட்கொண்டால் வியாதிகள் தீர்கின்றன என்று நம்பப்படுகிறது. கோவிலில் இந்த அபிஷேக தீர்த்தம் விலைக்கு விற்கப்படுகிறது.

இரண்டாம் கட்ட கோபுர வாயில் வழியாக உள்ளே சென்றவுடன் கருவறையில் இறைவன் கற்கடேஸ்வரர் கிழக்கு நோக்கி காணப்படுகிறார். கருவறை மேற்கு உட் பிரகாரத்தில் கணபதி, முருகர் மற்றும் கஜலட்சுமிக்கு சந்நிதிகள் அமைந்துள்ளன. கருவறை கோஷ்டத்தில் தென்திசை நோக்கி தட்சினாமூர்த்தியும் வடதிசை நோக்கி துர்க்கையும் உள்ளனர். நால்வர் சந்நிதியும் உட் பிரகாரத்தில் உள்ளது. தன்வந்தரி, அகஸ்தியர் ஆகியோரும் சுற்றுப் பிரகாரத்தில் உள்ளனர்.

சந்திரனால் ஏற்படும் தோஷங்கள் நீங்க வழிபட வேண்டிய தலம் திருந்துதேவன்குடி தலமாகும். அநேகமாக எல்லா சிவாலயங்களிலும் சந்திரனுக்கு தனி சந்நிதி இருக்கும். சந்திரன் நின்ற நிலையில் காணப்படுவார். இத்தலத்தில் மட்டும் சந்திரன் அமர்ந்த நிலையில், யோக நிலயில் இருக்கிறார். எல்லா வகையான யோகங்களும் கிடைக்க வழிபட வேண்டிய தோஷ பரிகார சந்திரன் இவர். குறிப்பாக கடகராசிக்காரர்கள் (புனர்பூசம், பூசம், ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்) இக்கோவிலுக்கு வந்து வழிபட்டால் அனைத்து தோஷங்களில் இருந்து நிவாரணம் பெறலாம்.

சம்பந்தர் இத்தலத்து இறைவன் மேல் பாடிய பதிகம் 3-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது.

Top
கற்கடேஸ்வரர் ஆலயம் புகைப்படங்கள்
Moolavar Karkadeswararமூலவர் கற்கடேஸ்வரர்
Temple entranceகிழக்கிலுள்ள முதல் நுழைவாயில்
நண்டு சிவனை வழிபடும் சிற்பம்
Aboorva Nayagi shrineஅபூர்வ நாயகி சந்நிதி
Arumarundu Nayagi shrineஅருமருந்து நாயகி சந்நிதி
Murugar with His consortsவள்ளி தெய்வானையுடன் முருகர்
காலபைரவர் மற்றும் சூரியன்
தன்வந்தரி மற்றும் அகஸ்தியர்
கோவில் தீர்த்தம்