தகவல் பலகை | |
---|---|
சிவஸ்தலம் பெயர் | திருக்கொட்டையூர் |
இறைவன் பெயர் | கோடீஸ்வரர் |
இறைவி பெயர் | பந்தாடு நாயகி, கந்துக க்ரீடாம்பாள் |
பதிகம் | திருநாவுக்கரசர் - 1 |
எப்படிப் போவது | கும்பகோணம் - திருவையாறு சாலையில் கும்பகோணத்தில் இருந்து 4 கி.மீ. தொலைவில் சுவாமிமலை செல்லும் வழியில் திருக்கொட்டையூர் இருக்கிறது. கும்பகோணத்தில் இருந்து சுவாமிமலை செல்லும் நகரப் பேருந்து கொட்டையூர் வழியாகச் செல்கிறது. சாலையோரத்திலேயே கோயில், ஊர் உள்ளது. |
ஆலய முகவரி | அருள்மிகு கோடீஸ்வரர் திருக்கோயில் கொட்டையூர் மேலக்காவேரி அஞ்சல் கும்பகோணம் வட்டம் தஞ்சாவூர் மாவட்டம் PIN - 612 002 திருக்கோவில் காலை 6 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை மணி 4 முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும். |
ஆமணக்கு கொட்டைச் செடியின் கீழ் சுயம்பு மூர்த்தியாக லிங்கம் வெளிப்பட்டதால் ஊர் கொட்டையூர் என்று பெயர் பெற்றது. சோழ மன்னனுக்கும் ஏரண்ட முனிவருக்கும் கோடிலிங்கமாகக் காட்சி தந்தமையால் கோடீஸ்வரர் என்று சுவாமிக்கும் கோடீச்சரம் என்று கோயிலுக்கும் பெயர் வந்தது. ஏரண்டம் என்றால் ஆமணக்கு கொட்டைச்செடியைக் குறிக்கும். அதன் கீழிருந்து தவம் செய்தமையால் அம்முனிவர் ஏரண்டமுனிவர் என்று பெயர் பெற்றார். இத்தலத்திற்கு வில்வாரண்யம், ஏரண்டபுரம் என்றும் வேறு பெயர்கள் உண்டு. ஊர் மக்களிடம் கோடீஸ்வரர் கோயில் என்று பெயர் சொல்லிக் கேட்டால் மக்கள் எளிதில் கோயிலைக் காட்டுகிறார்கள். இத்தலத்தில் மார்க்கண்டேயர் இறைவனை வழிபட்டுள்ளார். பத்திரயோகி முனிவருக்கு இறைவன் கோடிவிநாயகராக, கோடி அம்மையாக, கோடி முருகனாக, கோடி தம் திருவுருவாகக் காட்சி தந்ததால் இறைவன் கோடீஸ்வரர் எனப்பட்டார்.
கோயில் அமைப்பு: கிழக்கு நோக்கிய ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் இவ்வாலயம் விளங்குகிறது. பிராகாரத்தில் விநாயகர், முருகன், மகாலட்சுமி சந்நிதிகள் உள்ளன. இறைவன் கோடீஸ்வரர் சுயம்பு லிங்க உருவில் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். மூலவர் மீது பாணம் முழுவதிலும் கொட்டை கொட்டையாக - ஆமணக்குச் செடியின் காய் காய்த்த மாதிரி காணப்படுகிறது. இத் தலத்தில் புண்ணியம் செய்தாலும் பாவஞ் செய்தாலும் கோடி மடங்காகப் பெருகும் என்பது நம்பிக்கை. இங்குப் பாவஞ் செய்தால் கோடி மடங்காகப் பெருகுவதால் அதற்குக் கழுவாயே இல்லாமற் போகும் என்பதை "கொட்டையூரிற் செய்த பாவம் கட்டையோடே" என்னும் பழமொழியால் அறியலாம். திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் ஐந்து மூர்த்திகளையும் காண்போர் வேறு தலங்களில் கோடித் திருவுருவம் கண்ட பயனைடவர். இங்குச் செய்த எப்புண்ணியமும் பிற தலங்களிற் செய்த புண்ணியங்களினும் கோடி மடங்கு பயன் தருமென்று தல புராணம் கூறுகிறது. இத்தலத்திலுள்ள நவக்கிரக சந்நிதி மண்டபம் சிறப்பானது. இக் கோயிலில் உள்ள நவக்கிரகங்கள் தங்களுக்குரிய வாகனங்களுடன், மண்டலம் பொருந்தி குடையுடன் அருமையாகக் காட்சி தருகின்றனர். இக்கோவிலின் தீர்த்தங்கள் காவிரியாறு, அமுதக்கிணறு எனகிற கோடி தீர்த்தம் என்பவை. அமுதக்கிணறு கோயிலின் முதல் பிரகாரத்தில் உள்ளது. தல விருட்சமாக ஆமணக்கு கொட்டைச் செடி உள்ளது.
இத்தலத்து முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது ஒரு பாடல் உள்ளது. உட்பிரகாரத்திலுள்ள முருகப் பெருமான கோடி சுப்பிரமணயர் என்ற பெயருடன் உள்ளார். இவர் ஒரு திருமுகத்துடனும் நான்கு திருக்கரங்களுடனும் தனது தேவியர் இருவருடன் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். கோவிலின் நுழைவாயிலில் தண்டாயுதபாணி சந்நிதி உள்ளது.
அம்பாள் பந்தாடு நாயகியின் சந்நிதி தெற்கு நோக்கி உள்ளது. அம்பாள் சிலையின் ஒரு கால் பந்தை உதைப்பது போன்ற தோற்றத்தில் உள்ளது. செய்த பாவங்களை தன் காலால் எட்டி உதைத்து அருள்செய்பவள் என்ற பொருளில் இவ்வாறு சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது என்று கூறலாம். விளையாட்டில் ஆர்வம் கொண்டவர்கள் முன்னேற இந்த அம்மனை வழிபட்டுச் செல்வது வழக்கம். இங்குள்ள அமுதக்கிணறு தீர்த்தத்தை தலையில் தெளித்துக் கொண்டால் புறத்தூய்மை மட்டுமின்றி அகத்தூய்மையும் கிடைப்பதாகவும் மேலும் கல்வி, அறிவு, ஒழுக்கம் ஆகியவற்றை இந்த தீர்த்தம் தருவதாக நம்பிக்கை.
காவிரி நதி திருவலஞ்சுழியில் வலம் சுழித்துச் செல்கிறது. அவ்வாறு வலம் சுழித்துச் சென்ற காவிரியில் இருந்து வெளிப்பட்ட ஆதிசேஷனால் ஒரு பெரிய பிலத்துவாரம் (பள்ளம்) ஏற்பட்டது. பாய்ந்து வந்த காவிரியாறு ஆதிசேஷன் வெளிப்பட்ட பள்ளத்தில் பாய்ந்து பாதாளத்தில் இறங்கி விட்டது. அது கண்ட சோழமன்னன் கவலையுற்றுத் திகைத்தபோது, அசரீரியாக இறைவன், "மன்னனோ மகரிஷியோ இறங்கி அப்பாதாளத்தில் பலியிட்டுக் கொண்டால் அப்பிலத்துவாரம் மூடிக்கொள்ளும். அப்போது காவிரி வெளிப்படும்" என்றருளினார். அதுகேட்ட மன்னன் கொட்டையூர் என்ற இந்த ஊரில் ஏரண்டம் என்னும் கொட்டைச் செடிகள் அடர்ந்து வளர்ந்துள்ள இடத்தில் தவம் செய்த ஏரண்ட முனிவரையடைந்து அசரீரி செய்தியைச் சென்னான். இதைக் கேட்ட ஏரண்ட முனிவர் நாட்டுக்காகத் தியாகம் செய்ய முன்வந்தார். அவர் அந்த பிலத்துவாரத்தில் இறங்கி தன்னைப் பலி கொடுக்கவும் பள்ளம் மூடிக்கொள்ள காவிரி வெளி வருகிறாள். இந்த ஏரண்ட முனிவருக்கு (ஆத்ரேய மகரிஷி) கோடீஸ்வரர் கோவிலில் தனி சந்நிதி உள்ளது. ஆத்ரேய கோத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபடவேண்டிய தலம்.
திருநாவுக்கரசர் இயற்றியுள்ள இத்தலத்திற்கான பதிகம் 6-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. இப்பதிகம் திருக்கொட்டையூர் மற்றும் திருவலஞ்சுழி (காவிரி தென்கரைத் தலம்) ஆகிய இரண்டு பாடல் பெற்ற சிவஸ்தலங்களுக்கும் பொதுவானது.
Top