சண்டேசுவர நாயனார் வரலாறு: 63 நாயன்மார்களில் முதண்மையான இடத்தைப் பெற்ற சண்டேசுவர நாயனாரின் அவதார தலம் சேய்ஞலூர். இத்தலத்தில் எச்சதத்தன் என்ற வேதியருக்கும் பவித்திரைக்கும் மகனாக பிறந்தவர் விசாரசருமன். இவன் தன் இளம் வயதில் அனைத்தும் கற்றான். ஏழாவது வயதில் குல முறைப்படி உபநயனம் நடந்தது. சிவனே அனைத்தும் என நினைத்து அதன்படி வாழ்ந்து வந்தான்.அப்பகுதி அந்தணர்களின் பசுக்களை விசாரசருமன் தானே மேய்த்து வந்தான். தாயன்புடன் இவன் மேய்த்ததால் அதிக பால் கொடுத்தது. விசாரசருமன் எப்போதும் சிவசிந்தனையிலேயே இருந்ததால், மண்ணியாற்றங்கரையில் வெண் மணலால் ஆத்திமர நிழலின் கீழ் சிவலிங்கம் செய்து வழிபட்டு வந்தான். அதற்கு பசுக்கள் சொரியும் பாலை அபிஷேகம் செய்தான். இருந்தாலும் பசுவின் சொந்தக்காரருக்கு சரியான அளவு பால் கிடைத்து வந்தது. விசாரசருமரின் இந்த செயலை பார்த்த சிலர், வேள்விக்கு உபயோகப்படுத்தும் பாலை வீணாக்குவதாக கூறினர். இவனது தந்தையும் இதை கேள்விப்பட்டு, மறைந்திருந்து நடப்பதை பார்த்தார். இதையெல்லாம் அறியாத விசாரசருமன் எப்போதும் போல் நீராடி விட்டு தன் பூஜைகளை தொடர்ந்தான். பசுவின் பாலால் அபிஷேகமும் செய்தான். இதைப்பார்த்த தந்தை அவனை அடித்ததுடன், பால்குடங்களையும் தன் காலால் தட்டி விட்டார். சிவ பூஜையில் ஆழ்ந்திருந்த விசாரசருமன், பூஜைக்கு இடையூறு செய்தவரை ஒரு கோலால் தாக்க, அதுவே மழுவாக மாறி எச்சதத்தரின் கால்களை வெட்டியது. கால்கள் வெட்டப்பெற்றவர் தன் தந்தை என்பதை அறியாத விசாரசருமன் மீண்டும் சிவபூஜையில் ஆழ்ந்தான். இதைக்கண்ட சிவபெருமான் பார்வதியுடன் தரிசனம் தந்து, "என் மீது கொண்ட பக்தியால் தந்தையின் கால்களை வெட்டினாய். இனி நானே உனக்கு தந்தையாவேன்", என்று கூறி தன் கழுத்திலிருந்த கொன்றை மாலையை விசாரசருமனுக்கு சூட்டி "சண்டிகேஸ்வரர்" ஆக்கினார். விசாரசருமன் சிவபூஜை செய்து முக்தி பெற்ற திருஆப்பாடி தலம் சேய்ஞலூரிலிருந்து சற்று தொலைவில் உள்ளது. 63 நாயன்மார்களில் ஈஸ்வரப் பட்டம் பெற்றவர் இவரே.
சூரனை அழிப்பதற்காக வந்த முருகப்பெருமான் இத்தலத்தில் சிவபெருமானை வழிபட்டு சர்வசங்காரப் படைக்கலத்தை, உருத்திர பாசுபதத்தை பெற்றார். சேய் என்பது முருகனைக் குறிக்கும். சேய்க்கு நல்லதாக அமைந்த ஊராதலின் சேய் + நல் + ஊர் = சேய்ஞலூர் என்று பெயர் பெற்றது. சேய்ஞலூர் தலத்தின் சிறப்பைப் பற்றி கந்தபுராணத்தில், வழிநடைப் படலத்தில் விரிவாக கூறப்பட்டுள்ளது. முருகனுக்கு இத்தலத்தில் பெரிய தனி சன்னதி உள்ளது.
கோயில் அமைப்பு: கோச் செங்கட்சோழன் கட்டிய மாடக்கோயில்களில் இதுவும் ஒன்றாகும்., கோயில் கட்டுமலை மேல் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. கர்ப்பக்கிருகத்தைச் சுற்றிலும் மலைமேல் ஒரு பிராகாரமும், சுற்றிக் கீழே ஒரு பிராகாரமும் உள்ளன. கட்டுமலை மீது மேலே மூலஸ்தானம், அர்த்த மண்டபம், மகா மண்டபம் ஆகியவை உள்ளன. மகா மண்டபத்தில் நடராஜர், தட்டினால் வெங்கல ஒலி கேட்கும் பைரவர், நால்வர் சன்னதிகள் உள்ளன. கருவறை சுற்றுப் பிரகாரத்தில் விநாயகர், சுப்பிரமணியர், கஜலட்சுமி, சண்டேஸ்வரர் சன்னதிகள் உள்ளன. சண்டேசுவரரின் திருமுடியில் பிறை, சடை, குண்டலம், கங்கையுள்ளன. நாயனாருக்குக் காட்சி தந்த சிறப்பைக் குறிக்கும் வகையில் இவ்வாறு அமைந்திருப்பது தனிச்சிறப்பாகும். மூலவர் சத்தியகிரீஸ்வரர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். கட்டுமலைக்குக் கீழே அம்பாள் ஆலயம் தெற்கு நோக்கிய சந்நிதியாகவுள்ளது.
சோழர்களின் முக்கிய ஐந்து நகரங்களுள் சேய்ஞலூர் தலமும் ஒன்று. வைணவத்தில் நாலாயிர திவ்விய பிரபந்தத்திற்கு உரை எழுதிய பெரியவாய்ச்சான் பிள்ளை அவதார தலம் இது. எதிரே இவருக்கு கோயில் உள்ளது.
திருஞானசம்பந்தர் இத்தலத்து இறைவன் மேல் பாடியருளிய பதிகம் முதலாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. சண்டேசுவர நாயனார் வரலாற்றைப் பற்றி தனது பதிகத்தின் 7-வது பாடலில் சம்பந்தர் குறிப்பிடுகிறார். சண்டேஸ்வரர் அவதாரஸ்தலம் என்று சம்பந்தர் சுவாமிகள் சிவிகையினின்றும் இறங்கி நடந்து சென்று இத்தல இறைவனை வழிபட்டார் என்று பெரிய புராணம் கூறும்.
7. பீரடைந்த பாலது ஆட்டப் பேணாது அவன்தாதை வேரடைந்து பாய்ந்த தாளை வேர்த்தடிந்தான் தனக்குத் தாரடைந்த மாலைசூட்டித் தலைமை வகுத்த்து என்னே சீரடைந்த கோயில்மல்கு சேய்ஞலூர் மேயவனே. பொழிப்புரை : சிறப்புமிக்க மாடக் கோயிலாய் விளங்கும் திருச்சேய்ஞலூரில் விளங்கும் இறைவனே! பசுவின் முலைக் காம்பின் வழிச்சுரந்து நின்ற பாலைச் சண்டீசர் மணலால் தாபித்த இலிங்கத்துக்கு ஆட்டி வழிபட, அதனை விரும்பாது சினந்து பாற்குடத்தை இடறிய தன் தந்தையின் காலைத் தடிந்த சண்டீசரின் பக்தியை மெச்சி உன் தாரையும் மாலையையும் சூட்டி அவரைச் சிவகணங்களின் தலைவர் ஆக்கியது ஏனோ?