தகவல் பலகை | |
---|---|
சிவஸ்தலம் பெயர் | திருஇன்னாம்பர் |
இறைவன் பெயர் | எழுத்தறிநாதர், ஐராவதேஸ்வரர் |
இறைவி பெயர் | சுகந்த குந்தளாம்பிகை, சௌந்தர நாயகி |
பதிகம் | திருநாவுக்கரசர் - 4 திருஞானசம்பந்தர் - 1 |
எப்படிப் போவது | கும்பகோணத்தில் இருந்து சுவாமிமலைக்குச் செல்லும் சாலை வழியில் இருக்கும் புளியஞ்சேரி என்னும் ஊருக்கு வடக்கே திருப்புறம்பயம் போகும் வழியில் சுமார் 8 கி.மீ. தூரத்தில் இந்த சிவஸ்தலம் இருக்கிறது. இங்கிருந்து 3 கி.மீ. தொலைவில் திருப்புறம்பியம் என்ற பாடல் பெற்ற ஸ்தலம் உள்ளது. கும்பகோணத்தில் இருந்து திருப்புறம்பியம் செல்லும் நகரப் பேருந்துகள் இத்தலம் வழியாக செல்கின்றன. |
ஆலய முகவரி | அருள்மிகு எழுத்தறிநாதர் திருக்கோயில் இன்னாம்பர் இன்னாம்பர் அஞ்சல் கும்பகோணம் வட்டம் தஞ்சாவூர் மாவட்டம் PIN - 612303 இவ்வாலயம் தினந்தோறும் காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும். |
கும்பகோணத்தில் இருந்து இன்னாம்பர் இருப்பிடத்தைக் காட்டும் வரைபடம்
Map courtesy by: Google Maps
காவிரியின் வடகரையிலுள்ள இத்தலம் ஒரு பாஸ்கர ஷேத்திரமாக விளங்குகிறது. அம்பர் என்றால் ஆகாயத்தைக் குறிக்கும். ஆகாயத்தில் வலம் வரும் சூரியன் இழந்த தன் ஆற்றலைப் பெற வேண்டி இத்தல இறைவனை பூஜித்துள்ளான். சூரியன் பூஜித்ததால் இத்தலம் இன்னம்பர் என்று பெயர் பெற்றது. பங்குனி மாதம் 13, 14, 15 தேதிகளில் சூரிய ஒளி காலையில் சிவலிங்கத் திருமேனி மீது படுகின்றது. இதனை சூரியபூஜை என்று கொண்டாடுகின்றனர்.
தேவேந்திரனின் வாகனமான ஐராவதம் என்ற வெள்ளை யானை இஙுகுள்ள தடாகத்தில் நீராடி இறைவனை வழிபட்டு தன் சாபத்தைப் போக்கிக் கொண்டதால் இங்குள்ள தீர்த்தம் ஐராவத தீர்த்தம் என்றும் இறைவன் ஐராவதேஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார். இத்தல இறைவனை சூரியன், சந்திரன், ஐராவதம் என்ற யானை, அகஸ்திய முனிவர் ஆகியோர் வழிபட்டுள்ளனர். தல விருட்சமாக பலாமரமும், சணபக மரமும் உள்ளன.
அகஸ்திய முனிவர் இத்தல இறைவனிடம் தமிழ் இலக்கணம் பயின்றதாக தல புராணம் கூறுகிறது. மேலும் இப்பகுதியை ஆண்டு வந்த மன்னனிடம் கணக்கராக பணியாற்றி வந்தார் சுதஸ்மன் என்ற ஆதிசைவர். கோவில் கட்டுமானப் பணிகளை மேற்பார்வை செய்து வந்த இவரிடம் ஒரு முறை அரசன் வரவு செலவு கணக்குகளைப் பற்றி விசாரித்தான். அரசரிடம் கணக்கை ஒப்படைத்தார் சுதஸ்மன். கணக்கில் அரசருக்கு ஐயம் ஏற்பட்டது. தன் மீது வீண் பழி வருமோ என்று கவலைப்பட்ட சுதஸ்மன் இத்தல இறைவனிடம் வேண்டினார். ஈசன் சுதஸ்மன் உருவில் மன்னரிடம் சென்று மன்னருக்கு கணக்கில் ஏற்பட்ட ஐயத்தைப் போக்கினார். அதனாலேயே இத்தல இறைவனுக்கு எழுத்தறிநாதர் என்ற பெய்ரும் ஏற்பட்டது.
குழந்தைகளுக்கு சிறு வயதில் பள்ளியில் சேர்ப்பதற்கு முன் வித்யாரம்பம் செய்ய இத்தலத்திற்கு பக்தர்கள் வருகிறார்கள். இறைவன் சந்நிதி முன் நெல்லைப் பரப்பி அதில் எழுதுவதைத் தொடங்குவார்கள். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்க இத்தல இறைவனை வழிபடுவது நல்ல பலனைத் தரும்.
கோவில் அமைப்பு: ஆலயம் கிழக்கு நோக்கிய 5 நிலை இராஜகோபுரத்துடன் விளங்குகிறது. கோபுர வாயில் வழியாக உள்ளே நுழைந்தவுடன் விசாலமான கிழக்கு வெளிப் பிரகாரத்தைக் காணலாம். இங்கு முதலில் நாம் காண்பது விநாகயரையும் அதன் பின் உள்ள நந்தி மண்டபம். இத்தலத்தில் கொடிமரம் இல்லை. இந்த கிழக்கு வெளிப் பிரகாரத்தில் வலதுபுறம் தெற்கு தோக்கிய சந்நிதியில் அம்பாள் சுகந்த குந்தளாம்பிகை எழுந்தருளியுள்ளாள். இந்த அம்பாளே பிரதான அம்பாளாகும். மற்றொரு அம்பாள் சந்நிதியும் இங்குள்ளது. அம்பாளின் பெயர் நித்யகல்யானி என்கிற சௌந்தர நாயகி.
நந்தி மண்டபத்திற்கு பின்னாலுள்ள இரண்டாவது நுழைவாயிலைக் கடந்து உள்ளே சென்றால் இத்தல இறைவன் எழுத்தறிநாதர் அருட்காட்சி தருகிறார். மூலவர் பெரிய நீண்டுயர்ந்த பாணத்துடன் கம்பீரமாகக் காட்சி தருகின்றார். இறைவன் சந்நிதி விமானம் கஜப்பிரஷ்ட அமைப்புடையது. கோஷ்ட மூர்த்தங்களாக தட்சிணாமூர்த்தி, காட்சிகொடுத்த நாதர், பிரம்மா, துர்க்கை ஆகியோர் காணப்படுகின்றனர். பாலசுப்பிரமணியருக்கு தனி சந்நிதி உள்ளது. கல்லில் உருவாக்கப்பட்ட நடராஜர் சிலையும் கோஷ்டத்தில் உள்ளது. அழகான பைரவர் மூர்த்தமும் காண வேண்டிய ஒன்றாகும்.
Top